Pages

மூலிகை மருத்துவம் - ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால்

சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.
நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், விளையாட போதுமான இடமின்மை மற்றும் குறுகிய மனப்பாங்கு காரணமாக, இது போன்ற விளையாட்டுகள் குறைந்து, தொலைக்காட்சி, கணினி என்று பூட்டிய அறைக்குள் விளையாடுவதே, பல குழந்தைகளின் உடல் பருமனுக்கும், எதிர்காலத்தில் தோன்றும் மூட்டுவலிக்கும், முக்கியமான காரணம்.
நமது பாட்டி, தாத்தாக்களின் உடல் வலிமை நமக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். பல பெண்கள் நாற்பது வயதிலேயே பெண் தன்மையை இழந்து வருவதும், ஆண்கள், கழுத்துவலி, முதுகுவலி என்று அலுத்துக் கொண்டிருப்பதும் அதிகரித்து வருவதற்கு உடற்பயிற்சி இன்மையும், மூட்டுகளை சூழ்ந்திருக்கும தசை, தசைநார் மற்றும் சவ்வுகளின் வலிமை குறைவதுமே காரணம். இளம் பிராயத்தில் விளையாடாததால் தான், பிற்காலத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று, பல மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது.
முழங்கால் மூட்டில் ஏற்படும் பாதிப்பினாலும் சவ்வில் ஏற்படும் வீக்கம் மற்றும் திரவ பற்றாக்குறையினாலும், முழங்கால்வலி உண்டாகிறது. பெண்களுக்கு நொண்டி, பாண்டி, கயிறு தாண்டுவது, கயிறு இழுப்பது போன்றவற்றால், முழங்கால் மூட்டு தசைகள் பலமடைவதுடன், கருப்பை கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.
ஆண்கள், சிலம்பம், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிட்டிப்புல் போன்றவற்றால், மூட்டுகள் நன்கு சுழன்று, திரும்பி வேலை செய்வதுடன், ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, போதுமான அளவு சுண்ணாம்பு சத்து சேர்ந்து, எலும்புகளின் பலம் அதிகரிக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு, நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை தான் முடவாட்டுக்கால்.
டிரைனேரியா குர்சிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாலிபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன.
இவற்றின் வேர்கிழங்குகள் முடவாட்டுக்கால் என்ற பெயரில் கொல்லிமலைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.
முடவாட்டுக்கால் கிழங்கு 250 கிராம் வாங்கி, நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.
முடவாட்டுக்கால், அரைத்த மசாலா, வதக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.
இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சை முறை: சிறிய அளவிலான சிறுநீர்ப்பை அழற்சிக்கு, வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ள சிறுநீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக்கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

தெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா! இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.
மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன்  சத்தும், பங்கனப்பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா...? பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா! தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.... மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஹையா ஜாலி! ஆய்வுகளே சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.
100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி  70 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட்  17.00 கிராம்
சர்க்கரை        14.08 கிராம்
நார்ச்சத்து           1.08 கிராம்
கொழுப்பு           0.27 கிராம்
புரதம்              0.51 கிராம்
வைட்டமின்        38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன்    445 மைக்ரோ கிராம்
தையாமின்
(வைட்டமின் பி)      0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின்
(வைட்டமின் பி2)     0.057 மில்லி கிராம்
நியாசின்
(வைட்டமின் பி3)     0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக்
அமிலம் (பி5)         0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6       0.134 மில்லி கிராம்
போலேட்
(வைட்டமின் பி9)      14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி        27.7 மில்லி கிராம்
கால்சியம்             10 மில்லி கிராம்
இரும்புச் சத்து         0.13 மில்லி கிராம்
மக்னீசியம்            9 மில்லி கிராம்
பாஸ்பரஸ்             11 மில்லி கிராம்
பொட்டாசியம்         156 மில்லி கிராம்
துத்தநாகம்            0.04 மில்லி கிராம்

உயிரின் கதை - 5(உயிரிகளின் திடீர்த் தோற்றம்)

உயிரிகளின் திடீர்த் தோற்றம்
"உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். (10:20)"
"எல்லா உயிர்களிலும் விதை அதுவோ அது நான். (10:39)"
"பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன. (14:3)"
"நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன், ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை எல்லாம் வளர்க்கிறேன். (15:12)"
"நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன். (15:14)"
"எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்தே பிறக்கின்றன. (15:15)"
"எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கையில் உள்ளவனாகிய மனது பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது. (15:7)"
"மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம் இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது. (7:4)"
"எல்லா உயிர்களுக்கும் அது காரணம் என்று உணர். அதனால் நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன். (7:6)"
"நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது. (7:7)"
"மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான் (7:9). எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதை என்று உணர். (7:10)"
"நைந்த துணிகளைக் கழற்றி எறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல ஆத்மா நைந்த துணிகளைக் களைந்து விட்டு புதியனவற்றை எய்துகிறான். (As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones.) - 2:22"
"இவனை ஆயுதங்கள் வெட்டமாட்டா: தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது. (The soul can never be cut to pieces by any weapon, nor burned by fire, nor moistened by water, nor withered by the wind.) - 2:23"
"பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான். (This individual soul is unbreakable and insoluble, and can be neither burned nor dried. He is everlasting; present everywhere, unchangeable, immovable and eternally the same.) - 2:24"
2010_02_27_vrindavan_0669
பகவத் கீதையின் மேற்கண்ட தமிழ் வரிகளுக்குச் சொந்தக்காரர் சுப்பிரமணிய பாரதியார். [ஆங்கில வரிகளை எழுதியவர் பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதா என நினைக்கிறேன்.] தடிமனான வார்த்தைகளைக் கவனித்தால் ஆங்கிலத்தில் He/soul அவன்/ஆத்மா என்ற வார்த்தைகள் மாறி வருவதையும் ஒரே பொருளில் வழங்குவதையும் காணலாம். மொழிபெயர்ப்பு வேறுபாடு என்பதைத் தாண்டி இன்னும் ஆழமாக இதை யோசித்துப்பார்க்கலாம்.
-o0OOO0o-
"நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். (2:28)"
"மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களைக் கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (24:45)"
"மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான். (26:81)"
"அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். (40:68, 44:8, 45:26)"
"வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (57:2)"
"எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று; அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய். (2:258)"
"வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக்காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:164, குர்ஆன்)"
namaz11ch0
-o0OOO0o-
"அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று (1:11). பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. (1:12)"
"பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். (1:20) தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார். (1:21) பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதி ஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. (1:24) தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார். (1:25)"
"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்(1:27). தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (2:7, ஆதியாகமம், பழைய ஏற்பாடு)."
prayer
-o0OOO0o-
உயிர் என்றால் என்ன, உயிரிகள் எவ்வாறு தோன்றின என்ற கேள்வியை வரலாறு வழி சொல்வதைத் தாண்டி, மத நூல்களை அல்லது கடவுள் நம்பிக்கையை ஆராய்வதோ விமர்சிப்பதோ இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. உயிர் என்றால் என்ன என்ற கேள்வியை ஆன்மீக, தத்துவ நோக்கில் விளங்கிக் கொள்ள சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே மேற்கண்ட வரிகள். இவற்றை முழுதும் வாசிக்க பின்னிணைப்பில் வரும் மூல நூல்களைப் பார்க்கவும். கட்டுரையின் நீளம் கருதி புத்த, சமண, சீக்கிய மற்றும் இதர நூல்களில் வரும் உயிர் பற்றிய சிந்தனைகளையும் இங்கு சேர்க்கவில்லை. இவையெல்லாம் ஆன்மீக நோக்கில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. அன்றாடமும் இந்நூல்களை ஆழ்ந்து கற்கும் அறிஞர்கள் மட்டுமே அதற்குத் தகுதியுடையவர்கள்.
ஒரு மனிதன் இறந்த பிறகு உடல் இருக்கிறது. உயிர் என்ன ஆகிறது, எங்கே போகிறது? என்ற கேள்விக்குப் பல ஆன்மீக விளக்கங்கள். முழுமையான பதில் இல்லை என்றாலும் ஒரு தர்க்கத்திற்காக இப்படியும் யோசித்துப்பார்க்கலாம். ஒரே அளவிலான ஆறு சதுர மரப்பலகைகள் மற்றும் கொஞ்சம் ஆணிகள். சுத்தியலால் அடித்து இவைகளை வைத்து ஒரு பெட்டி செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆணியால் பிணைக்கப் படுவதன் மூலம் மரப்பலகைகள் ஒரு சதுரப் பெட்டியாக மாறி விடுகின்றன. இங்கே இருப்பது பெட்டிதான், பலகைகள் அல்ல.
இப்போது ஆணிகளைப் பிடுங்கி எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெட்டி வெறும் பலகைகளாகப் பிரிந்து விடுகிறது. அப்படியானால் பெட்டி என்ன ஆனது? எங்கே போனது?
பெட்டி எங்கும் போய்விடவில்லை. இதோ இங்கேதான் இருக்கிறது, பலகைகளின் வடிவில். ஆனால் பலகை பெட்டியாக இருப்பதை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். உயிர் பற்றி நவீன உயிரியல் தரும் விளக்கம் ஏறக்குறைய இதுவே.
-o0OOO0o-
நம் உடலிலே உயிர் எங்கே இருக்கிறது என்ற கேள்வியைத்தான் நானும் சின்னப் பையனாக காய்ச்சல் வந்து வீட்டில் தனியாகப் படுத்திருந்தபோது ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆஸ்பத்திரியில் ஊசி போடப்போன டாக்டர் மாமாவிடம் கேட்டபோது, "இதயத்துக்குள், வலது ஓர மூலையில், ஆவி ரூபத்தில்!" சொல்லிவிட்டு தாம்பூலத்தை எடுத்து வாயில் போட்டு குதப்பிக்கொண்டே சிரிஞ்சில் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தார். வழக்கம் போல அவர் சீர்காழி கோவிந்தராஜனின் பாடலை உரக்கப் பாடாததால் அறையில் மயான அமைதி. பயந்து கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "அப்ப ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது வெளியே போய்டாதா?" என்றேன்.
மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தி மூக்கின் நுனியில் விட்டு குனிந்து சில வினாடிகள் முறைத்தவர் திடீரென முகவாயை உயர்த்தி தாம்பூலத்தைத் தாடையில் சேகரித்துக் கொண்டு, "இண்ட மாதிரி கேழ்வி கேட்டே, அண்ட கைழயும் ஊழ்ஷி போட்டுருவேன்!" என்று சொல்லி விட்டு சுருக் என்று ஊசியைக் குத்தினார். "ஆஸ்பத்திரிக்கு வந்த எடத்துல என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேச்சு?" என்றாள் பாட்டி. வலித்த கையைத் தேய்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்து விட்டேன்.
-o0OOO0o-
இனப்பெருக்கம் வழி அன்றி உயிரற்ற பொருள்களிருந்தும் உயிரிகள் 'திடீரென' தோன்ற முடியும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவும் ஒன்று. மரத்தில் சாறுண்ணும் பேன்கள் (aphids) மூங்கில் மரத்திலிருந்து தோன்றுகின்றன என்று பண்டைய சீனர்கள் நம்பினர். நைல் நதியின் சேற்றுப் படுக்கையிலிருந்து ஈல் மீன்களும் தவளைகளும் தானாகவே தோன்றுகின்றன என்ற நம்பிக்கை எகிப்து மக்களிடமிருந்தது. புராதான பாபிலோனிய ஏடுகளில் 'கால்வாயின் சேறு தானாகவே புழுக்களை ஜனிக்கும் வல்லமை படைத்தது' என்ற குறிப்பு காணக் கிடைக்கிறது. 'ஈக்கள் தூசியிலிருந்தும் வியர்வையிலிருந்தும் தானாகவே உருவாகின்றன' என்று இந்தியத் தத்துவ நூல் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளது. அது எந்த தத்துவ நூல் என்று தெரிந்து எழுதும் வாசக நண்பர்களுக்கு அந்த ஆங்கிலக் கட்டுரையின் pdf பிரதி பரிசு!
உயிரிகள் உயிரற்ற பொருள்களிலிருந்து தானாகவே தோன்ற முடியும் என்ற கருத்து அதாவது 'உயிரிகளின் திடீர்த் தோற்றம்' (spontaneous generation theory) பண்டைய கிரேக்கத் தத்துவவாதிகளான தேல்ஸ், எபிகுரஸ், டெமாக்ரடஸ், லுக்ரிடியஸ், பிளாட்டோ உள்பட பலராலும் முன்வைக்கப்பட்டது. இக் கருத்துகளையெல்லாம் யோசித்துத் தொகுத்து கி.மு. 350-களில் அரிஸ்டாட்டில் 'விலங்குகளின் வரலாறு' (History of animals, Latin Historia Animālium) என்ற தலைப்பில் ஒரு தனிப் புத்தகமாகவே எழுதினார். "விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் பொதுவான ஒரு பண்பு ஒன்று உண்டு. சில தாவரங்கள் எப்படி விதையிலிருந்து தோன்றுகின்றனவோ அதே போல விதையைப் போன்ற விதை அல்லாத சில அடிப்படைக் கூறுகளிலுருந்தும் உண்டாகின்றன. அதைப் போலவே சில விலங்குகள் பெற்றோர்கள் வழியாகவும் பூச்சிகளைப் போன்ற சில உயிரிகள் அழுகிய தாவரக்கழிவுகளிலிருந்தும் உண்டாகின்றன." என்பது போன்ற தகவல்களை இந்நூலில் காணலாம்.
முட்டம், கன்னியாகுமரி போன்ற கடலோர மற்றும் மீன் பண்ணை உள்ள ஊர்க்காரர்களிடம் இதைச் சொன்னால் நம்மை அடிக்காமல் விடமாட்டார்கள். நெத்திலி மீன்கள் (anchovy) கடல் நுரையிலிருந்து உண்டாகி வளர்கின்றன என்று நம்பினார் அத்தினயுஸ் என்ற கிரேக்க அறிஞர். அரிஸ்டாட்டிலோ விலாங்கு மீன்கள் (eel) உண்டாவது மண்புழுவிலிருந்துதான் என்று நம்பினார்!
உயிரிகள் மற்றும் இப்பிரபஞ்சமே பஞ்சபூதங்களால் ஆகியது என்று இந்தியத் தொல் நூல்களில் உள்ளது யாவரும் அறிந்ததே. தந்தையின் விந்திலிருந்து வரும் ஆன்மா தாயின் தொகுக்கப் படாத பொருளுடன் கலந்து கரு உண்டாகி வளர்கிறது என அரிஸ்டாட்டில் நம்பினார். உயிரற்ற பொருள்களில் 'உயிர்மூச்சு (அல்லது) உயிர்ச்சூடு' (pneuma or vital heat) பஞ்ச பூதங்களுள் இணைந்து உட்புகுவதன் மூலம் உயிரிகள் உருவாக முடியும் என்பது அரிஸ்டாட்டிலின் நம்பிக்கை. அழுகிய வைக்கோலிலிருந்து எலிகள் உண்டாவதும், நீர்நிலையின் அழுகிய மரக்கட்டைகளிலிருந்து முதலைகள் உண்டாவதும் எவரும் கண்டு அறியத்தக்க உண்மைகளே என்று நம்பினார் அவர். அரிஸ்டாட்டிலின் 'உயிர் வழியில்லாப் பிறப்புக்கொள்கை' கடல் கடந்து பரவி வரை நியூட்டன், பேகன் உட்பட 17-ஆம் நூற்றாண்டின் ஏறக்குறைய எல்லா முக்கிய சிந்தனையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 1605-களில் எழுதப்பட்ட ஷேக்ஸ்பியரின் 'அந்தோனியும் கிளியோபாட்ராவும்' என்ற துன்பியல் நாடகத்தில் கூட 'நைல் நதியின் சேற்றிலிருந்து சூரிய ஒளியால் பாம்பும் முதலையும் உண்டாவது' பற்றிய ஒரு குறிப்பைக் காண முடியும்.
1630-களில் அழுக்குச்சட்டை மற்றும் கோதுமை ஆகியவற்றிலிருந்து எலிகள் தோன்றுகின்றன என்றும், அவை இனப்பெருக்கம் மூலம் உருவான எலிகளை அப்படியே அச்சு அசலாக ஒத்திருக்கின்றன என்றும் ஆச்சரியப்பட்டு, தன் கண்டுபிடிப்பை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் வான் ஹெல்மாண்ட் என்ற பெல்ஜியத்துக்காரர். அதுவரையிருந்த புரிதல்களைப் புரட்டிப் போட்டு, நவீன உயிரியலின் அடிப்படையையே தீர்மானித்த முக்கியமான சம்பவங்கள் இதற்குப் பிறகு நிகழ்ந்தன.
(இன்னும் வரும்)

உதவியவை & மேலும் படிக்க:
1. Bhagvad Gita, http://www.bhagavad-gita.us/
2.
மகாகவி பாரதியார், பகவத் கீதை, தமிழ்இந்து.காம் வெளியீடு
3. Aristotle, The History of Animals, Translated by D'Arcy Wentworth Thompson http://classics.mit.edu/Aristotle/history_anim.html
4. King James Bible: http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=2
5. குர்ஆன், http://www.tamililquran.com/
6. What Buddhists Believe: http://www.buddhanet.net/pdf_file/whatbelieve.pdf
7. Shakespeare, Anthony and Cleopatra (Folio 1, 1623) http://internetshakespeare.uvic.ca/Library/Texts/Ant/F1/Scene/2.7
8. The Molecular Origins of Life Edited by Andre Brack, Introduction http://assets.cambridge.org/97805215/64755/excerpt/9780521564755_excerpt.pdf
----------------
வேணுகோபால் தயாநிதி
நன்றி-சொல்வனம்