உயிரின் கதை - 4(இந்திய ஞானம் - சில குறிப்புகள்)

இந்திய ஞானம் - சில குறிப்புகள்
இந்திய, கிரேக்க தத்துவங்களுக்கு பல சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உண்டு. நிறையச் சொல்லலாம் என்றாலும் சுருக்கமாகச் சில: 1) பிளாட்டோ சொன்ன ந்யூமா(pneuma) இந்தியத் தத்துவத்தில் பிராணா(prana) என்று சொல்லப்பட்டுள்ளது. 2) உலகம் பஞ்ச பூதங்களால் ஆகியது என்பதும் நம் வேதங்களில் உள்ளது, உயிர்/ ஆன்மா (atman) அழிவற்றது என்பதை கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். இதையே பிளாட்டோவும் சொல்லியிருக்கிறார். 3)Animisiam என்று அறியப்படும் கிரேக்க சிந்தனை இந்து ஞானமரபில் 'சாங்கியம்(Sankya)' அதாவது 'ஆதி இயற்கை வாதம்' என்று அறியப்பட்டுள்ளது. 4) ஹிப்போகிரடெஸ் சொன்ன வாதம், பித்தம், கபம் போன்ற விஷயங்கள் ஏற்கனவே நம் சம்ஹிதைகளில் இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. 5) நம்மூர் பௌத்தாயனர் எழுதிய சுலபசூத்ரா(Baudhayana Sulbasutras)வில் வரும் சூத்திரங்களும் பித்தாக்ரஸின் தேற்றத்தை விவரிக்க கிரேக்கத்தின் ஜுக்லிட் (Euclid) பயன்படுத்திய கணித விளக்கங்களும் ஒத்துள்ளன என்பதை சைய்டன்பர்க் (Seidenberg) என்ற பேராசிரியர் தன் ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். வேதங்கள், புராணங்கள், சம்ஹிதைகள், பௌத்தாயன சுலபசூத்ரா ஆகியவை முறையே பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போகிரடெஸ் பித்தாக்ரஸ் ஆகியோரின் காலத்துக்கும் முந்தியவை என்பது இதில் முக்கியமான விஷயம்.
இந்திய-கிரேக்க தத்துவத்தின் ஒற்றுமைக்கு மூன்று வகையான விளக்கங்கள்: 1) இந்திய மற்றும் கிரேக்கத் தத்துவத்தின் வேர் இரண்டு நாடுகளுக்கும் வெளியே, மத்திய ஆசியாவில் உள்ளது என்பது ஆராய்சியாளர்களுள் ஒரு சாரார் சொல்வது. 2) கடல் கடந்து சென்ற வணிகர்கள், சிந்தனையாளர்கள் வழி இந்திய கிரேக்க தத்துவங்கள் பரிமாறப் பட்டு வளர்ந்தன என்பது இன்னொரு சாரார் சொல்வது. ஹரப்பா காலத்திலேயே (கி.மு. 1700–1300) இந்தியாவுக்கும் மேற்குக்கும் வியாபாரப் போக்குவரத்துகள் இருந்தன என்பதும், கிரேக்கத் தத்துவ வரலாற்றில் முக்கிய புராதான ஊரான மைலிடஸ் (Miletus) ஆசிய கடல் போக்குவரத்தின் முக்கியத்தடமாகவும் கிரேக்கத்தின் ஆசிய வணிக மையமாகவும் இருந்தது என்பதும் ஆதாரங்கள். அலெக்ஸாண்டருடன் வந்த கிரேக்க வரலாற்று ஆய்வாளர்கள் ஆப்கானிஸ்தானில் கிரேக்க தேசத்தவர்கள் வசித்ததைப் பதிவு செய்தது போலவே, தெற்கு எகிப்தில் கெய்ரோவுக்கு 20 மைல் தொலைவில் நைல் நதிக்கரையின் மேற்குக் கரையில் அமைந்த மெம்பிஸ்(Memphis) என்ற ஊரில் இந்தியர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன(1979-ம் ஆண்டு முதல் மெம்பிஸை உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவித்து யுனெஸ்கோ பேணி வருகிறது). 3) ஒரே மாதிரியான சிந்தனைகள் தனித்தனியே இரு நாடுகளிலும் தோன்றின என்பது மூன்றாவது தரப்பு.
"வரலாற்றைத் தீர்மானிப்பது அதை எழுதுபவர்கள்தான்" என்று ஒரு ஜோக் உண்டு. இன்று பல்கலைகளில் பாட நூல்களாக உள்ள வரலாற்று, தத்துவ நூல்களை எழுதியவர்களுள் பெருவாரியானவர்கள் கீழைத் தத்துவங்களை ஐரோப்பாவின் கண்களோடு பார்த்த கனவான்கள் என்பது கீழைத் தத்துவங்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டம். அரிஸ்டாட்டில் தனி ஆளாக புத்தகங்களை எழுதிக் கொண்டிருந்த கி. மு 350 களில் பீகாரின் பாட்னா நகருக்கு 55 மைல் தென்கிழக்கில் 1500 ஆசிரியர்களும் 10,000 மாணவர்களும் கொண்ட நாளந்தா என்ற ஒரு சர்வதேச பல்கலைக் கழகமே நம் நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது என்ற உண்மையை நினைத்துப் பார்த்தால், மேற்க்கண்டவற்றுள் கடைசி இரண்டு தரப்புகளை தைரியமாக நம்பலாம். இதையெல்லாம் ஒரு அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டினால் தான் நாமே நம்புவோம் என்பதுதான் கி.பி.2011-ம் ஆண்டின் துரதிருஷ்டம். இதில் எளியேனும் அடக்கம்.
முதல் கட்டுரையில் சிவவாக்கியரின் வரிகளை 'கொடுமை' என்றும் இரண்டாம் கட்டுரையில் டெமக்ரடீஸ் வரியை 'அமேஸிங்' என்றும் ஆங்கிலத்தில் வியந்து தொலை பேசினார் எக்ஸ். "அடுத்த வாரம் ஊருக்கு வரும்போது நாளந்தா யுனிவர்சிட்டிக்குப் போகணும், எப்படிப் போவது என்று விசாரித்து வையும்" என்று நான் சொன்னபோது எதிர் முனையில் முறுக்கு கடிபடும் ஒலி. தொடர்ந்து "அதுவா பக்கத்துல தான் இருக்கு' என்று பதில் வந்தபோதே நான் சுதாரித்திருக்க வேண்டும். கிளம்பிச் சென்று நேரில் பார்த்தபோது " யெஸ். பைக்லயே போயிடலாமே" என்று சீட்டியடித்தவாறே கூலிங்கிளாஸ் சகிதம் கிளம்பலானார். பாட்னாவுக்கு எப்படி பைக்கில் போவது என்று நான் குழம்பியபோது "ஓல்டு யுனிவர்ஸிட்டி கேம்பஸ் தான" என்றார் எக்ஸ் சாவதானமாக.
nalanda-university-big
வாழ்நாளில் ஒருமுறையாவது நாளந்தாவைச் சென்று காணும் பாக்கியம் வாய்க்க அங்கு விசிட்டிங் புரபஸராக இருந்த புத்தரும் நாகார்ஜுணரும் அருள வேண்டும். இதுவரை நாளந்தாவைப் பார்க்காதவர்கள் ஜெயமோகன் அவர்களின் பயணக்குறிப்பையும், நாளந்தா பற்றிய குறும்படத்தையும் பார்க்கலாம்.
-o00o-
வேதங்களின் தத்துவ விசாரங்கள் மற்றும் இந்து ஞானமரபு முழுதையும் ஜெயமோகன் 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்' நூலில் தெளிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். தத்துவங்களைத் தவிர்த்து இந்து ஞான மரபில் உடல், உயிர் பற்றிய குறிப்புகளை மட்டும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
உடல், உயிர் பற்றிய இந்திய சிந்தனை ரிக் வேதத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. ரிக் வேதம் எழுதப்பட்ட காலம் சுமார் கி.மு. 1700–1100 என்பது கணிப்பு. ரிக் வேதத்தில் வரும் சரஸ்வதி நதி கி. மு. 1900 களிலேயே வரண்டு விட்டது என்று கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால் (ரிக் வேதத்தில் வளமான சரஸ்வதி நதியைப் பற்றிய வர்ணனைகள் உண்டு) ரிக் வேதத்தின் காலம் கி.மு 3100 க்கும் முற்பட்டதாக இருக்கக் கூடும் என்கிறார் சுபாஸ் கக் என்ற அமெரிக்க பேராசிரியர் (பேராசிரியர் என்பவர் அமெரிக்காவில் மட்டும் தானே இருக்க முடியும்?).
வேத மரபுப்படி தேவர்களின் முதல் மருத்துவரும், முதல் அறுவை சிகிச்சை நிபுணருமான தன்வந்திரியே ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம். "காஸ்யரின் மகன் காசி, அவனின் மகன் திர்கத்தாமனின் தகப்பனாகிய ரஸ்த்ரன். திர்கத்தாமனுக்கு தன்வந்திரி என்ற மகன் இருந்தான். மருத்துவ விஞ்ஞானத்தைத் தொடங்கியது வாசுதேவரின்(விஷ்ணு) வடிவமாகிய தன்வந்திரியே. தன்வந்திரியின் பெயரை நினைப்பவர் எல்லா நோயிலிருந்தும் விடுவிக்கப்படுவர்" -என்கிறது பாகவத புராணம் (Srimad Bhagavatam 9.17.4).
அக்னிவேசர், பேலர், ஜதுகர்ணர், பரசரர், ஹரிதர், க்ஷ்ரபனி ஆகியோருக்கு குருவாக இருந்தவர் புனர்வாச ஆத்ரேயர் (Punarvasu Atreya) என்ற மருத்துவ விற்பன்னர், இவரின் காலம் தெரியவில்லை. அவருக்குப் பிறகு அவரின் இந்த ஆறு சிஷ்யர்களும் மருத்துவதைப் பற்றி ஆளுக்கொரு சம்ஹிதையை (samhita, means "collection" in Sanskrit) எழுதினர். இவற்றுள் சிறந்ததாகக் கருதப்படும் அக்னிவேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதை (Agnivesa Samhita)யை பின்நாளில் சரகர் விரிவுபடுத்தி எழுத அது சரக சம்ஹிதை(Saraha Samhita) என அறியப்பட்டது. அதே போல சுஸ்ருதரின் நூல் சுஸ்ருத சம்ஹிதை (Sushruta Samhita) என்று அறியப்படுகிறது. மூத்த வாகபதர் (Vagbhata the elder) என்பவர் இவ்விரண்டு நூல்களையும் சேர்த்து அஷ்டாங்க சங்ரகம் (Astanga Sangraha) என்ற ஒரே நூலாகத் தொகுத்தார். இம்மூன்று நூல்களும் 'மூத்தோரின் மூன்றுவழிகாட்டிகள்' (Vrddha Trayi) என்று அறியப்படுகின்றன.
அதற்குப்பிறகு வந்த இளைய வாகபதர் (Vagbhata the younger) எழுதிய அஷ்டாங்க ஹிருத சம்ஹிதா (Astanga Hrdaya Samhita) என்ற நூலில் சுஸ்ருதரின் அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் உள்ளன. மிகச் சில பகுதிகளே இன்று கிடைக்கும் பேலரின் பேல சம்ஹிதை (Bhela Samhita) மனம் (manas) மூளையிலும் தண்ணுணர்வு (citta, அதாவது consciousness) இதயத்திலும் மையம் கொண்டுள்ளது என்கிறது. உயிரிகளை கருப்பையிலிருந்து பிறப்பவை, முட்டையிலிருந்து பிறப்பவை, விதைகளிலிருந்து பிறப்பவை என மூன்று வகைளாகப் பிரிக்கிறது சந்தோகிய உபநிடதம் (Chandogya Upanisad). மனித உடலில் மொத்தம் 727,210,201 நரம்புகள் உள்ளன என்கிறது பிரஸ்ன உபநிடதம் (Prasna Upanisad). மனித உடலின் 107 மூட்டுக்கள், 180 தையல்கள், 700 நாளங்கள், 360 எலும்புககள், 500 தசைகள், 900 உடற்குழிகள், 45 மில்லியன் முடிகள் உள்ளன என்ற செய்தி கர்ப உபநிடதத்தில் (Gharbha Upanisad) உள்ளது.
நிற்க! 'இதென்ன பிரமாதம், என் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டரின் அலமாரியில் இதைவிட நல்ல புத்தகமெல்லாம் இருக்கே' எனும் பிரகிருதிகள் மேற்சொன்ன புத்தகங்கள் எழுதப்பட்டது சுமார் கி.மு.1500-ம் ஆண்டு முதல் கி.மு.1000-ம் ஆண்டு வரை உள்ள ஏதோ ஒரு வருடத்தில் என்பதை நினைத்து, கொஞ்சமாவது ஆச்சரியப்படவும். முடியாதவர்கள் அடுத்து வரும் ஆச்சரியக்குறியைப் பார்த்து சமாளிக்கலாம்!
சம்ஹிதைகளின் சாரமாக உடல், உயிர் பற்றிய செய்திகளை பின் வருமாறு சுருக்கலாம். ஆயுர்வேதம் என்றால் ஆயுள் + வேதம் ஆயுளை நீட்டும் அறிவியல் என்று பொருள். வாதம் (காற்று, ஆகாயம்), பித்தம் (நெருப்பு), கபம் (நிலம், நீர்) என மனித உடல் பஞ்ச பூதங்களிலான மூன்று காரணிகளால் கட்டுப் படுத்தப்படுகிறது என்பது அடிப்படை. வாதம், பித்தம், கபம் மூன்று காரணிகளும் உடலின் தலா ஐந்து செயல்களோடு தொடர்புடையவையாக அறியப்படுகின்றன. 'வாதம்'- முறையே சுவாசம் (prana), பேச்சு (udana), சீரணித்துப் பிரித்தல் (samana) இரத்த ஓட்டம் (vyana), உடல் கழிவுகளை நீக்குதல் (apana) ஆகியவற்றோடு தொடர்புடையது. 'பித்தம்'- சீரணம் மற்றும் உடல் சூடு (pacaka), குடல் கூழ் மற்றும் இரத்தத்தின் செந்நிறம் (ranjaka), மனப் பயிற்சி (sadhaka), கண்பார்வையின் வலிமை (alocaka), உடலின் செந்நிறம் (bhrajaka) ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. 'கபம்'- எச்சில் சுரப்பு (kledaka), உடலின் சக்தி மற்றும் வலிமை (avalambaka), சுவையுணர்ச்சி (bodhaka), கண் மற்றும் இதர புலன்கள் (tarpaka), உடலின் மசகு (slesmaka) ஆகியவற்றோடு தொடர்புடையது.
மனித உடல் என்பது ரஸம் (rasa), குணம்( guna), வீரியம் (virya), விபகம் (vipaka) மற்றும் பிரபவம் (prabhava) ஆகிய தன்மைகளை வெவ்வேறு விகிதததில் கொண்டது. உணவு அடையும் ரசவாத மாற்றங்களை விபகமாகப் புரிந்து கொள்ளலாம். சூடு (usna), குளுமை (sita) போல மொத்தம் இருபது குணங்கள் சொல்லப்பட்டுள்ளன. சூடு, குளுமை போன்ற சக்தியை உருவாக்கும் தன்மையே வீர்யம். மதுரம் (madhura), அமலம் (amla), லாவணம் (lavana), திகதம் (tikta), கடு (katu) மற்றும் கஸாயம் (kasaya) என 'ரஸம்' ஆறு வகைப்படும். ஒவ்வொரு ரஸமும் இரு கூறுகளின் கலவையாகவும் தனித்த சுவையாலும் அறியப்படுகிறது. மதுரம், அமலம் லாவணம் இவை வாததிற்கும், மதுரம், திகதம், காஸ்யம் ஆகியவை பித்தத்திற்கும், கடு மற்றும் காஸ்யம் ஆகியவை கபத்திற்க்கும் எதிராகச் செயல்படுகின்றன.
மனித உடல் என்பது பஞ்ச பூதங்களின் கலவையே. பஞ்ச பூதங்கள் பல்வேறு விகிதங்களில் கலப்பதன் மூலமே ரஸம் (plasma), இரத்தம் (blood), மாமிசம் (flesh), கொழுப்பு (fat), எலும்பு (bone), மஜ்ஜை (marrow), மற்றும் சுக்ரம் (semen) ஆகிய ஏழு வகையான திசுக்கள் (dhatu) உண்டாகின்றன. இத்திசுக்கள் இணைந்து கலந்து ஓடுவதால் உடலில் ஏற்படும் உயிர்த்தன்மை வெண்ணிறமான எண்ணெய் போன்ற நிணம் வழியே மனித உடல் முழுக்க பரவியுள்ளது. உடலின் ஆதார நீர்மங்களான நிணம், ரஸம், இரத்தம் ஆகிய மூன்றும் இதயத்தில் சேகரமாகிறது. அடிப்படை விதிகள் (Sutrasthana), நோயின் மூலம் (Nidanasthana), நோய்க்குறிகள் (Vimanasthana), உடற்கூறியல் (Sarirasthana), நோய் அறிதல் (Indriyasthana), நோய் சிகிச்சை (Cikitsasthana), மருந்தியல் (Kalpasthana), நோய் தீர்த்தல் (Siddhisthana) என ஆயுர்வேத மருத்துவம் எட்டு பெரும் பகுதிகளைக் கொண்டது.
சம்ஹிதைகளின்படி ஆயுர்வேத மருத்துவத்தில் தேர்ச்சி பெற ஒருவர் உடற்கூறியல் (kayacikitsa) அறுவை சிகிச்சையியல் (salyacikitsa) காது, மூக்கு தொண்டை மருத்துவம் (salakyacikitsa) குழந்தை மருத்துவம் (kaumarabhrtya) உளவியல் (bhutavidya) நச்சியல் (agadatantra) வேதியியல் (rasayana) பாலியல் மருத்துவம் (vajikarana) ஆகிய எட்டுப் பிரிவுகளையும் பயில வேண்டும். தவிர மருத்துவத்தோடு தொடர்புடைய உப கலைகளான வாலை வடித்தல் (distillation), பொறிகளை கையாளுதல் (operative skills), சமையல் (cooking), தோட்டக்கலை (horticulture), தாது அறிவியல் (metallurgy), சர்க்கரைத் தாயாரிப்பு (sugar manufacture), மருந்தியல் (pharmacy) பண்பறி பகுப்பாய்வு (analysis of minerals), உலோகவியல் (compounding of metals), காரங்களைத் தயாரித்தல் (preparation of alkalis) ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கீறி அறுத்தல் (chedya), வெட்டி நீக்குதல் (bhedya), தழும்பேற்றுதல் (lekhya), துளையிடுதல் (vedhya), உட்செலுத்துதல் (esya), பிடுங்கி எடுத்தல் (aharya), உறிஞ்சி நீக்குதல் (visravya), தையல் (svya) என எட்டு வகையான அறுவை சிகிச்சை முறைகளை விளக்கும் சுஸ்ருதர், தான் அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய ஆயுதங்களாக 20 கூர்மையான மற்றும் 101 மழுங்கலான உபகரணங்களைப் பட்டியலிடுகிறார்.
sushustra21
அறுவை சிகிச்சைக்கு முன் தன்ணுர்வு நீக்கி நோயாளியை தாயார்படுத்த sammohini என்ற மருந்தும் சிகிச்சைக்குப் பின் புத்துணர்வூட்டி எழுப்ப சஞ்சீவனி (sanjvini) என்ற மூலிகையும் வலி நீக்க திராட்சை ரசமும் பயன்படுத்தப்பட்டது. கனவுகளை விளக்க சரக சம்ஹிதையில் ஒரு தனி அத்தியாயமே ஒதுக்கியிருக்கிறார் சுஸ்ருதர். இதை சிக்மண்ட் ஃபிராய்ட் படித்துப் பார்த்திருப்பாரா தெரியவில்லை.
சம்ஹிதைகளின் காலம் ஏறக்குறைய கி.மு. 1500 – 1000. அதாவது ஹிப்போகிரடெஸின் காலத்துக்கு (கி.மு. 460 BC – 370) ஏறக்குறைய ஆயிரம் வருடத்துக்கும் முன்னால். ஆகவே மனித வரலாற்றில் மருத்துவம் தோன்றியதும், மனித உடல் மற்றும் மருத்துவம் பற்றிய ஆரம்ப நூல்கள் எழுதப்பட்டதும் இந்தியாவில்தான் என்பதைச் சொல்ல பயப்படத்தேவையில்லை என்றே நினைக்கிறேன். 'pseudoscience எழுதுகிறேன்' என்று எக்ஸ் போன்ற நண்ப விவாதிகள் பிராது பண்ணுவார்கள் என்பதால் மேலது விஷயத்துக்கு மங்களம். தலைப்பை விட்டு விலகிவிடுவோம் என்பதால் அடுத்து வரிசையில் காத்திருக்கும் ஆர்யபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கரர் ஆகியோரை 'மன்னிக்கவும், அடுத்தமுறை சந்திப்போம்' என்று அனுப்பிவிடுவோம்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்திய சிந்தனை மரபில் உள்ள ஏறக்குறைய அதே விஷயங்களைத்தான் பிளாட்டோ, பித்தாக்ரஸ், அரிஸ்டாட்டில், ஹிப்போகிரடெஸ் ஆகியோரும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. தொல் இந்திய நூல்களின் காலம் இவர்களின் காலத்துக்கும் முந்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இச்சிந்தனைகள் இந்தியாவில் தோன்றி பிற்காலத்தில் பரவி கிரேக்கத்திற்குச் சென்றவையா என்ன?
(இன்னும் வரும்)
உதவியவை & மேலும் படிக்க:
1.Sulaba Sutra, http://www.math.ubc.ca/~cass/courses/m309-01a/kong/sulbasutra_geometry.htm
2.Indian Mathematics, http://en.wikipedia.org/wiki/Indian_mathematics
3.Dutta, A,K., 2002. Mathematics in Ancient India
http://www.ias.ac.in/resonance/April2002/pdf/April2002p4-19.pdf
4.Euclid, Encyclopedia Britannica, http://www.britannica.com/EBchecked/topic/194880/Euclid
5.Seidenberg, A., The origin of mathematics. Archive for History of Exact Sciences. 18: 301-342, 1978.
6.
ஜெயமோகன், 2009. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், தமிழினி பதிப்பகம்
7.Subhash Kak, 2003, Greek and Indian Cosmology: Review of Early history, http://cdsweb.cern.ch/record/607500/files/0303001.pdf?version=1
8. Srimad Bhagavatam, http://vedabase.net/sb/9/17/4/en1
9.சரக சம்ஹிதையை தரவிறக்கம் செய்ய: http://www.ayurveda-berkeley.com/Ayurveda_Books_Ayurvedic_Articles_Correspondence/Ayurvedic_Sutras_Ayurveda_Sanskrit_Books/Ayurvedic-Sanskrit-Writings/Charaka's-Carak-Samhita-Sanscrit-Sutra-Ayurveda/Charaka-Samhita-2003-rev2_Vol_I.pdf
10. சுஸ்ருத சம்ஹிதையை தரவிறக்கம் செய்ய: http://www.archive.org/details/englishtranslati00susruoft
11. நாளந்தா பல்கலைக் கழகம், http://en.wikipedia.org/wiki/Nalanda
--------------------------------
வேணுகோபால் தயாநிதி
நன்றி-சொல்வனம்

No comments: