Pages

இரவு பகலாக வேலைபார்ப்பவர்களா நீங்கள்? இதைப் படியுங்கள் முதலில்!

இரவு பகலாக வேலைபார்ப்பவர்களா நீங்கள்? இதைப் படியுங்கள் முதலில்!

By DN, ஹூஸ்டன்

இரவு மற்றும் பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு மாரடைப்பு, உடல் பருமன், தீவிர பக்கவாதம் போன்ற நோய் அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால் சென்டர்களிலும், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியம் இளைய தலைமுறையினர் மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புபவர்கள் அதிகாலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ இல்லம் திரும்புகின்றனர். பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது. சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடுவதனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகிவிடுகிறது. இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் ஆய்வில் கூறியுள்ளதாவது:

இரவு மற்றும் பகல் என 24 மணி நேர சுழற்சியில் நமது உடல் உறுப்புகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் "உயிரியல் கடிகாரம்' நம் உடலில் செயல்பட்டுவருகிறது.

இரவு மற்றும் பகலில் நமது உடல் செய்ய வேண்டிய பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அவை மேற்கொண்டு வருகிறது.

எப்போது சாப்பிடுவது? எப்போது உறங்குவது? என்பது உள்ளிட்ட எண்ணற்ற செயல்பாடுகளுக்கு இந்த "கடிகாரம்' மூலமாகத்தான் நமது உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இரவு பகல் என மாறி மாறி பணிபுரிபவர்கள் தூங்காமல் முழித்து இருப்பதற்காக டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் தூங்கியெழும் நேரம் ஒழுங்கில்லாமல் அடிக்கடி மாறுவதால் உடம்பின் இயக்கச் சுழற்சி சீராக இன்றித் தடுமாற்றம் அடைகிறது.

இதனால், 24 மணி நேர இயற்கையான சுழற்சி தடைபடுவதுடன் உடலியக்க செயல்பாடுகளும் பாதிப்படைகிறது.

அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தூக்கத்தை வரவழைக்கவும் உதவும் மெலடோனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. இதனால் உடல் பாதிக்கப்படுகிறது. மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய அனைத்தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்ற வற்றுக்கு முக்கிய காரணமாகின்றன.

இதனால், மூளையின் ஒரு பகுதியின் ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு தீவிர ரத்த அடைப்புகள் உண்டாகி பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

வழக்கமான முறையில் வேலை பார்ப்பவருடன் ஒப்பிடுகையில், பகல்-இரவு என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்ப்பவரின் மூளை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உணர்விழத்தல், மூட்டுகளின் இயக்கம் தடைபடுதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

ஆண்களைக் காட்டிலும், இளவயதுப் பெண்களுக்குப் பக்கவாத பாதிப்புகள் அபாயம் குறைவாக உள்ளதாக அந்த சோதனையில் தெரியவந்துள்ளது. ஏனெனில், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அவர்களின் மூளைக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி, நரம்பு மண்டலங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பை அளிக்கிறது.

ஆனால், வயதான பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபரீதா சொராப்ஜி என்ற ஆராய்ச்சியாளரையும் உள்ளடக்கிய டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் இந்த ஆய்வு முடிவுகள் "எண்டோகிரினாலஜி' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Thanks...http://www.dinamani.com/world/2016/06/03/இரவு-பகலாக-வேலைபார்ப்பவர்க/article3464397.ece

தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது…..

மரபணுத் திருத்தம் மூலம் எச்.ஐ.வி வைரஸ் மற்றும் மரபணுக்களை நிச்சயமாக நீக்கமுடியும்: - ஆய்வில் வெற்றி!!

ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது.