அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிகமாக அதனை உட்கொள்ளக்கூடாது என்று அந்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
அதாவது, ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ஆறு பைன்ட் அளவு பியர் அல்லது ஏழு கிளாஸ் வைன் ஆகியவற்றுக்கு மேலாக உட்கொள்வதை தவிர்க்குமாறு அந்த அறிவுறுத்தல் கூறுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.
தினந்தோறும் மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்தில் சில நாட்கள், அதனை அருந்துவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது எனவும் புதிய ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மது அருந்துவதால் ஏற்படும் நோய்களுக்கு அப்பால், அதிக மது அருந்துபவர்கள் வீதி விபத்து மற்றும் காயங்களுக்குள்ளாவதும் அதிகம் நடைபெறுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஒரு யூனிட் என்றால் என்ன?
புதிய ஆய்வின் பரிந்துரையின்டி பியர் என்றால் ஒரு பைண்ட் அதாவது 576 மில்லி லிட்டர் அளவு, வைன் என்றால் 175 மில்லி லிட்டர் அளவு, விஸ்கி அல்லது ரம் போன்ற கூடுதல் ஆல்கஹால் கொண்ட மதுபானமாக இருந்தால் 50 மில்லி லிட்டர் அளவுகள் ஆகியவை சராசரியாக இரண்டு யூனிட் அளவுகளாக மதிப்பிடப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முந்தைய வழிகாட்டலின்படி, ஆணொருவர் நாளொன்று மூன்று முதல் நான்கு யூனிட் அளவும், பெண்கள் இரண்டு முதல் மூன்று யுனிட் அளவும் மதுபானம் அருந்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய பரிந்துரை வாரத்திற்கே இருபாலாரும் அதிகபட்சமாக 14 யுனிட் மட்டுமே மதுபானம் அருந்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது, மது அருந்த வேண்டிய அளவு முன்னர் மட்டுப்படித்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் முழுமையாக மது அருந்தக் கூடாது என்று புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது.
குறைந்தளவில் மது அருந்துவது மாரடைப்பை தடுக்கும் என முந்தைய சில ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்ந்தும் கருத்திற்கொள்ளப்படாது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அத்தோடு, அதிக மது அருந்துவதனால் வாய், தொண்டை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
www.bbc.com/tamil/science/2016/01/160110_alcohol_limit
No comments:
Post a Comment