Pages

'கலைஞரின் சட்டப்பேரவை வைரவிழா ஓர் அரசு விழாவாக பரிமளித்திருக்கவேண்டும்'

சட்டப்பேரவைப் பணிகளில் கலைஞரின் வைரவிழாவை நிச்சயம் தமிழக அரசுதான் நடத்தியிருக்க வேண்டும். ஏனோ காலமும் சூழலும் அதற்கு இடம் கொடுக்காமல் போய்விட்டது.
அப்படி நடத்தாமல் போனது துரதிஷ்டவசமானது. இதற்கு ஆளும் ஈபிஎஸ் அணி அதிமுக காரணமா? அல்லது ஓபிஎஸ் அதிமுக காரணமா?

நீதிக்கட்சி
ஒருவகையில் 1917ல் உதயமான நீதிக்கட்சியின் வழிதோன்றலான மு.கருணாநிதி 'கலைஞர்' என்றே தொண்டர்களாலும், தலைவர்களாலும் அவரது நேசத்திற்குரிய பலராலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரசுக்கு மாற்றாக தோன்றியது நீதிக்கட்சி. பிரிட்டிஷ் இந்திய அரசியலில் மைய நீரோட்டத்திலிருந்து விலகி செயல்பட்ட நீதிக்கட்சி உதயமாகி இதோ 100 ஆண்டுகளை எட்டிவிட்டது. கருணாநிதியின் சட்டசபைப் பணிகளுக்கு வைரவிழாவை நீதிக்கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டமாகவே இணைத்தும் பார்க்கப்பட வேண்டும். வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை ஆதரித்த நீதிக்கட்சி 1920 முதல் 37 வரை உள்ள 17 ஆண்டுகளில் 1926-30 தவிர மீதியுள்ள 13 ஆண்டுகளில் நீதிக்கட்சியே சென்னை மாகாணத்தை ஆண்ட பெருமையைப் பெற்றது.
குறிப்பிட்ட சில வகுப்பினரே நீதிக்கட்சியில் முக்கிய அங்கம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. என்றாலும் அதன் பிரதான நோக்கம் அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமநிலை சமுதாயத்தை உருவாக்குவதுதான்.
திராவிடர் கழகம்
ஆனால் அதன்பிறகு எவ்வளவோ மாற்றங்கள் ஏற்றங்கள் இறக்கங்கள்.... ஒரு கட்டத்தில் நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான பெரியார் ஈ.வெ.ரா., தேர்தல் அரசிலியலிருந்து நீதிக்கட்சியினை விலக்கிக் கொண்ட கையோடு திராவிடர் கழகத்தை தோற்றுவிக்க அதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெருமளவில் இணைந்தனர். அவர்களில் முக்கியமானவர் சி.என்.அண்ணாத்துரை.
சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கம், சமூகத்தில் மாறுதல் வேண்டுமென்ற வேட்கையோடு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த கருணாநிதி உள்ளிட்ட மாணவர்களை ஈர்த்ததில் வியப்பில்லை.
பள்ளிப்பருவத்திலேயே அண்ணாவின் திராவிட நாடு இதழில் 'இளமைப்பலி' எனும் படைப்பை எழுதினார் கருணாநிதி. திருவாரூர் கூட்டத்திற்கு வந்த அண்ணா பள்ளிமாணவர் கருணாநிதியை அழைத்துவரச்சொல்லி பேசுகிறார். அவர்தான் பிற்காலத்தில் திமுகவின் தனிப்பெரும் தலைவனாக சட்டசபை வைரவிழாப் பணிகளின் கொண்டாட்ட நாயகனாக மிளிரப்போகிறாரென்று அண்ணாதுரை நினைத்திருக்க வாய்ப்பில்லை.
நெஞ்சுக்கு நீதி
கருணாநிதியின் சுயசரிதை நூலான 'நெஞ்சுக்கு நீதி'யின் முதல் பாகத்தில் முதல் வரி இப்படி தொடங்குகிறது, '1924ல் அடால்ப் இட்லர் சிறையில் அடைக்கப்பட்டு தனது மெயின் காம்ஃப் நூலை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் நான் பிறக்கிறேன்'. தான் பிறந்ததையே ஒரு வரலாற்று நிகழ்வோடு தொடர்புபடுத்துகிறார்.
தான் பிறந்தததைப் பற்றி குறிப்பிட்டது வேண்டுமானால் மிகை நவிற்சியாக இருக்கலாம். அடுத்தடுத்து அவர் வாழ்வில் நிகழ்ந்த பலவும், நீண்ட நெடிய வரலாற்றின் பக்கங்களோடு அவர் பிணைக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை. ஒரு நூற்றாண்டின் முக்கிய தலைவர்களை யெல்லாம் சந்தித்து கடந்துவந்துகொண்டிருக்கும் வாழ்க்கை அவருடையது.
சுழன்று கொண்டிருக்கும் பூமி, மாற்றங்களுக்காக வேண்டி காலம்தான் தன் போக்கில் பெரியபெரிய மனிதர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. ஹிட்லர் தனக்கான புனைப்பெயரான அடால்ப் என்று சேர்த்துக்கொண்டபோது அடால்ப் என்ற குணமுள்ள ஓநாய் என்ற அர்த்தமெனினும் நிச்சயம் வருங்காலத்தில் ரத்தம்குடிக்கும் ஓநாயாக இட்லர் மாறுவதற்கான உருவமாகவே அது அமைந்துவிட்டது. செருப்பு தைக்கும் மகனாகப் பிறந்து கொடிய வறுமையில் வாடிய ஜோசப் ஸ்டாலின் பிற்காலத்தில் ரஷ்ய அதிபராகி அந்த ஹிட்லருக்கே எமனாகின் போனதை உலகின் குறுக்கும்நெடுக்குமான வரலாறுகள் நமக்குச் சொல்கின்றன.
காலச்சக்கரம்
ஆக காலச்சக்கரம்தான் தனக்கான புதுப்புது மாற்றங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. நீதிக்கட்சி உருவானது ஒரு காலம், சுயமரியாதை இயக்கம் தோன்றியதோ வேறொரு காலம், பகுத்தறிவாளர்க் கழகம் உருவானது மற்றொரு காலம், திராவிடர் கழகம் உருவானதோ பிறிதொரு காலம். ஆனால் அந்த இயக்கங்கள் எல்லாம் தோன்றிய காரணங்கள் வெவ்வேறுவிதமானதாக இருக்கலாம். புதுப்புதுத் தடங்களை விரிவாக்கிக்கொண்டே சென்ற அவற்றின் நோக்கங்களும் லட்சியங்களும் தமிழ் மக்களுக்கான சமூக விடுதலையே அது.
அவற்றின் வரலாற்றுப் பாதையின் ஒரு மைல்கல்லில், மீசை முளைக்காமல் கையில் 'முரசொலி' இதழோடு நிற்கும் கருணாநிதி எனும் இளைஞனை அரவணைத்துச் செல்கிறது திராவிட நாடு இதழும் விடுதலை இதழும்.
சமூக விடுதலைக்காக போராடிய பெரியாரும், வெறும் இயக்கமாக மட்டுமின்றி மக்களாட்சிக்கான அதிகார அங்கீகாரமும் வேண்டுமென முழக்கமிட்ட அண்ணாவும் கருணாநிதிக்கு போட்டுக்கொடுத்த பாதை ரத்தினக் கம்பளத்தால் ஆனதல்ல....
எம்ஜிஆர் வார்த்தைகளில்...
கருணாநிதியைப் பற்றி இனி எம்ஜிஆர் சொல்வதை பாருங்கள்:
''கலைஞருக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம் தான் ஈர்க்கப்பட்டேன்.
இன்று அவர் கழகத் தலைவராகவும் நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு அமைந்தது. கலைஞர் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால் அவருக்குப் பெருமையும் புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பே பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருப்பவர் கலைஞர்.
கொள்கைப் பிடிப்பு
கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு என்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை இப்படி பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார். அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துக்களை படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை. தனக்கென ஒரு கொள்கை தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர்.
கொள்கைப் பிடிப்புக் காரணமாக சமயம் வரும்போது அண்ணாவுடனும் சரி, என்னுடனும் சரி, கலைஞர் வாதிடுவதற்கு ஒரு போதுமே தயங்கியதில்லை. அதேபோல கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால் தன் உயிரைக்கூட மதிக்காமல் முனைந்து பாடுபடுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் இருந்திருக்க முடியாது.''
என்று எழுதிச்செல்லும் எம்ஜிஆரின் விரல்கள் தொடர்ந்து பாண்டிச்சேரி சம்பவத்தை முன்வைக்கின்றன... அங்குதான் கருணாநிதி அவரது கொள்கை எதிரிகளால் சாக்கடையில் தூக்கி வீசப்பட்டார். அவர் காப்பாற்றப்பட்டு கரைசேர்க்கப்பட்டு பெரியாரிடம் கொண்டு செல்லப்பட்டதும் விடுதலையில் உதவி ஆசிரியர் ஆனதும் பின்னர் நிகழ்ந்த சரித்திரம்.
எதிர்கட்சித் தலைவராக
கருணாநிதியிடமிருந்து முரண்பட்டு அண்ணா திமுகவைத் தோற்றுவிக்கிறார் எம்ஜிஆர். மக்களின் ஏகோபித்த ஆதரவில் ஆட்சியைப் பிடித்தபிறகு 13 ஆண்டுக்காலம் எதிர்கட்சியாகவே தாக்குபிடிக்கிறார் கருணாநிதி. அதன்பிறகு மீண்டும் தமிழக முதல்வராகிறார். ஆனால் காலச்சக்கரம் அவரை முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் மாற்றிமாற்றி அமரவைத்து வேடிக்கை பார்க்கிறது. கருணாநிதியின் திட்டங்களைப் பொறுத்தவரை அண்ணா தொடர்ந்து முதல்அமைச்சராகவே உயிரோடு இருந்திருந்தால் எப்படி கொள்கைப் பிடிப்போடு செயல்படுவாரோ, அதைப்போலவே, அதன் தொடர்ச்சியாகவே மக்களுக்கான மகத்தான பணிகளையே ஆட்சியின் திட்டங்களாக உருவாக்கினார் கருணாநிதி.
செம்மொழி மாநாடு
சமீபத்தில் கருணாநிதி ஆண்ட (2006-2011) வரலாறு கடும் விமர்சனத்துக்குள்ளானது. தமிழை செம்மொழியாக்கியது மாபெரும் பணி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இலங்கையில் போர் நடந்துகொண்டிருக்கும் வேளையில் செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்தியதுதான் பிரச்சனை.
அதற்கு தலைமை ஏற்க இலங்கையின் தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியை அவர் மறுத்தும் தமது அதிகார பலத்தால் அவரை அழைத்து வருகிறது. எதற்காக? உலக அரங்கில் தமிழ் உயர்ந்து நிற்பதை மகிழ்ச்சியோடு பார்க்கும்நிலையிலா அன்று மக்கள் இருந்தார்கள்? மேலும் மேலும் வெறுப்படைய செய்யும் வகையிலேயே அமைந்துவிட்டது இந்த செம்மொழி மாநாடு.
அதன் பெருமையை அனுபவிக்கவோ ஆராதிக்கவோ தமிழர்களுக்கு தகுந்த நேரமாக அது இருக்கவில்லை என்ற நுண்ணுர்வு கருணாநிதிக்கு எப்படி தவறிப்போனது என்றுதான் இந்த நிமிடம் வரை புலப்படவில்லை. அதை பதவி வெறி என்கிறார்கள் பலர். ஆனால் 89ல் ஆட்சி கலைக்கப்பட்டது ஈழத்தமிழர் நலன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனைக்காகத்தான். ஆட்சிப் பறிக்கப்படும் நிலையிலும் கவலைப்படாமல் ஈழத்தமிழர் நலன்நாடிய 89 திமுக ஆட்சி எங்கே? இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கும் நிலையிலும் தனது மத்திய அமைச்சர்களின் பதவிக்காக தமிழர்களிடம் பூச்சாண்டி ஆட்டம் காட்டிய 2006 ஆட்சி எங்கே? என்றுதான் இன்னும் பலரும் கேட்டார்கள்.
இனப்படுகொலை
எம்ஜிஆருக்குப் பிறகு 89ல் ஆட்சிக்கு வந்த திமுக அதன் பின்னர் மாற்றிமாற்றி ஆட்சியை பிடித்தது. அந்த வகையில் 2011 ஆட்சியைப்பிடித்த ஜெ.அரசு அடுத்து வந்த தேர்தலில் வழக்கம்போல வீழ்த்தமுடியவில்லையே ஏன்? திமுக அந்தத் தகுதியை இழந்ததோடு அடுத்தடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்து படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது?
ரத்தவெறிபிடித்த ஹிட்லரைப் போன்ற ஓநாய் என உருவகிக்கப்பட்ட ராஜபக்சேவால் இனப்படுகொலை அரங்கேறிக்கொண்டிருக்க தொடர்ந்து நிகழ்த்திய பாராமுகம், நித்தம் ஒரு விழாவும் வேடிக்கையுமாக தமிழை உலகஅரங்கில் உயர்த்தும்பணி மும்முரமாக நடத்திய வேகம், மத்திய அரசில் பங்கேற்ற அமைச்சர்கள்மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்றெல்லாம் காரணங்கள் அடுத்தடுத்து சேர்ந்துகொண்டன. இதில் வாரிசு அரசியலில் கருணாநிதியின் மகன்கள் இருவரின் சண்டைகளும் மக்களின் பேசுபொருளாக மாறிப்போனதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
மத்திய அமைச்சர் பதவிகள்
அந்த நேரம் திமுக எம்பிக்களும் மத்திய திமுக அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தால் தமிழக அரசு கலைக்கப்பட்டிருக்கும். ஒருவகையில் அதுவும் திமுகவுக்கும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் மிகப்பெரிய நன்மையாயிருந்திருக்கும். அடுத்து வந்த தேர்தலில் 2011 அதிமுக ஆட்சியைப் பிடித்ததில் தவறில்லை. இங்கு மாற்றி மாற்றி நடைபெறும் நடைமுறையில் அதுஒன்றாக ஆகிப்போயிருக்கும். ஆனால் அதற்கு அடுத்து வந்த 2015லும் திமுக வரமுடியாமல் போகவும் தொடர்ந்து அதிமுகவே ஆளட்டும் என மக்கள் இவ்வளவு வெற்றியை ஜெயலலிதாவிற்கு வாரி வழங்குவதற்கு காரணமான செயலாக அது அமைந்துவிட்டதுதான் பரிதாபம்.
தமிழகத்தில் காங்கிரஸை வீழ்த்த நினைத்து காமராஜரை தோற்கடித்தது திமுகதான். ஆனால் பின்னர் வந்த நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி உத்தரவை மறுத்து காமராஜரை கைது செய்யமுடியாது என அறிவித்த கருணாநிதியின் பண்புக்கும் துணிச்சலுக்கும் ஓர் ஒப்பற்ற உதாரணமாக அமைந்தது. 1957 முல் 2017 வரையில் 60 ஆண்டுகால தமிழக தேர்தல் வரலாற்றில் வெற்றிவெற்றிவெற்றி என்று ஓய்வறியா உதயசூரியனாக உலா வந்தார்.
நெஞ்சுறுதி எங்கே?
கோபமென்றால் பொங்குகின்ற எரிமலையாக, தாபமென்றால் தண்ணொளியின் நிலவாக, தேனூறும் இன்பத் தமிழில் திரையிலும் எழுத்திலும் உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியத் தமிழைத் தீட்டி மக்களை மகிழ்வித்தவர் கருணாநிதி. ஆட்சி என்று வரும்போதும் பெண்ணுக்கு சொத்துரிமை, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், குக்கிராமங்களுக்கு மினி பஸ் என்றெல்லாம் மக்கள் நலத்திட்டங்களில் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டவர்.
அவரது எந்தக் காலத்து எழுத்தை எடுத்துப் பார்த்தாலும் திரையில் தீட்டிய வசனங்களைப் பார்த்தாலும் சட்டசபையில் அளித்த நகைச்சுவை பதில்களாக இருந்தாலும் மக்களுக்காக இயற்றிய அரசாணைகள் எவற்றைப் பார்த்தாலும் அவரது மாறாத நெஞ்சுறுதியைக் காணமுடியும். ஆனால் கால தேச வர்த்தமான சந்தர்ப்பவாத சூழ்நிலைக் கைதிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கும் உலகம் சில சூழ்நிலைக்கேற்ப எவ்வளவு பெரிய மனிதரையும் சிக்கலாக்கிவிடுகிறது. அந்த நெஞ்சுறுதி முக்கியமான நேரத்தில் எங்கோ தொலைந்துபோனது.
சமீபத்தில் திமுக ஆட்சியில் இருந்த அந்த குறிப்பிட்ட காலத்தில் (2006-2011) மட்டும் சோனியா, மன்மோகன்சிங் காங்கிரஸ் அரசின் மத்திய அரசுப் பதவிகள், மாநில அரசு பதவிகள் ஒரு பொருட்டே இல்லை தமிழர் நலன்தான் முக்கியம் என்று நினைத்திருக்க வேண்டும் அவர்.
அப்படி நினைத்து இந்த யானை அடிசறுக்காமல் இருந்திருந்தால் ஓர் அரசு விழாவாக பரிமளித்திருக்கவேண்டியது. நிச்சயம் கருணாநிதியின் சட்டசபை வைர விழாவை தமிழக அரசு எடுக்கும் விழாவாக காலம் அமைத்துக் கொடுத்திருக்கும். முதுபெரும் திமுக தலைவர் பேராசிரியர் அன்பழகனுக்கு மட்டுமல்ல, திமுகவின் நம்பிக்கை நட்சத்திரங்களான ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் மட்டுமல்ல, தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உவப்பான ஒரு விழாவாக அமைந்திருக்கும். அகில இந்தியாவையே அது திரும்பிப் பார்க்க வைத்திருக்கும்.
-பால்நிலவன்
தொடர்புக்கு: sridhar.m@thehindutamil.co.in


No comments: