பாரம்பர்ய முறையில் கல்செக்கு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் எள், கடலை, தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் நுகர்வு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் கல்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி பயிர் செய்யப்படும் விவசாய உணவுப்பொருள்களில் நச்சுத்தன்மை உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் பலரும் கூறிவருகிறார்கள். அதேபோல்,எண்ணெய் வித்துப் பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் உள்ளிட்ட பயிர்சாகுபடியிலும் அதிக அளவு ரசாயனம் இடுபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் வகையில் உடல்நலன் குன்றச்செய்யும் ரசாயனத்தின் கூறுகள் உள்ளது என்று உறுதியாக பலரும் நம்புவதால், இயற்கை விவசாயத்தில் விளைந்த எண்ணெய் வித்துக்களை பயன்படுத்தி, கல் மற்றும் மரச்செக்கு மூலம் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது. கிராமப்புறங்களில் இயங்கிவரும் செக்கு ஆலைகளைத் தேடிப்போய் சுத்தமான எண்ணெய் வாங்கும் நகரவாசிகள் பலர் உண்டு.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கல்செக்கு ஆலை அமைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி செய்துவரும் தங்கவேல் என்பரை சந்தித்து பேசினோம். “அந்தக் காலத்தில மாடுபூட்டிய செக்கு வெச்சு எண்ணெய் உற்பத்தி செஞ்சாங்க. விவசாயிகளே அவங்க நிலத்துல சாணம், குப்பை, பசுந்தாள் உரம் போட்டு இயற்கை விவசாயத்துல வௌஞ்ச நிலக்கடலை, எள், தேங்காய் கொப்பரை போன்ற எண்ணெய் வித்துக்களை மாட்டுவண்டியில ஏத்தி எங்ககிட்ட கொண்டுவந்து போட்டு அரைச்சு அதுல கிடைக்கிற எண்ணெய்யை வீட்டுக்கும் பிண்ணாக்கை மாட்டுக்கும் பயன்படுத்துவாங்க. அதனால, உழைக்கிற மாடுகளும் நோயில்லாமல் ஆரோக்கியமா இருந்திச்சு, கலப்பிடமில்லாத சமையல் எண்ணெய் குடும்ப ஆரோக்கியம் காத்திச்சு.
பசுமைப்புரட்சி நம்ம நாட்டு விவசாயிகளை ரசாயன விவசாயம் பக்கம் மடை திருப்பி விட்டுச்சு. மானாவாரியில வெளைஞ்ச நாட்டு ரக விதைகளை அழிச்சு, அதிக விளைச்சல் கொடுக்கற வீரிய விதைகளை விளம்பரம் செஞ்சதுல மண்ணின் ஆரோக்கியமும் மக்கள் ஆரோக்கியமும் கெட்டுப்போச்சு. நம்மாழ்வார் போன்ற இயற்கை ஆர்வலர்கள் பலர் ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை மக்களுக்கு ஒரு பிரசாரமாகவே எடுத்துச் சென்று பல வருஷம் போராடினாங்க. அது வீண்போகல. இப்ப ஆடுமேய்க்கிறவன் தொடங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி வரைக்கும் ஆர்கானிக் உணவு குறித்து பேசத் தொடங்கிட்டாங்க. பள்ளி, கல்லூரிகள்ல இயற்கை விவசாயக் கருத்தரங்குகள் நடக்குது, பத்திரிகைகளும் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.
இப்ப நஞ்சில்லா உணவு தேடி போகத்தொடங்கிட்டாங்க. பெருநகரங்கள், சிறுநகரங்கள் எல்லா இடத்திலும் ஆர்க்கானிக் ஷாப் எனப்படும் இயற்கை அங்காடிகள் திறந்தாச்சு. எங்களைப்போல செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யறவங்களைத் தேடி கார்ல வர கூட்டம் அதிகமா இருக்கு. ஆரம்பத்துல, நாள் ஒண்ணுக்கு 10 லிட்டர்கூட விற்பனையாகாத எங்க ஆலையில இப்ப 200 லிட்டர் செக்கு எண்ணெய் விற்பனையாகுது. செக்கு எண்ணெய்க்குத் தேவை அதிகம் இருப்பதால இன்னும் சில ஆண்டுகள்ல ஊருக்கு ஒரு செக்கு ஆலையும் வீதிக்கு ஓர் இயற்கை அங்காடியும் மக்கள் ஆதரவுடன் வெற்றி நடைபோடும் இது நிஜம்” என்றார் உறுதியுடன்.
Thanks...
https://www.vikatan.com/news/tamilnadu/109372-organic-oil-is-good-for-health.html
No comments:
Post a Comment