அரிட்டாபட்டி குளமும் அங்கு உலவும் லகடு வல்லூறும்!

 


வரலாற்றில் மதுரைக்குப் பல பெயர்கள். அவற்றில் ஒன்று எண்பெருங்குன்றம். அதற்கு எட்டு பெரும் குன்றுகள் சூழ்ந்த ஊர் என்று பொருள். அதில் ஒரு குன்று அரிட்டாபட்டி. இதை திருப்பிணையன் மலை, கழிஞ்சமலை என்றும் சொல்கிறார்கள்.

மதுரையிலிருந்து 17 கி.மீ தொலைவில் யானைமலைக்கு வடக்கே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது அழகிய அரிட்டாபட்டி மலைக்குன்று. இதை ஒட்டி அமைந்துள்ளது அரிட்டாபட்டி கிராமம்.

மதுரை மாநகரை 'வாழும் மூதூர்' என்று பெருமையாகச் சொல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் அரிட்டாபட்டி கண்மாய். சிதையாத மொழியும், ஊரும், குன்றுமாய் இன்றும் பெருமையுடம் நிமிர்ந்து நிற்கிற ஊர் அரிட்டாபட்டி. இங்குள்ள 16-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆனைமேல்கொண்டான் கண்மாய் இன்றைக்கும் 'ஆனைக்கொண்டான் கண்மாய்' என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

சமணர்கால குகைகள், சமணப்படுகை, மகாவீரர் புடைப்புச் சிற்பம் என்று இன்றளவும் பாரம்பர்யச் சின்னங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அரிட்டாபட்டிக்கு சொல்லச் சொல்லத் தீராத பெருமைகள் உள்ளன. மதுரையின் பாரம்பர்யங்களை, கதைகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள நினைப்பவர்கள் மிகவும் நிதானமாக எண்பெருங்குன்றங்களையும் அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

பாண்டியர்கால குடைவரைக் கோயில்கள் இருக்கும் ஊர் அரிட்டாபட்டி. கி.மு 2-ம் நூற்றாண்டில் குஜராத்தில் இருக்கிற 'காரோவனம்' என்கிற இடத்தில் லகுலீசுவரர் என்று ஒருவர் வாழ்ந்தாராம். 12 வயதில் அவர் அசையாமல் தவத்திலிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாகக் கருதி அவரை எரித்துவிட்டார்களாம். ஆனால், அவர் தன் தவம் கலைந்து நெருப்பிலிருந்து வெளிப்பட்டு நின்று அனைவரையும் வியக்க வைத்தார். அவர் தன் வாழ்வில் நாடுமுழுவதும் பயணம் செய்து சிவ வழிபாட்டைப் பரப்பினார் என்கிறார்கள் அடியார்கள். சிவனே லகுலீசுவரராக அவதாரம் எடுத்தார் என்று நம்புகிறவர்களும் உண்டு. அவர் வழிவந்த சீடர்களில் சிலர் மதுரைக்கு வந்து சைவத்தைப் பரப்பினர் என்கிறார்கள். அவர்கள் மூலமே 'பாசுபத சைவம்' என்கிற சிவ வழிபாடு தென்னகத்தில் பரவியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த பாசுபத சைவ சிவவழிபாடு மதுரையில் பெருமளவு பரவிய ஏழாம் நூற்றாண்டில்தான் இங்கு லகுலீசுவரருக்குக் குடைவரைக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தேவர்மலையிலும், அரிட்டாபட்டியிலும்தான் லகுலீசுவரருக்குக் கோயில்கள் உள்ளன. இக்கோயிலின் வாசலில் துவாரபாலகர்களும், குடைவரையின் வெளிமுகப்பில் பிள்ளையாரும், உள்ளே சிவலிங்கமும், லகுலீசர் சிலைகளும் அமைந்துள்ளன. இந்தக் குடைவரைக் கோயிலுக்குப் பக்கத்தில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வத்தின் சந்நிதியும் உள்ளது. அந்த மண்டபத்தை 'இடைச்சி மண்டபம்' என்று சொல்கிறார்கள். இந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் வற்றாத சுனைக்கு, தீர்த்தச்சுனை என்று பெயர்.

எண்பெருங்குன்றங்களில் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஒன்று அரிட்டாபட்டி. கழிஞ்சமலை என்று சொல்லப்படுகிற அரிட்டாபட்டி மலையின் குகைத் தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான சமணர் படுகையும், தீர்த்தங்கரர் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. 1,300 ஆண்டுகள் பழைமையான வட்டெழுத்துக் கல்வெட்டும் இந்த ஊரில் உண்டு. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாமிரச் செப்பேடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன.

இதெல்லாம் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் அரிட்டாபட்டியின் சரித்திரப் பெருமைகள். இவை மட்டுமல்ல சில சூழலியல் சுவாரஸ்யங்களும் நிறைந்து விளங்குவது அரிட்டாபட்டி.

பெரும்பாலும் இங்குள்ள கண்மாய் நீர் நிறைந்தே காணப்படுகிறது. கடும் கோடையிலும் வற்றாத நீர்ச்சுனை இங்கு உள்ளது. ஏழு மலைத் தொடர்கள், குன்றுகள் எனக் காண்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் ஊராக இந்த ஊர் அமைந்துள்ளது. பல வகை மரங்களும், செடிகளும், கொடிகளும், பறவையினங்களும், ஊர்வனவகை ஜீவராசிகளும் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. அத்தோடு, எப்போதும் இங்கு விவசாயம் நடந்து கொண்டே இருக்கும் என்பதால் பசுமை போர்த்திய வயல்வெளிகள் சூழ்ந்துவிளங்கும் அரிட்டாபட்டி. அதனால்தானோ என்னவோ பல்லுயிர்ச் சூழலின் கண்ணி இன்னும் இறுகப் பின்னிய கண்ணியாகவே காணப்படுகிறது.

நவம்பர் 2020-ல் அரிட்டாபட்டி 'பல்லுயிர் சூழலியல் மண்டலம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 275 வகைப் பறவைகளைப் பறவையியலாளர்கள் இந்தப் பகுதியில் அடையாளம் கண்டிருக்கிறார்கள். ராஜஸ்தானிலும் தமிழகத்தில் அரிட்டாபட்டியிலும் மட்டுமே காணப்படும் 'லகடு வல்லூறு' என்கிற அரியவகைப் பறவையினம் காணப்படுகிறது. இந்த வல்லூறு உருவத்தில் சின்னதுதான். ஆனால், மதுரைத் தமிழில் சொன்னால் 'சண்டியர் மாதிரி' யாரையோ உதைக்கப் போகும் பாவனையில் எப்போதும் பின்புறக் காலைத் தூக்கிக்கொண்டே நிற்குமாம். அதனால், உள்ளூர் மக்கள் இவரை 'சண்டியர்' என்றே அன்பாடு அழைக்கிறார்கள்.

அரிட்டாபட்டியின் அமைந்திருக்கும் தருமம் என்கிற குளம் மிகவும் முக்கியமானது. இதையொட்டி இங்கு சுவாரஸ்யமான கதை ஒன்றும் வழங்கப்படுகிறது. முன்னொரு காலத்தில், அரிட்டாபட்டியில் இரு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். நல்லதங்கா அக்கா, இளமநாச்சி (இளமீனாட்சி என்றும் சொல்வார்கள்) தங்கை. அக்காவுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. தங்கைக்குக் குழந்தைகள் இருந்தன. ஒரு நாள் தங்கையின் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நல்லதங்கா சென்றாள். பிள்ளையில்லாத அக்கா தன் பிள்ளைகளைப் பார்த்து கண் வைத்துவிடுவாள் என தங்கை, தன் குழந்தைகளைக் கோழிகளை அடைக்கும் பஞ்சாரத்துக்குள் போட்டு மூடி வைத்துவிட்டாள். இதை நல்லதங்கா எப்படியோ தெரிந்துகொண்டாள். அவளது மனம் மிகவும் வேதனைப்பட்டது. தன் நிலையைத்தானே நொந்துகொண்டு ஊர் திரும்பினாள். இளமநாச்சி சிறிது நேரத்தில் பஞ்சாரத்தைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தாள். அவள் குழந்தைகள் அனைவரும் கல்லாக மாறியிருந்தார்கள்!

வீட்டுக்குத் திரும்பிய நல்லதங்கா, தருமம் என்றொரு குளம் வெட்டி, இனி, இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்கள் இந்தக் குளத்தில் நீரெடுத்து சமைத்தால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்று வரம் கொடுத்தாராம்.

இந்த தருமத்துக்குளத்தில் அக்காவின் புடைப்புச் சிற்பமும், குளத்தின் கரையில் ஏழு கன்னிமார் சிலைகளும், இன்னொரு புறம் குழந்தையும், தாயும் இருக்கிற சிலைகளும் உள்ளன. இன்றைக்கும், இந்த ஊருக்குத் திருமணமாகி வருகிற புதுப்பெண்கள், ஊருக்குள் வந்த அன்று அதிகாலையில் குளித்து, தருமம் குளத்தில் விளக்கேற்றி, வழிபட்டு, ஒரு குடம் தண்ணீர் எடுத்து, தங்களின் முதல் சமையலைத் தொடங்குகிற வழக்கம் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் குவாரி முதலாளிகள், தொழில் வளர்ச்சி என்ற பெயரில், இந்த ஏழு மலைகளையும் உடைத்தெடுக்க முனைந்தபோது, வரலாற்றின் தொன்மையைக் கொண்டாடும் அரிட்டாபட்டி மக்கள் ஒன்றிணைந்து, வீரம் செறிந்த போராட்டத்தை நிகழ்த்தி, ஊரைக் காத்து நின்றார்கள்.

எக்காலத்திலும் வற்றாத குளமாய், தாமரை பூத்த தடாகமாய் இருக்கும் குளமும், கரையைச் சுற்றி அடர்ந்து வளர்ந்து நிற்கிற மரங்களும், பறவைகளின் கீச்சொலியும் ஏழு மலை பாதுகாப்புச் சங்கம் என்கிற பெயரில் உள்ளூர் இளைஞர்களும் இந்தப் பகுதியைப் பாதுகாக்க எடுக்கிற முயற்சிகளும் மூதூர் மதுரையின் மகுடத்தில் உள்ள இன்னொரு நல்முத்து!

இன்னும் மாறாமல் இருக்கும் வரலாற்றின் தடம் அரிட்டாபட்டி. மதுரைக்கு வருகிறவர்கள் தவறாமல் அரிட்டாபட்டிக்கு வந்து தர்மக்குளத்தையும் லகுலீஸ்வரரையும் சமணர் படுகையையும் சண்டியர் வல்லூறையும் இயற்கை அழகையும் தவறாமல் கண்டு மகிழுங்கள்.

Thanks



No comments: