2000 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா
பண்டிகையின் போது, குற்றமற்ற
ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத்
என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து.
அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த
இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின்
மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
வந்திருக்கிறது. மரணம் என்பது
முடிவல்ல; அதிலிருந்தே உலகிற்கான
விடுதலை தொடங்குகிறது.
மரணத்தின் அர்த்தத்தை மாற்றி
எழுதியது இயேசுவின் மரணம்.
தேவ ஆட்டுக்குட்டி
தங்களது பாவங்கள், குற்றங்கள்,
குறைகள் ஆகியவற்றை மன்னிக்கும்படி
கடவுளிடம் கெஞ்சும் மனிதர்கள் ஆடு
அல்லது மாடு ஒன்றை பலி
செலுத்துவதை பாரம்பரியமாகச்
செய்து வந்தனர். உலகின் எல்லா
நாகரிகங்களிலும் இந்த பரிகாரப்
பலியைக் காணமுடியும். இவ்வாறு
ஒருவர் தவறுக்கு மற்றொரு உயிரை
பலியாகத் தரும்போது அது ஆடு
எனில் அதை ’ பலியாடு’ என்று
அழைக்கும் வழக்கம் இன்றும் இருப்பதை
அவதானிக்க முடியும்.
இயேசுவை ’தேவ ஆட்டுக்குட்டி’ என்று
அழைக்க, மனிதர்களின் பாவங்களுக்கு
பலியாக தனது இன்னுயிரை அவர்
ஈந்ததே காரணம். இந்த உயிர் ஈகையை
விவிலியத்தின் கண்ணோட்டத்தில்
பார்க்கும் அதேநேரம், இயேசு வாழ்ந்த
காலக்கட்டத்தின் வரலாற்றுப்
பின்னணியில் நோக்கும்போது
இன்னும் பல புனித உண்மைகளைப்
புரிந்துகொள்ள முடியும்.
யூத மதத்தின் வீழ்ச்சி
இயேசு பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட
காலகட்டத்தில் யூதமதத்தில் பல
பிரிவுகள் தோன்றி யிருந்தன.
அதற்குக் காரணம் எருசலேமின் வீழ்ச்சி.
முதல் நூற்றாண்டின் யூத
வரலாற்றாசிரியர் ஜொஸிஃபசின்
(Josephus) ‘யூத தொன்மையியல்
வரலாறு (Antiquities of the Jews c. 94) என்ற
வரலாற்று நூல் நமக்கு இதை எடுத்துக்
கூறுகிறது.
இயேசுவின் காலகட்டத்தில் யூத
மதத்தின் அதிகார மட்டத்தில் யூத
ஆட்சியாளர்களுக்குச் சமமாக ஆதிக்கம்
செலுத்தி வந்த இரண்டு உயர் வர்க்கப்
பிரிவினர் பரிசேயர்கள் மற்றும்
சதுசேயர்கள். மதத்தின் பெயரால்
பொதுமக்களை மிரட்டி
கைப்பாவைகளாக தங்கள் கட்டுக்குள்
வைத்திருந்த இவர்களே இயேசுவை
’மேசியா’( மக்களை மீட்டுக் காக்க வரும்
வலிமை மிக்க அரசன் என்பது பொருள்)
என்று சாமன்ய யூத மக்கள் அவரை
அழைப்பதற்கு ஆட்சேபணை
தெரிவித்தவர்கள்.
யூத மதத்தை பல்வேறு
பிரிவுகளாக்கி நீர்த்துப்போகச் செய்த
சதுசேயர்களையும் பரிசேயர்களையும்
பற்றிக் குறிப்பிடும் ஜொஸிஃபஸ்,
இவர்கள் கிரேக்கப் பண்பாடு மற்றும்
தத்துவத்தில்
மூழ்கிக்கொண்டிருந்ததை எடுத்துக்
காட்டுகிறார்.
செலூக்கிய ஆட்சியாளர்கள்
எருசலேமை வென்றபோது பரலோகத்
தந்தையின் வீடாகிய எருசலேம்
ஆலயத்தைக் கைப்பற்றி அதில் ஜியஸ்
கடவுளின் சிலையை பிரதிஷ்டை
செய்தபோது கிரேக்க மதத்திற்கும்
யூத மதத்திற்கும் இடையிலான
வெறுப்பும் இறுக்கமும் அதன் உச்சத்தை
எட்டியது. யூதா மக்கபே என்ற யூதத்
தலைவர் இதைச் சகித்துக் கொள்ள
முடியாமல் பெரும் படைத்திரட்டி
கிளர்ச்சி செய்து ஆலயத்தை மீட்டார்.
மக்கபேயர்களின் எழுச்சிக்குப் பிறகு
தத்துவங்களின் அடிப்படையில் யூத
மதத்தில் மேலும் பல உட்பிரிவுகள்
தோன்றின. இவை யூத சமூகத்தின்
மீது மேலும் ஆதிக்கம் செலுத்த
போட்டியிட்டன. இவ்வாறு யூத மதம்
கடும் விரிசலை சந்திக்க காரணமாக
இருந்தார்களை ஆராய்ந்தால்
பரிசேயர்களும் சதுசேயர்களும் வந்து
நிற்கிறார்கள்.
பரிசேயர்களும் சதுசேயர்களும்
பரிசேயர்கள் என்ற வார்த்தைக்கு
‘பிரிந்திருப்பவர்கள்’ என்ற
பொருளையும் தருகிறது யூத
மொழியின் மூல அகராதி.
பரிசேயர்கள் சமூக அடுக்கில் கல்வியில்
சிறந்து விளங்கி, வேத நூல்களில்
புலமை பெற்றவர்களாக வாழ்ந்தவர்கள்.
சடங்காச்சாரங்களிலிருந்து தங்களைப்
பிரித்துக் கொண்ட இவர்கள், யூதத்
திருச்சட்டங்களுக்கு விளக்கம்
கொடுப்பதில் புதிய முறையை
உருவாக்கினர்.
அதுவே வாய்மொழிச் சட்டம் என்று
மக்கள் மீது திணிக்கப்பட்டது.
சீமோனுடைய ஆட்சியின்போது
அவர்கள் மேலும் செல்வாக்கு பெற்று
வளர்ந்தனர். மதவிவகாரங்களில்
அரசனுக்கு ஆலோசனை சொல்லும்
மூப்பர்களின் ஆலோசனை சபையில்
இடம்பெறாத பரிசேயர்கள் தங்கள்
செல்வாக்கால் இடம்பிடிக்கத்
தொடங்கினர். அந்த ஆலோசனை
சபையே பிற்பாடு நியாயச் சங்கம்
என்று அழைக்கப்பட்டது.
இந்த நியாயச் சங்கத்திடம்தான்
ரோமானிய ஆளுநரான பிலாத்து,
இயேசுவை ஒப்படைத்து “ இவர்மீது
நான் எந்தக் குற்றமும் காணவில்லை.”
என்று இயேசுவைக் கைகழுவி,
பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின்
பகையை சம்பாதித்துக்
கொள்வதிலிருந்து தப்பித்து தன்
பதவியை தக்க வைத்துக் கொண்டர்.
அதேபோன்று சதுசேயர்கள்
சாலொமோனின் காலத்திலிருந்தே
மதகுருமார்களாக உயர்பதவியில்
இருந்து சேவை என்ற பெயரில்
ஆடம்பரங்களை அனுபவித்து வந்தவர்கள்.
மக்கள் மீது கடும் செல்வாக்கைச்
செலுத்தி வந்தவர்கள். இந்த இரண்டு
தரப்பினருமே புனிதம் என்ற பெரில்
யூத மதத்தை கீழான கோட்பாடுகளின்
கூடாரமாக மாற்றினர்.
இயேசு மீது வன்மத்தை விதைத்தது எது?
பிறப்பால் யூதரான இயேசு, பரலோகத்
தந்தை கையளித்த கட்டளைகளை மீறி
நடந்துகொண்டிருந்த யூத மதப்
பழக்கவழக்கங்களையும்,
ஒழுங்கீனங்களையும் எதிர்த்து
விமர்சித்தார். யூதம் கற்பித்த
கீழ்மைகளுக்கு எதிர்நிலையில்
நின்று அவற்றுக்கு மேலானதைப்
போதித்தார். இதனால் இயேசுவின்
போதனைகள் தங்களது
செயல்பாடுகளுக்கும்
வாழ்க்கைமுறைக்கும் எதிரானதாக
இருப்பதை உணர்ந்து அவர் மீது
பரிசேயர், சதுசேயர் மற்றும் உயர்குடி
யூதர்கள் கடுஞ்சினம் கொண்டனர்.
“கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்”
என்பது யூத மதத்தின் கடுமையான
அணுகுமுறை. “எதிரிக்கும் அன்பு
செய் - ஒரு கன்னத்தில் அடித்தால் மறு
கன்னத்தைக் காட்டு”. இது இயேசுவின்
அன்புமுறை. “பாலியல் தொழில்
செய்யும் பெண்ணைக் கல்லால்
அடித்துக் கொல்ல வேண்டும்” என்றனர்
யூதர்கள்.
“உங்களில் பாவம் செய்யாதவன் அவள்
மீது முதல் கல்லை எறியட்டும்” என்று
கூறி மன்னிப்பை போதித்தார்
இயேசு. யூத இனம் தவிர மற்ற
இனங்களெல்லாம் கீழானவை என்று
தீண்டாமையை போதித்தது யூதம்.
ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர்
வாங்கி அருந்தி அனைவரும் சமம்
என்றார் இயேசு.
மத குருக்கள் மன்னர்களுக்கு
சமமானவர்கள் - அனைவரையும் விட
உயர்ந்தவர்கள் என்றது யூத மதம். ஆனால்
தன் சீடர்களின் கால்களை கழுவி
முத்தமிட்டு “உங்களில் தலைமை தாங்க
விரும்பும் யாரும் முதலில்
எல்லோருக்கும் பணியாளாக இருந்து
தொண்டு செய்ய துணிவு இருக்க
வேண்டும்” என்றவர் இயேசு.
பெரு நோயாளிகளை ஊரைவிட்டு
ஒதுக்கி வைத்தது யூத மதம்.
இயேசுவோ அவர்களை குணமாக்கி
சமூக நீரோட்டத்தில் இணைத்தார்.
கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும்
பாவமே காரணம். அதை மன்னிக்கும்
உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு
என்றது யூத மதம். இயேசுவோ தானே
பாவங்களை மன்னித்து குணமளித்தது
யூதர்களைக் கொதித்தெழச் செய்தது.
தந்தையின் விருப்பம்
நாளை புனித வெள்ளி. இயேசு
நமக்காக கொடூரமான மரணத்தை
ஏற்றுக்கொண்ட தினம். சீர்திருத்த
ஞானத்தைப் போதித்து ஒரு
தலைசிறந்த குருவாக விளங்கி,
பாவங்களை மன்னித்து
நோய்களிலிருந்து மக்களை
விடுவித்து வாழ்வளித்தவர் இறைமகன்
இயேசு. அவர் யார் என்ற கேள்விக்கான
பதில் அவரது மரணத்தின் மூலமாகவே
முழுமையாக வெளிப்படுகிறது.
மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாத
நிலையில், தம் சீடராலும் கைவிடப்பட்ட
நிலையில், பலவித துன்பங்களுக்கு
ஆளாக்கப்பட்ட நிலையில் இயேசு
நிலைகுலையாமல், தாம் ஆற்ற வந்த
பணியை நிறைவேற்றுவதிலேயே
முனைப்புடன் இறுதிவரை நின்றார்.
தாம் மனிதனாகப் பிறந்து வந்ததன்
நோக்கம் என்னவென்பதை அவரே
அறிவித்திருந்தார்: “மானிடமகன்
தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத்
தொண்டு செய்வதற்கும் பலருடைய
மீட்புக்காகத் தம் உயிரைக்
கொடுப்பதற்காகவுமே வந்தார்.
(மாற்கு 10:45). இவ்விதம் அவர்
தந்தையின் விருப்பத்தை
நிறைவேற்றினார்”(மாற்கு 14:36).
Thanks...
http://m.tamil.thehindu.com/society/spirituality/புனித-வெள்ளி-மரணம்-என்பது-முடிவல்ல/article7061195.ece
No comments:
Post a Comment