Pages

மனிதரும் தெய்வமாகலாம்!

ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம்
குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப் பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம் சென்றனர் மக்கள். அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது, 'அது தன் நிலமே...' என வாதாடினான் மன்னன். பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, 'உண்மையை வெளிக்கொண்டு வர உன்னைத் தவிர வேறு கதியில்லை...' என்று மனமுருகி வேண்டினர் மக்கள்...

மக்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவன், மாறு வேடத்தில் சென்று, பேரரசரிடம் முறையிட்டார். பேரரசரும் குறுநில மன்னனை வர வழைத்தார். அவரிடம் சிவன், 'மன்னா... உன் நிலம் எப்படிப்பட்ட தன்மையுடையது?' என்று கேட்டார். அதற்கு மன்னன், 'அது வறண்ட பூமி...' என்றான்.
அதை மறுத்த சிவன், 'பேரரசே..... அது செழிப்பான நிலம்; சந்தேகம் என்றால், நிலத்தை தோண்டுங்கள்; தண்ணீர் வரும்...' என்றார்.
அதன்படி நிலத்தை தோண்ட, நீர் வெளிப்பட்டது. குறுநில மன்னன் தலை குனிந்தான். மக்களிடமே நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர்.
தன் பக்தர்களை ஏமாற்ற எண்ணியவர்களுக்கு, 'தண்ணி' காட்டிய சிவன் அருளும் இடம் தான், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில். இக்கோவிலுக்கு திருப்பணி செய்தவர் மாணிக்கவாசகர்.
சிற்பத்திற்கு சிறப்பு பெற்ற இக்கோவிலின் மூலவர் ஆத்மநாதர். இவரை சிலை வடிவில் தரிசிக்க முடியாது. காரணம், அரூபம் எனப்படும் உருவமற்ற நிலையில் உள்ளார். மூலஸ்தானத்தில். இவர் இருக்குமிடத்தை அடையாளம் காட்ட, குவளை ஒன்றை வைத்திருப்பர்.
இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில், அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவனின் சிற்பம், தத்ரூபமாக வடிக்கப் பட்டிருக்கும். மண்டபங்களில் உள்ள தாழ்வாரம், முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல் அமைக்கப்பட்டுள்ளது. கல் வேலையா, இரும்பு வேலையா என்று அறிய முடியாதபடி, சிற்பிகள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர்.
பொதுவாக, கோவில்கள் கிழக்கு நோக்கி இருக்கும். அரிதாக சில தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்திருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில், தெற்கு நோக்கி உள்ளது. சிவன், குருவாக தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை, 'தட்சிணாமூர்த்தி' என்பர். இங்கு அவர், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
மதுரையில் ஆட்சி செலுத்திய அரிமர்த்த பாண்டியன், திருவாதவூரார் என்ற அமைச்சரை, குதிரைப் படைக்கு குதிரை வாங்க அனுப்பினார். அமைச்சர் ஆவுடையார்கோவிலை அடைந்த போது, குரு வடிவில், அவருக்கு காட்சி அளித்தார் சிவன்.
இதையடுத்து, அங்கேயே தங்கிவிட்ட வாதவூரார், குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தை கோவில் திருப்பணிக்கு செலவிட்டார். இதை அறிந்த மன்னன், அவருக்கு பல்வேறு தண்டனைகள் கொடுத்தார். இறுதியில், சிவனருளால், உண்மை தெரிந்து கொண்டான் மன்னன்.
சிவன், தன்னை ஆட்கொண்ட விதத்தை உருக்கமாக பாடினார் வாதவூரார். அதுவே, 'திருவாசகம்' ஆனது. இதன் அடிப்படையில் அவர், 'மாணிக்கவாசகர்' என பெயர் பெற்றார்.
இவர் ஒரு பக்தராயினும், சிவனாகவே கருதி, ஆனி உத்திர திருவிழா இவருக்கு கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில், சிவனுக்கு பதிலாக மாணிக்கவாசகர் எழுந்தருள்வார். ஜூன் 24ம் தேதி நடக்கும் உபதேசக் காட்சி முக்கியமானது. நம் எல்லாருக்குள்ளும் தெய்வத்தன்மை இருக்கிறது; இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தினால், அனைவருமே தெய்வமாகலாம்!

தி.செல்லப்பா
Thanks... 
 

No comments: