மரபணுத் திருத்தம் மூலம் எச்.ஐ.வி வைரஸ் மற்றும் மரபணுக்களை நிச்சயமாக நீக்கமுடியும்: - ஆய்வில் வெற்றி!!

ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது.

  
பின்னர் சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயானது எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூலமாக ஏற்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை பல கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். உதாரணமாக, கடந்த 2014–ம் ஆண்டில் சுமார் 3.69 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயுடன் வாழ்வதாகவும், சுமார் 12 லட்சம் பேர் எய்ட்ஸ் நோய் காரணமாக இறந்துள்ளனர் என்றும் கூறுகிறது ஒரு புள்ளி விவரம்.
மனித சமூகத்தை பல்வேறு தளங்களில் உலுக்கிப்போட்ட எய்ட்ஸ் நோயை குணப்படுத்த எச்.ஐ.வி. வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் நூற்றுக்கணக்கான மருந்துகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. ஆனாலும் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக வெற்றிகரமாக செயல்படும் மருந்தைக் கண்டறியும் ஆய்வுப்பயணம் இன்னும் தொடர்ந்து வருகிறது.
அந்த வரிசையில், அமெரிக்காவில் உள்ள டெம்புல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கமெல் கலீலி தலைமையிலான ஆய்வுக்குழு உலகில் முதல் முறையாக, மரபணுத்திருத்த தொழில்நுட்பமான கிறிஸ்பர் (CRISPR) மூலம் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான விலங்குகளின் மரபுத்தொகையில் இருந்த எச்.ஐ.வி. மரபணுக்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
‘ஜீன் தெரபி’ என்னும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வானது எலிகள் மற்றும் சுண்டெலிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில் எலிகளின் உடலிலுள்ள எல்லா உயிரணுக்களிலும் எச்.ஐ.வி. மரபணுக்கள் இருக்கும்படியான நிலையை உருவாக்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கிறிஸ்பர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எலிகளின் மூளை, காது, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், மண்ணீரல் மற்றும் ரத்தம் உள்ளிட்ட எலிகளின் உடலிலுள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு பரவியிருந்த எச்.ஐ.வி. வைரஸ் மரபணுக்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளது கமெல் கலீலியின் ஆய்வுக்குழு.
முக்கியமாக, இதே ஆய்வுக்குழு, கடந்த 2014–ம் ஆண்டில் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்களில் உள்ள எச்.ஐ.வி. மரபணுக்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது எச்.ஐ.வி. தொற்று கொண்ட ‘உயிருள்ள’ விலங்குகளின் உடலில் இருந்து கிறிஸ்பர் மூலம் எச்.ஐ.வி. மரபணுக்களை நீக்கியுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக கருதப் படுகிறது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயாளிகளின் உடலில் இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் மரபணுக்களையும் நிச்சயமாக நீக்கமுடியும் என்ற நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. மிக முக்கியமாக, இந்த ஆய்வில் சுமார் 50 சதவீதம் உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வி. மரபணுக்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எச்.ஐ.வி. மரபணுக்களை நீக்கும் இந்த கிறிஸ்பர் தொழில்நுட்பமானது மனித நோயாளிகளை குணப்படுத்தும் அளவுக்கு வளர்ந்து மருத்துவமனைகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்பொழுது மிகவும் சிக்கலானதாக இருக்காது என்கிறார் கலீலி. மாறாக நோயாளிகள் மருத்துவமனைக்கு கூட வராமல் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கூட மேற்கொள்ளும் அளவுக்கு மிகவும் வசதியான ஒரு தொழில்நுட்பமாக இருக்கும் என்று ஆச்சரியப்படுத்துகிறார் கலீலி.
இந்த கிறிஸ்பர் தொழில்நுட்பமானது எச்.ஐ.வி. மரபணுக்களை மட்டும் மிகவும் துல்லியமாக நீக்குவதால் உடலில் எந்தவிதமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்திதானே!


No comments: