Showing posts with label தேவர் எம்.ஜி.ஆர் சக்ரபாணி. Show all posts
Showing posts with label தேவர் எம்.ஜி.ஆர் சக்ரபாணி. Show all posts

ஜெயலலிதாவின் அங்கிள்! எம்.ஜி.ஆரின் கோபம்

‘குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார்.

‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் எம்.ஜி.ஆரை அழைத்து அவர் அருகே அமரச் சொன்னார். உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் மிஸ்டர். எம்.ஜி.ஆர். மட்டும் சிரிக்கவில்லை.


‘என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்! சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும்? இப்படி உம்முன்னு இருக்கீங்களே’ என்றேன்.

‘உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும்? கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்’ என்றார் பட்டென்று.

எல்லோரும் என்னேயே பார்த்தார்கள் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. பிறகுதான் எனக்கு மிஸ்டர் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்குமிடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு அவர் சிரிக்காததற்குக் காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்னா, அந்தக் கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லையா, அதனாலதான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார்கள்.

நான் வியந்தேன்.

ஒரு சாதாரண விஷயத்தில்கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். அன்று ஒரு சிறிய குழுவில் கூட தான் மட்டும்தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார். அன்றிலிருந்து அவர் வளர்த்துக் கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காணுகிறேன். அந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன். ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் சிரிப்பார். பதிலுக்கு நானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பேன்.

டைரக்டர் ராமண்ணா படப்பிடிப்பன்று ‘இன்று நான் புலிச் சண்டையைப் படமாக்கப் போகிறேன். நீங்கள் அதற்குத் தக்கவாறு பழகிக் கொள்ளூங்கள்’ என்றார் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம்.

புலிச் சண்டைக்கான கூண்டுகள் போடப்பட்டன. எல்லோரும் மிஸ்டர் எம்.ஜி.ஆரின் வருகைக்காகக் காத்திருந்தோம். அவர் வரவில்லை. ஒரு மணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. பிறகு வந்தார்.
ஸ்டண்ட மாஸ்டரிடம் ‘ஒன்றும் ஆபத்தில்லையே’ என்றார்.

‘இல்லை சார். மயக்க மருந்து கொடுக்கிறோம்’ என்றார் மாஸ்டர்.

மிஸ்டர். எம்.ஜி.ஆர். புலிக் கூண்டிற்குள் நுழைந்தார். இரு பக்கங்களில் இரு காமிராக்கள் சுழலத் தொடங்கின. புலி படுத்து பாய்வதற்குத் தயாரானது.

நாங்கள் பயத்துடன் மிஸ்டர். எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். புலி மீது வைத்த கண்ணை அவர் எடுக்கவில்லை.
குபீரென அது பாய்ந்தது. எம்.ஜி.ஆர். லாகவமாக கீழே குனிந்து பதுங்கிக் கொண்டார். புலி தொப்பென்று விழுந்தது.

‘கட்’ என்றார் ராமண்ணா.

சமயோசிதமாக எம்.ஜி.ஆர். குனிந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். அவருக்கும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி. உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்தார். அவரை நான் பாராட்டினேன். என் கையைப் பிடித்து அருகில் அமரச் சொன்னார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராமண்ணா பல கோணங்களில் புலிச் சண்டையைப்படமாக்கினார். அதை நான் விவரிக்கக்கூடாது. அது தொழில் ரகசியம். என் அருகிலேயே எம்.ஜி.ஆர். இருந்தார். ஆனால் புலிச் சண்டை மட்டும் படமாகிக் கொண்டிருந்தது.

அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். ‘பாபு இன்று முதல் நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர்” என்றார் எம்.ஜி.ஆர். நானும் ஏற்றுக் கொண்டேன்…’

0

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான் கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

0

எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் ‘அடிமைப் பெண்’(1969) படத்தில் நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படம் இதுதான்.

சுமார் நாலடி உள்ள ஒரு சுவர் மீது ஏறி, ஓடி சந்திரபாபுவும் ஜெயலலிதாவும் தப்பிப்பது போல் காட்சி. ஷாட்டின் போது, சுவர் மிகவும் சேதப்பட்டிருந்ததால், முன்னால் ஓடிய சந்திரபாபு நிலை தடுமாறி கீழே விழப் போக தாங்கிப் பிடித்தார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பில் பிரேக் விடப்பட்டது.

உணவு இடைவேளையில் சந்திரபாபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கு வரவேண்டிய உணவு வரவே இல்லை.

“என்ன சாப்பிடலையா?” என்றார் எம்.ஜி.ஆர் சந்திரபாபுவிடம்.

“சாப்பாடு இன்னும் வரலை!”

“அது வரட்டும். நீங்க என்னோட சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என தன் சாப்பாட்டை சந்திரபாபுவுக்கு பரிமாறச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“எத்தனையோ தடவை உங்க வீட்டுல விருந்து சாப்பிட்டிருக்கேன். ஆனா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப சுவையா இருந்தது” என்றார் உண்டு முடித்த சந்திரபாபு.

அதன்பிறகு எம்.ஜி.ஆர். சாப்பிடவில்லை. பசியில்லை என்று கூறிவிட்டார். முகத்தை ஒரு மாதிரியே வைத்திருந்தார். படப்பிடிப்பும் துவங்கவில்லை.

சந்திரபாபு ஜெயலலிதாவிடம் என்ன விஷயம் என தனியாக விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியானார் சந்திரபாபு.

படப்பிடிப்பில் தடுமாறி விழப் போன சந்திரபாபுவை ஜெயலலிதா தாங்கிப் பிடித்ததை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையாம். அதுதான் அவர் மூட்-அவுட் ஆகக் காரணமென தெரிந்து கொண்ட சந்திரபாபுவும் சங்கடத்துக்குள்ளானார். காரணம் ஜெயலலிதாவின் தாயாரின் சகோதரியான வித்யாவதி, சந்திரபாபு எல்லோரும் குடும்ப நண்பர்கள். அவர்களின் வீட்டுக்கு சந்திரபாபு செல்லும் போது, ‘அங்கிள்’ என அழைத்தபடி ஓடி வந்து சந்திரபாபுவுடன் பேசுவார், சிறு குழந்தையாக இருந்த ஜெயலலிதா. இதைப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். தவறாக நினைத்துக் கொண்டாரே என வருந்தினார் சந்திரபாபு.

எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்!

‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’

‘எம்.ஜி.ஆர்.’

‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’


‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’
தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.

அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர், நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார். முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’ என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை நம்பினார். 1956 - எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.



எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம் நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.

‘அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா? பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா?’

‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?’

‘பயமா, எனக்கா?’

‘இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…’
தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா? எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்?
தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

‘அண்ணே…’

‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ - எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர் சூடானார்.

‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’

தேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.

*******

தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம் ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின் தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப அண்ணே?’ என்றார் ஜாலியாக.

‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார் கிட்டப் போய் நிக்குறது?’

எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர். வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்?’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.

அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.

சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.
‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார். ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’

எம்.ஜி.ஆர். அடங்கி விட்டார்.