விவாகரத்தின் `மறுபக்கம்'

பார்த்து வாங்கும் ஒரு மாம்பழத்தை சுவையாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஒரு புறத்தில் அழுகிப்போயிருந்ததைக் கண்டால் உடனே தூக்கி தூரவீசிவிடுகிறோம். அதுபோலத்தான் இப்போது திருமண வாழ்க்கையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பிறகும் விவாகரத்து ஏன் ஏற்படுகிறது? என்று ஆராய்ந்தால் விடை எளிதாகவே கிடைத்துவிடும்.


ஒரு காலத்தில் விவாகரத்து என்பது சமூகத்தினரால் கூர்ந்து கவனிக்கக்கூடிய பெரிய சம்பவமாக இருந்தது. ஆனால் இன்று அது வீட்டுக்கு வீடு நடக்கும் சாதாரண சம்பவமாக மாறிக்கொண்டிருக்கிறது. பெற்றோர்களை விட அதிகமாக படித்து விட்ட இளைஞர்கள் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். அந்த வாழ்க்கையில் சந்தாஷம் மட்டுமே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். துயரங்கள் வரும்போது எளிதாக துவண்டு போய் அவசர முடிவு எடுத்துவிடுகிறார்கள்.

இன்றைய அவசர உலகில் நாம் பயன்படுத்துவதில் ``யூஸ் அண்ட் த்ரோ'' பொருட்கள் மிக அதிகம். அந்த பொருட்களை போலத்தான் ஆண்- பெண்ணையும், பெண், ஆணையும் கருதுகிறார்கள். `நாம் விரும்பும்போது திருமணம் செய்துக்கொள்ளலாம். ஏதாவது பிரச்சினை வந்தால் தூக்கி எறிந்துவிடலாம்' என்று நினைக்கிறார்கள். அதன் பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பது குறைவு.

திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல. 2 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இயங்கி, புதுமண தம்பதியினருக்கு பலத்தை கொடுத்து புது தெம்பை அளிக்கிறது. சமூக கட்டமைப்புகளும் அதற்கு துணைபுரிகிறது. ஒரு திருமணத்தில் குடும்பங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறதோ, அதைவிட அதிகமாக ஒரு விவாகரத்தில் குடும்பங்கள் துன்பத்தை சந்திக்கின்றன.

தற்போது விவாகரத்துகள் அதிகரித்துவரும் நேரத்தில், நியாயமான விவாகரத்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஒருவரை புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, அவமானப்படுத்தி, அசிங்கமான காரணங்களைக் கூறி விவாகரத்துக்கு முயற்சிப்பது அதிகரித்து வருகிறது. இது ஒரு தொற்றுநோய் போல உலகெங்கும் பரவி வருகிறது.

இந்திய கலாசாரத்தை பொறுத்தவரையில் திருமணங்கள் என்பது இருவரை உலக வாழ்க்கைக்கு பக்குவப்படுத்தும் ஒரு புனித சடங்கு. நம்முடைய சாஸ்திர முறைகள் அதைத்தான் உணர்த்துகின்றன. ஆனால் இப்போது அவசரத் திருமணங்கள் அதிகரித்து, அவசர விவாகரத்துகளும் பெருகிவிட்டன.

பெண்கள் இப்போது நிறைய படித்து, வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் எதிர்காலத்தை பணம், பதவி, அந்தஸ்தாக மட்டுமே பார்க்கிறார்கள். சாப்பிடுவதும், தூங்குவதும், விதவிதமாக ஆடைகள் அணிவதும், ஆடிப்பாடி கொண்டாடுவதையும்தான் வாழ்க்கை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால் அவர்கள் திருமணத்தின் முக்கியத்தையும், திருமண வாழ்க்கையை காப்பாற்ற பல விதங்களில் முயற்சிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

கணவன், மனைவியில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்துவிடக்கூடாது. எழுந்துவிட்டால் அதில் யாராவது ஒருவர் தாழ்ந்து கொள்ள வேண்டும். ஒருவரின் சுயமரியாதையை கெடுக்கும் விதத்தில் அவமரியாதை செய்யாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

திருமணம் என்பது ஒருவரை ஒருவர் அடக்கி ஆள கொடுக்கும் உரிமை அல்ல. தவறுகளை எடுத்துச் சொல்ல இருவருக்குமே உரிமை இருக்கிறது. ஆனால் அடுத்தவர்கள் முன்னால் வைத்து பகிரங்கமாக தன் இணையை குறை சொல்ல இருவருக்குமே உரிமை இல்லை. அப்படிச் செய்தால் அது அவமானமாகிவிடுகிறது.

திருமணம் கணவன்- மனைவி இருவரின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. நிகழ்காலத்தில் சின்ன, சின்ன வேறுபாடுகளை நீக்கினால் மட்டுமே இருவரும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். வளமான எதிர்காலத்தை பற்றிய சிந்தனையோடு செயல்பட்டால், நிகழ்காலத்தில் உள்ள சின்னச்சின்ன பிரச்சினைகளை எளிதாக களைந்துவிடலாம்.

ஆண், பெண் இருவருக்கும் குடும்பத்தை நிர்வகிப்பதில் பொறுப்பு இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில், நாள் முழுவதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் நேரம் இரண்டு பேருக்குமே அந்த கூட்டுபொறுப்பை நிறைவேற்ற பொறுமை இல்லை.தேவையற்ற டென்ஷன், கோபம், வெறுப்பு போன்றவைகளால் இருக்கும் பொறுமையையும் இழந்து, மல்லுக்கட்ட தயாராகிவிடுகிறார்கள். அதுவே பிரச்சினைகளுக்கும், பிரிவுகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

விவாகரத்து வழக்குகளில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகியவை 2-வது இடத்திலும், கேரளா 3-வது இடத்திலும், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் 4-வது இடத்திலும் உள்ளன.

1 comment:

arul said...

neengal sonnathu mutrilum unmai

dr shalini "uyir moli" thodar moolam

nudpamana ulaviyal prachanaigalai ananda vikatan moolamaga velipaduthi ullar

arumayana katturai