Pages

இதயத்திலும் புற்றுநோய் வரும்!

உடலிலுள்ள உறுப்புகள், பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல, சிறிய செல்கள் அடங்கியது தான் திசு. இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை, உதாரணமாக, தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.

செல்லின் வேலைகள்: இந்த செல்கள் இரண்டு செல்லாக உருவாகி, தேய்மானமடைந்த செல்களை அப்புறப்படுத்தி, அமர்கிறது. செல் பெருக்கம் நடப்பது இயற்கை. செல் இரண்டாக பிரிந்து, பின் அதுவே பன்மடங்காக பெருகி, கட்டியாக வளர்கிறது. இதில் இரண்டு வகை. தொல்லை தராத கட்டியை, "பினைன் கட்டி' என்கிறோம். இக்கட்டியால், எந்தப் பாதிப்பும் இருக்காது. எனினும், அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். "மெலிக்னன்ட் கட்டி' தான், ஆபத்தான கட்டி. பல மடங்கு செல்களாக குட்டி போட்டு, கட்டுக்கு அடங்காத வளர்ச்சியை கொடுத்து, எந்த உறுப்பிலிருந்து வளர்கிறதோ, அந்த உறுப்பை சீரழித்து, உயிரை அழித்து விடுகிறது. இக்கட்டியை ஆரம்பத்திலேயே கட்டுப் படுத்த வேண்டும்.

கேன்சர் வர காரணங்கள்

* சாதாரண நிலையில், செல்கள் தாறுமாறாக வளர்ச்சி கண்டு, டி.என்.ஏ.,வில் மாற்றம் ஏற்பட்டு, செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
* புகைப் பிடிப்பதால், புகையிலையால் ஏற்படும் விளைவு, அளவுக்கு மீறிய மதுப்பழக்கம். ஜங்க்புட்.
* பாரம்பரியத் தன்மை
* பென்சைன் போன்ற ரசாயனப் பொருட்கள்
* அதிக ரேடியோ கதிர்கள் படுதல்
* வைரஸ்இதய புற்றுநோய்கள்
* முதன்மையான புற்று நோய், இதய தசைகளிலிருந்து வருபவை. இவை பினைன் வகை.
* இரண்டாம் நிலை, மற்ற பகுதியில் வந்த புற்றுநோய், இதயத்திற்கு பரவுவதால் வருபவை.
* மூன்றாவது வகை, இதய வால்வுகளில் வரும், "பாப்பிலாரி பைப்ரோயலாஸ் டோமா' என்ற வகை. இதனால் திடீர் மரணம் ஏற்படும்.

இதய கட்டிகளில், "மிக்சோமா' என்ற இடது மேலறையில் வரும் கட்டி தான், பிரசித்தி பெற்றது. இதுதான் வழக்கமாக பெண்களுக்கு வரும். இதை, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறியலாம். 75 சதவீதம், இடது மேலறையில் தான் இந்த கட்டி வரும். வலது மேலறையில் வருவது குறை வே.

மிக்சோமாவின் அறிகுறிகள்: இடது மேலறை மிக்சோமா, "மைட்டிரல் ஸ்டெனோசிஸ்' என்ற ஈரிதழ் வால்வு சுருக்கம் போல இருக்கும். மல்லாந்து படுக்கும் போது மூச்சிரைப்பு, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது மூச்சிரைப்பு, மார்பு வலி அல்லது மார்பு அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், படபடப்பு, சிறிய வேலை செய்தாலும், மூச்சு வாங்குதல் என்பது, பெண்களுக்கு சாதாரணமாக வருவதால், அவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொதுவான அறிகுறிகள்: கை விரல்கள் நீல நிறமாக தோன்றுதல், இருமல், நகங்கள் மேலே தூக்கி இருத்தல், அசதி, தன்னையறியாத எடை குறைவு, முட்டிகளில் வலி, வீக்கம். இந்த அறிகுறிகள், இதய உட்சுவரான எண்டோ கார்டியத்தில் ஏற்படும், "எண்டோ கார்டைட்டிஸ்' என்ற நோய் போல இருக்கும். எண்டோ கார்டைட்டிஸ், விபரீதமான நோய்; கண்காணிக்க வேண்டும். வலது மேலறை மிக்சோமா, எந்தவித தொல்லை இல்லாமல், 15 செ.மீ., (5 அங்குலம்) வரை வளர்ந்து விடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் நோயாளி வலம் வருவார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம், வெட்டி எடுக்க வேண்டும். அப்படி சரிவர எடுக்காவிட்டால், திரும்பவும் வரும்.

முக்கிய பரிசோதனைகள்: எக்கோ கார்டியோ கிராம், இ.சி.ஜி., டாப்ளர் பரிசோதனை, எம்.ஆர்.ஐ., இதய ஊடுறுவல் பரிசோதனைகள், ஆஞ்சியோகிராம்.

மிக்சோமாவின் விளைவுகள்: தக்க சிகிச்சை செய்யாவிட்டால், இந்த மிக்சோமாவிலிருந்து கட்டிகள் வெளியேறி, மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தை அடைத்து, பக்கவாதம் உண்டாகலாம். மேலும், கண், கால் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு கட்டியாக வளரலாம். இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில், மரணம் ஏற்படலாம்.
இதய துடிப்பு மாறுபாடு, நுரையீரலில் நீர் சேர்தல், பல பாகங்களில் ரத்த குழாய் அடைப்பு ஆகியவை, ஈரிதழ் வால்வை முழுவதுமாக அடைத்து, மரணத்தை வரவழைக்கும். இந்த கட்டி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

- டாக்டர் அர்த்தநாரி,
எஸ்.ஏ.,ஹார்ட் கிளினிக், சென்னை.

No comments: