சத்திய சோதனை என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூலுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.
காந்தியின் கருத்து
சுயசரிதை எழுத வேண்டும் என்பது காந்தியின் நண்பர்கள் கூறிய யோசனையாகும். அதன் விளைவாக பம்பாய் கலவரத்திற்கு முன்னால் தொடங்கிய இந்தச் சுயசரிதை எழுத்துப் பணி எராவ்டாவில் சிறைவாசத்திருந்த போதில் நிறைவு பெற்றது. இம்முயற்சியில் இறங்க நீங்கள் எப்படித் துணிந்தீர்கள்- என்னும் நண்பர் ஒருவரின் கேள்விக்கு, ‘சுயசரிதை எழுதுவது என்பது மேற்கத்திய நாட்டினர்க்கே உரிய பழக்கம். கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாட்டு வழக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாருமே சுயசரிதை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறாயினும் இது முற்றிலும் வேறாக இருக்கும்’ என்று காந்தி இவ்வாறு கருத்து வழங்கினார். இது இந்த நூல் தோன்றுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.
‘சுயசரிதை எழுதுவது என்பதல்ல என் நோக்கம். நான் நடத்தி வந்திருக்கும் சத்திய சோதனைகள் பலவற்றின் கதைகளைச் சொல்லவே விரும்புகிறேன். என் வாழ்க்கையிலும் இந்த சோதனைகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆகையால் இக்கதை ஒரு சுயசரிதையாகவே அமையும் என்பது உண்மை’ என்று சத்திய சோதனை எழுதுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்
மகாத்மா பட்டம் குறித்து...
உலக மக்கள் காந்தியை அவதாரம் என்றும் மகாத்மா என்றும் போற்றினர். ஆனால், காந்தி அதைக்குறித்து இவ்வாறு விளக்குகிறார். நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு நாகரிக உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
சத்திய சோதனை குறித்து
நான் விரும்புவதும் இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும் என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும், கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும் மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன். ஆனால் ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும் என்பதை நெடுகிலும் நம்பி வந்திருக்கிறேன்.ஆகையால் என்னுடைய சோதனைகளை ஒளிவுமறைவாகச் செய்யாமல் பகிரங்கமாகவே செய்து வந்திருக்கிறேன். இதனால் அவற்றின் ஆன்மிக மதிப்பு எந்த வகையிலும் குறைந்து விட்டதாக நான் கருதவில்லை என்று தான் எழுதிய நோக்கத்தை இவ்வாறு பதிவு செய்கிறார். மேலும் ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிகளை எவ்வளவோ கணக்காகவும் முன் யோசனையின் பேரிலும் நுட்பமாகவும் நடத்துகிறார். ஆனால் அதன் பலனாகத் தாம் கண்ட முடிந்த முடிவுகள் என்று அவர் கொள்ளுவதில்லை. அத்தகைய விஞ்ஞானியின் நிலைதான் என்நிலையும். என்னை நானே ஆழ்ந்து சோதித்து வந்திருக்கிறேன். என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். நான் எழுதப் போகும் இந்த அத்தியாயங்களுக்கு நான் செய்த சத்திய சோதனையின் கதை என்று தலைப்புக் கொடுத்திருக்கிறேன். அகிம்சை, பிரம்மச்சரியம், முதலிய ஒழுக்க நெறிகளைப் பற்றிய சோதனைகளும் இவற்றில் அடங்கியிருக்கும் என்று வரையறுத்துக் காட்டுகிறார்.
காந்தியின் சத்திய ஈடுபாடு
கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு இன்னும் கிட்டவில்லை. ஆயினும் அவரைத் தேடிக்கொண்டே இருக்கிறேன். இம்முயற்சியில் வெற்றி பெறுவதற்காக, எனக்கு இனியதான எதையுமே தர்க்கஞ்செய்துவிடத் தயாராயிருக்கிறேன். என் உயிரையே இதற்காகத் தியாகஞ் செய்து விட வேண்டியிருந்தாலும் அதைக் கொடுக்கவும் நான் தயாராக இருப்பேன் என்றே நம்புகிறேன் என்று உறுதி கூறுகிறார் காந்தி.
சத்தியமே எனக்கு வழிகாட்டும் ஒளியாகவும் பாதுகாக்கும் கேடயமாகவும் மார்புக் கவசமாகவும் இருந்தாக வேண்டும். இந்தச் சத்தியவழி நேரானதாகவும் குறுகலானதாகவும் கத்தி முனையைப் போல் கூர்மையானதாகவும் இருந்தபோதிலும் இதுவே எனக்கு மிகச் சீக்கிரத்தில் செல்லக்கூடிய, மிக எளிதான வழியாக இருந்து வந்திருக்கிறது என்று தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்கிறார்.
சத்திய சோதனை நூலின் உள்ளடக்கம்
சத்தியசோதனை நூல் ஐந்து பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
காந்தி தனது சுயசரிதையைத் தனது தாய்மொழியான குஜராத்தி மொழியிலேயே எழுதினார். பின்னர் அது உலகின் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்று உலகப் புகழ்பெற்ற புத்தகங்களின் வரிசையில் முன்நிற்கும் தகுதி பெற்றது. முன்னுரையின் முடிவில் காந்தி 26, நவம்பர் 1925 என்னும் தேதியிட்டு சபர்மதி ஆசிரமம் என்னும் இடத்தையும் குறித்துக் கையொப்பம் இட்டுள்ளார். நிறைவாக அவர், அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெற்றிருக்கச் செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால் நான் இன்னும் கடக்க வேண்டிய மிகக் கஷ்டமான பாதை என் முன்னால் இருக்கிறது என்பதை அறிவேன். என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டு விட வேண்டும். தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக் கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது. அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும். மனம், வாக்கு, காரியங்களில் அகிம்சை விரதத்தை எனக்கு அருளுமாறு சத்தியமேயான கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அந்தப் பிரார்த்தனையில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு வாசகரைக் கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்கிறேன் என்று தனது சத்தியசோதனையை நிறைவு செய்திருக்கிறார்.
Thanks...
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)
No comments:
Post a Comment