இன்று மொகரம். இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் இது. ஜனநாயகத்தின் சிறப்பை, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக நபிகளாரின் பேரர் ஹலரத் ஹுசைன்(ரலி) அவர்கள், கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு இந்த மொகரம் பத்தாம் நாளில் தான் அரங்கேறியது.
நபிகளார் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனித்த சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து, மூஸா(அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் அல்லாஹ் ஈடேற்றம் பெற வைத்த சிறப்பு இந்த மாதத்திற்கு இருக்கிறது. மொகரம் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களும் நோன்பு நோற்றார்கள். நபிகளாரின் வாக்கின்படி மொகரம் மாதத்தின் 9 மற்றும்10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும், இந்நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய பாவங்களைப் போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.