புனிதம் மிக்க மொகரம்

இன்று மொகரம். இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் இது. ஜனநாயகத்தின் சிறப்பை, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக நபிகளாரின் பேரர் ஹலரத் ஹுசைன்(ரலி) அவர்கள், கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு இந்த மொகரம் பத்தாம் நாளில் தான் அரங்கேறியது.


நபிகளார் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனித்த சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. பிர்அவ்னையும்,  அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து, மூஸா(அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் அல்லாஹ் ஈடேற்றம் பெற வைத்த சிறப்பு இந்த மாதத்திற்கு இருக்கிறது. மொகரம் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களும் நோன்பு நோற்றார்கள். நபிகளாரின் வாக்கின்படி மொகரம் மாதத்தின் 9 மற்றும்10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும், இந்நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய பாவங்களைப் போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டுமெனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள். இந்தமாதத்தின் பத்தாம் நாளில் ஹலரத் ஹுசைன்(ரலி) அவர்களின் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்களைக் கொண்ட கூட்டங்களும், புத்தகங்கள் வெளியிடுவதுமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மொகரம் நாளில் பல்வேறு அற்புத நிகழ்வுகள் நடந்திருக்கிறது. ஆஷுரா(பத்தாம்) நாளில் தான், நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலை பெற்றார். இப்ராஹிம்(அலை) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு "கலீல்' எனும் பட்டம் அல்லாஹ்வினால் சூட்டப்பட்டதும் இந்நாளில் தான் நிகழ்ந்தது.


ஹலரத் அய்யூப்(அலை) அவர்கள் நோயிலிருந்து குணம் பெற்றதும் இந்த புனித நாளில் தான்! மூஸா(அலை) அவர்கள் மட்டுமல்லாது ஹாருன்(அலை) அவர்களின் இறைஞ்சுதலும் இந்நாளில் தான் ஏற்கப்பட்டது. இதே நாளில் தான் ஈஸா(அலை) அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டார்கள். உலகின் முதல் மனிதர்கள் எனப்படுகிற ஆதம்(அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் படைக்கப்பட்டதும் இந்நாளிலே தான். நூஹ்(அலை) அவர்கள் கப்பலில் இருந்து கரையிறங்கியதும், யூனூஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்தநாளில்தான் நடந்தது. தாவூத்(அலை) அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்கப்பட்டதும், சுலைமான்(அலை) அவர்கள் அரசாங்கம் மீண்டதும் இந்த நாளில் தான். இந்தநாளில் தான் உலகம் முடிவுறும் என நபிகளாரே அறிவித்து உள்ளது இந்நாளுக்கு உரிய பெரும் சிறப்பாகும்http://www.dinamalar.com/News_Detail.asp?Id=147275

No comments: