Pages

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 15-11-2011 முதல் 2-11-2014 வரை

ஜோதிடர் சந்திரசேகர பாரதி வழங்கும்

நீலாஞ்ஜன ஸமாபாசம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
இதுவரையிலும் கன்னியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான் 15-11-2011 முதல் துலா ராசிக்கு இடம் மாறுகிறார்.

16-5-2012 வக்கிரமாக கன்னியா ராசிக்குப் போய் 5-8-2012 முதல் மீண்டும் துலா ராசிக்கு வருகிறார். 2-11-2014 வரை துலாத்திலேயே உலவுவார்.
சனி இம்முறை மூன்று முறை வக்கிரமாக சஞ்சரிப்பதால் வழக்கமாக இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் உலவும்சனியானவர் மூன்றாண்டுகள் துலாத்தில், தன் உச்ச ராசியில் உலவப் போவதால் பொதுவாக சுப பலன்களே அதிகம் உண்டாகும்.
சனீஸ்வரர் நீதிமான் ஆவார். அவர் தராசு எனும் துலா ராசியில் உலவுவதால் தர்மம், நியாயம், நீதி ஆகியவற்றின்படி செயல்படுபவர்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்.
துலா சனி சட்டம், அரசியல், சமுதாய நலப்பணி, மத்தியஸ்தர், தரகர், அம்பயர், மனித வள மேம்பாடு, வீட்டு அலங்காரம், புகைப்படக்கலை, டிசைனர், கலை, ஒப்பந்தப்பணிகள், பிஸினஸ் சம்பந்தப்பட்ட இனங்கள், திட்டமிடுதல், பலருடன் சேர்ந்து செய்யும் பணி, எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு, கறுப்பு நிறப்பொருட்கள், பூமி, பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள், நிலக்கரி, பழைய பொருட்கள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் பெற வைப்பார்.

இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு 6-லும், சிம்மத்துக்கு 3-லும், தனுசு ராசிக்கு 11-லும், மகர ராசிக்காரர்களுக்கு 10-லும் சனி அதிபலத்துடன் உலவுவதால் விசேடமான நற்பலன்கள் உண்டாகும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு 7-ல் கண்டகச் சனியாக உலவுவதால் சிறப்பாகாது.
மிதுன ராசிக்காரர்களுக்கு 8-ஆம் வீட்டோன் 5-ல் உலவுவதால் சங்கடங்களும் அவரே 9-ஆம் வீட்டோன் ஆவதால் நற்பலன்களும் உண்டாகும். என்றாலும் சுப பலன்களே அதிகம் உண்டாகும் என்று சொல்லலாம்.
கடகத்துக்கு அர்த்தாஷ்டம சனியின் காலம். விசேடம் இல்லை.
கன்னிக்கு ஏழரைச் சனியில் கடைசிக் காலம் என்பதாலும், சனி உச்ச ராசியில் இருப்பதாலும், ராசிநாதன் புதனுக்கு சனி நட்புக் கிரகமாகி, சுக்கிரனின் வீட்டில் உலவுவதாலும் நலம் புரிவார். 5-ஆம் வீட்டோன் என்ற வகையில் நலம்புரியும் சனி 6-ஆம் வீட்டோனும் ஆவதால் சில இடர்ப்பாடுகளையும் உண்டுபண்ணுவார்.
துலாத்துக்கு ஜன்மச் சனியின் காலம் ஆரம்பமாகிறது. என்றாலும் சனி துலாத்துக்கு முதல் தர யோக காரகனாகி, ஜன்ம ராசியில் உச்ச நிலையில் சஞ்சரிப்பதால் அதிகம் நன்மைகளே உண்டாகும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. விரயச் சனியின் காலமிது என்பதால் எச்சரிக்கை தேவை கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ஜன்ம ராசிக்கு அதிபதியாகி 9-ல் பலத்துடன் உலவுவது விசேடமாகும். விரயாதிபதியாகி 9-ல் உலவுவதால் சில சங்கடங்களும் அவ்வப்போது ஏற்படவே செய்யும். மீன ராசிக்காரர்களுக்குச் சனி 8-ல் உலவுகிறார். அஷ்டம சனியின் காலமிது. எதிலும் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும்.

பொதுவாக சனி ராசிக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்களில் உலவும்போதே நற்பலன்களைத் தருவார். இதர இடங்களில் இருக்கும்போது கெடுபலன்கள் உண்டாகும்.
ஜாதகப்படி இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை.
மேலும் சனியானவர் ராசிக்குக் கெட்ட இடங்களில் உலவினாலும் கூட அவரவர் ஜன்ம நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9 -ஆம் நட்சத்திரங்களில் உலவும்போது நலம் புரிவார்.
கோசாரப்படி அனுகூலமில்லாத இடங்களில் உலவும் சனி, ஜாதகப்படியும் பலம் இல்லாதவராகி, தசா, புக்தியும் சிறப்பாக அமையாதபோதுதான் கெடுபலன்கள் அதிகம் உண்டாகும். தொழில், ஆயுள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.
அப்படிப்பட்ட ஜாதகர்கள் சனிப் பிரீதி செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
சனிக்குரிய மூல மந்திர ஜபத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்றுச் சொல்லலாம். ஹோமம் செய்யலாம். ஹனுமான் சாலீசா சொல்லி வழிபடலாம். ஹனுமனுக்கு வெற்றிலை மாலை போடலாம். வெண்ணெய் சாற்றலாம். அர்ச்சனை செய்யலாம். தினமும் காலை வேளையில் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம்; கேட்கலாம். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவிகள் செய்யலாம். கறுப்பு, கருநீலப் பொருட்கள், எள், இரும்பு, நல்லெண்ணெய், புனுகு, தானம் செய்வது சிறப்பாகும். காகத்துக்கு அன்னத்துடன் எள் கலந்து வைக்கலாம். வன்னி சமித்தால் ஹோமம் செய்வது சிறப்பாகும்.
''ஓம் ஐம் ஸ்ரீம் சனைஸ்ச்சராய நமஹ" என தினமும் காலை வேளையில் 108 முறை சொல்வது நல்லது.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி உள்ளவர்களும், ஜாதகத்தில் சனி பலம்
குறைந்திருப்பவர்களும், சனி தசை நடப்பில் உள்ளவர்களும் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, குளக்கரையில் உள்ள விநாயகரை வழிபட்ட பின்பு, ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரையும் அம்பிகையையும் வழிபட்டு, சனிக்கு எள் தீபம் ஏற்றி, அபிஷேக, அர்ச்சனை செய்து வரவேண்டும்.
சனி காயத்ரி மந்திரம்:
ஓம் காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: பிரசோதயாத்.
தினமும் காலையில் 108 முறை சொல்வது நல்லது.
சனி த்யான ஸ்லோகம்:
நீலாம்பரோ நீலவயு: க்ரீடி க்ருத்ரஸ்தித: த்ராஸகர:
தனுஷ்மாந் சதுர்புஜ: சூரிய ஸுத: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத ப்ரஸந்த
சனீஸ்வர அஷ்டோத்தரத்தையும் சொல்லலாம்.
வன்னி மரத்தை சனிக்கிழமைகளில் சுற்றி வந்து பூஜை செய்யலாம்.
சனிக்கிழமை, சனிக்கு உகந்த காலமான சாயங்கால நேரத்தில் (மாலை 6 முதல் 7 மணிக்குள்) சிவாலயத்தில், சனி சந்நிதியில் எள் தீபமேற்றி வைத்து, கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
கோளறு பதிகம் சொல்வதன் மூலமும் நவக்கிரகங்களால் விளையக்கூடிய சங்கடங்களை விலக்கிக் கொள்ளமுடியும். இனி, பன்னிரண்டு ராசிகளுக்கும் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் விளையக்கூடிய பொதுப்பலன்களைக் காண்போம்.


மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு 10, 11-ஆம் இடங்களுக்குரிய சனி 7-ஆமிடத்தில் உலவுகிறார். இது கண்டகச் சனியின் காலமாகும். சனி 10-ஆம் வீட்டோனாகி, 10-க்கு 10-ஆமிடமான 7-ல் தன் உச்ச ராசியில் உலவுவதால் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணம் ஈடேறும். பகுதி நேரத் தொழிலில் ஈடுபட்டு வருமானம் பெற வாய்ப்புக் கூடிவரும்.
சரராசிக்கு அதிபதியான சனி மற்றொரு சர ராசியில் உலவுவதால் வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் விசேடமான ஆதாயம் கிடைக்கும். சனி காற்று ராசியில் இருப்பதால் ஆகாயம் சம்பந்தப்பட்ட இனங்களாலும் ஆதாயம் கிடைக்கும். பயணம் பயன்படும். சொத்துக்கள் சேரும். காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியம் மற்றும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். சனி 11-ஆம் இடமான பாதக ஸ்தானத்துக்கு உரியவராகி 7-ல் உலவுவதால் கணவன் மனைவியிடையே சலசலப்புக்கள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து செல்லவும் நேரலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அவர்களால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். அணுகுமுறையைச் சரிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். 16-5-2012 முதல் 25-6-2012 வரை சனி கன்னியில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். செய்தொழிலும் சீராக இருக்கும். எதிர்ப்புக்கள் குறையும். திறமைக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.
26-6-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும். போக்குவரத்துச் சாதனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதியவர்கள் அறிமுகமாகி, உங்களுக்கு நலம் புரிவார்கள். குறுக்கு வழிகளில் திடீர்ப் பொருள்வரவு உண்டாகும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரப் பயணத்தின் மூலம் பயன் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். மகன் அல்லது மகளின் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். குழந்தைகள் வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ வாய்ப்புக் கூடிவரும். ஆன்மிகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக்காலத்தில் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு யோக காரகனான சனி தன் உச்ச ராசியான துலாத்தில், 6-ஆமிடத்தில் சஞ்சரிப்பது மிக மிக விசேடமானதாகும். எதிரிகளை வெல்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனோபலம் கூடும். தன்னம்பிக்கை பெருகும். நோய்நொடி உபத்திரவங்கள் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். கடன் உபத்திரவம் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொது நலப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் ஆகியோர் வெற்றி நடைபோடுவார்கள். புனிதப் பயணம் மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். விவசாயிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். வழக்கில் வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணைவரின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரலாம்.
16-5-2012 முதல் 25-6-2012 வரை எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தாய் நலம் சிறக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபடுவீர்கள்.
26-6-2012 முதல் 4-11-2013 வரை உடல்நலம் சீராகும். வாழ்க்கை வசதிகள் கூடும். நூதனமான பொருட்களின் சேர்க்கை நிகழும். நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பயணம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். கறுப்பு நிறமுள்ளவர் உங்களுக்கு உதவுவார்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை எதிர்பாராத பொருள் சேர்க்கை நிகழும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.
வாழ்க்கைத்துணைவரின் மூலம் நலம் உண்டாகும். பூர்விகச் சொத்துக்கள் கிடைக்கும்.
மொத்தத்தில் சுபிட்சம் கூடும் காலமிது. 
மிதுனம்:

உங்கள் ராசிக்கு 4-ல் உலவிக் கொண்டிருந்த சனி 5-ஆமிடம் மாறி இருக்கிறார். கோசாரப்படி இது சிறப்பானதாகாது. என்றாலும் சனி உங்கள் ராசிக்கு 8, 9-ஆம் இடங்களுக்கு அதிபதியாகி 5-ல் இருப்பதால் சில நன்மைகளும் உண்டாகும். 8-ஆம் வீட்டோன் 5-ல் இருப்பதால் மக்களால் மன வருத்தம் ஏற்படும். புத்திர சோகமும் உண்டாகும். பிள்ளைகளில் நடத்தை சீராக இராது. அவர்களது கல்வியில் தடை ஏற்படவும் காரணம் உண்டு. கருச்சிதைவு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். கெளரவம், மதிப்பு குறையும். பூர்விகச் சொத்துக்களை இழக்க நேரலாம். 9-ஆம் வீட்டோன் சனி 5-ல் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வப் பணிகள் ஈடேறும். குல தெய்வத்துக்கு ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். நீண்ட காலத் தேவைகள் நிறைவேறும். பொருளைச் சேமிக்கவும் செய்வீர்கள்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பிரச்னைகள் குறையும். குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நிகழும். கடன் உபத்திரவம் குறையும்.
16-5-2012 முதல் 25-6-2012 வரை உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தாயாராலும், உற்றார்-உறவினர்களாலும் பிரச்னைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
11-10-2012 முதல் 4-11-2013 வரை எதிரிகள் விலகுவார்கள். நூதனமான பொருட்களின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் அதில் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட இப்போது உங்களுக்கு உதவுவார்கள். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொருள் வரவு அதிகமாகும். பெரியவர்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகளையும் ஆதரவையும் பெறுவீர்கள். மக்கள் நலம் பாதிக்கும் என்றாலும் தெய்வ அருளால் சீராகிவிடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். தந்தையாலும், தந்தை வழி உறவினராலும் நலம் உண்டாகும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் லாபம் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். அலைச்சலும் உழைப்பும் இந்த நேரத்தில் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு உண்டாகும். 

கடகம்:
ராசிக்கு 4-ஆமிடத்துக்குச் சனி வந்திருக்கிறார். அர்த்தாஷ்டம சனியின் காலமிது. 7-ஆம் வீட்டோன் 4-ல் இருப்பது சிறப்பாகும். இதனால் சொத்துக்கள் சேரும். சுகம் கூடும். மனைவி வழியில் நலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். 8-ஆம் வீட்டோன் சனி 4-ல் இருப்பதால் சுகபங்கம் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள், வழக்குகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். இருப்பிட மாற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் பாதிக்கும். கால்நடைகளால் அதிகம் ஆதாயமிராது. வீண் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். அலட்சியப் போக்கு அடியோடு கூடாது. எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. சனிக்கு 8-ஆம் வீட்டு ஆதிபத்தியமே வலுப்பெறுவதால் துன்பம், துயரம் ஆகியவை உண்டாகும். முக்கிய நண்பர்கள், உறவினர்களை விட்டுப் பிரிய நேரலாம். சிலர் மனதுக்குப் பிடிக்காத இடத்தில் வசிக்க வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. சனிப் பிரீதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் நலம் கூடும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சகோதரரால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது ஈடேறும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பால் நலம் பெறுவீர்கள்.
23-12-2012 முதல் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் உண்டாகும். முக்கிய உறவினரையோ, நண்பரையோ பிரிய வேண்டிவரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தாய் நலனில் அக்கறை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். 31-5-2013 முதல் சுபச் செலவுகள் கூடும். புதிய நிலம், மனை, வீடு, வாகனச் சேர்க்கை நிகழும். கடன் தொல்லை குறையத் தொடங்கும். சங்கடங்களும் விலக ஆரம்பிக்கும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். மாணவர்கள் வளர்ச்சிகான மார்க்கத்தைக் காண்பார்கள். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் கெடுபலன்களே அதிகம் உண்டாகும் என்பதால் சனிப் பிரீதியை அவசியம் செய்யவேண்டும். ஜாதக பலம் இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. இறைவழிபாடு மூலம் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம். 

சிம்மம்:

ஏழரைச் சனியின் காலம் முடிந்துவிட்டது. சனி 3-ல் உலவுவது மிகவும் விசேடமாகும். அதுவும் அவர் தனது உச்ச ராசியில் உலவுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கவே செய்யும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நிலபுலங்கள் சேரும். மேலதிகாரிகள், முதலாளிகளின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாகி, உயர் பதவியைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். உடல்நலம் திருப்திகரமாக இருந்துவரும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். 6-ஆம் வீட்டோன் 3-ல் தன் உச்ச ராசியில் இருப்பதால் எதிர்பாராத தனப்பிராப்தியைப் பெறுவீர்கள். 7-ஆம் வீட்டோன் வலுத்திருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும்.
சிறுசிறு பயணங்களை அடிக்கடி மேற்கொள்ளவும் அதனால் அனுகூலம் பெறவும் வாய்ப்பு உருவாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். பொது ஜனத்தொடர்பு வலுக்கும். உயர்பதவிகள், பொறுப்புகள் தேடிவரும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய சொத்துக்கள் சேரும். பெற்றோரால் நலம் பல பெறுவீர்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்கள் நலம் கூடப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். 16-5-2012 முதல் 4-8-2012 வரை சனி வக்கிரமாக இருப்பதால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை.
கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். அதன்பிறகு சனி துலாத்துக்கே திரும்பி வந்துவிடுவார். துலாம் சர ராசி என்பதாலும் உபசய ராசி என்பதாலும் சுக்கிரனின் ராசி என்பதாலும் வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும். சுபபலன்கள் தொடரும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை புதியவர்களது நேசம் கிடைக்கும். அயல்நாட்டு வர்த்தகம் பெருகும். போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி, தோல், கறுப்பு நிறப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி பாட்டனாரால் நலம் பெறுவீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் கூடும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்கு இந்த நேரத்தில் கைகூடும். சூதாட்டம், பங்கு மார்க்கெட், மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் பெரும் பணம் கைக்கு வந்து சேரும். குறுக்கு வழிகளில் செல்வம் சேரும் நேரமிது. ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற தகவல் தொடர்பு இனங்கள் மூலமாகவும் ஆதாயம் பெருகும். நூதன கண்டுபிடிப்புகளின் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை மகப்பேறும் மக்களால் பாக்கியமும் பெறும் நேரமிது. ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும்.
புத்திசாலித்தனம் பளிச்சிடும். மந்திர-தந்திர-யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வருமானம் கூடப் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் உண்டாகும். பி.எஃப், பென்ஷன், உயில் போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.
செல்வச் செழிப்புக் கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். சுப காரியச் செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பதவிச் சிறப்பு உண்டாகும். ஊதிய உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். அரசுப்பணிகள் லாபம் தரும்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும். இந்த நல்ல நேரத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

கன்னி:

உங்கள் ராசிக்கு 5, 6-ஆம் இடங்களுக்குரிய சனி 2-ஆமிடத்தில் உலவுகிறார். ஏழரைச் சனி தொடர்கிறது. என்றாலும் உங்கள் ராசிநாதன் புதனும் சனியும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் என்பதாலும், சனி தன் உச்ச ராசியில் உலவுவதாலும் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் பெரும்பாலான காலம் சனியானவர் குருவின் பார்வையைப் பெறுவதாலும் நற்பலன்களின் அளவு கூடி, கெடுபலன்கள் குறையும் என்று சொல்லலாம். 5-ஆம் வீட்டோனான சனி 2-ல் பலம் பெற்று இருப்பதால் மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மக்களால் அனுகூலமும் உண்டாகும். பங்கு மார்க்கெட், ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பிற மொழி, மத, இனக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சனி 6-ஆம் வீட்டுக்கு அதிபதியாகி 2-ல் உலவுவதால் குடும்பத் தேவைகளைச் சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். கண், முகம், வாய், பல் மற்றும் வாயு சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை முயற்சி வீண்போகாது. கடுமையாக உழைப்பதன் மூலம் வருமானம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். உடல்நலம் சீராகும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும். 17-5-2012 முதல் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். ஆகஸ்ட் 2012 முதல் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சகோதர நலம் பாதிக்கும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும். கண், வாய், பல், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.
11-10-2012 முதல் 4-11-2012 வரை பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவும் காலகட்டமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோல், போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி, நவீன விஞ்ஞானத்துறை, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட இனங்களால் வருமானம் பெருகும். அயல்நாட்டுப் பயணத்திட்டம் ஈடேறும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். 23-12-2012 முதல் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை.
5-11-2013 முதல் 1-11-2014 வரை புதிய சொத்துக்கள் இந்த நேரத்தில் சேரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். குடும்ப நலம் சீராகும். சுகானுபவம் உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். செய்து வரும் தொழில் லாபம் தரும். நோய்நொடி உபத்திரவங்கள் குறையும். 19-6-2014 முதல் முயற்சி வெற்றி தரும். மகன் அல்லது மகளால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். செல்வச் செழிப்புக் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்வாழ்க்கை சிறக்கும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் புகழும் பொருளும் பெறுவார்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு சென்று பொருள் திரட்ட வாய்ப்பு உருவாகும். சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். 12-7-2014 முதல் அலைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவராலும், கூட்டாளிகளாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். சனிப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்துவரவும். 

துலாம்

உங்கள் ராசிக்கு 12-ல் உலவிக் கொண்டிருந்த சனி ஜன்ம ராசிக்கு இடம் மாறி இருக்கிறார். ஏழரைச் சனியின்காலத்தில் ஜன்மச் சனியின் காலம் ஆகும் இது. கோசாரப்படி இது விசேடமாகாது என்றாலும் சனியானவர் உங்கள் ராசிக்கு 4, 5-ஆம் இடங்களுக்கு அதிபதியாகி, ஜன்ம ராசியில் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பதால் நலமே புரிவார். இதுவரையில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் விலகும். வீண் விரயங்கள் இனிமேல் இருக்காது. உடல்நலமும் சீராகும். மன பலம் கூடும். சுகானுபவம் உண்டாகும். உற்சாகமாக நடைபோடுவீர்கள். நல்ல இடமாற்றம் உண்டாகும். தொழிலிலும் மாற்றத்தைக் காண்பீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் கூடும். அயல்நாட்டுத் தொடர்பால் பயன் பெறுவீர்கள். கலைஞானம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்குக் கைகூடும். சொத்துக்கள் சேரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலைச்சலும் உழைப்பும் அதிகமானாலும் கூட அதனால் பயனும் அதிகமாகும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை அந்தஸ்தும் மதிப்பும் செல்வாக்கும் உயரும். செல்வ நிலையில் அபிவிருத்தி காணலாம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் பெருகும். கூட்டாளிகள் உதவுவார்கள். நிலபுலங்களால் வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். மந்திர-தந்திர-யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். 16-5-2012 முதல் 4-8-2012 வரையிலும் உள்ள காலத்தில் சற்று எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மருத்துவச் செலவுகளும் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. அதன்பிறகு நிலைமை சீராகும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை அந்நிய மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் பெற வாய்ப்பு உண்டாகும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். திடீர்ப் பொருள்வரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் மேன்மை அடையும். சிலருக்கு வெளிநாட்டு வேலை இந்த நேரத்தில் கிடைக்கும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 23-12-2012 முதல் அலைச்சல் சற்று அதிகரிக்கவே செய்யும். கூட்டாளிகளால் பிரச்னைகள் ஏற்படக் காரணம் உண்டு; விழிப்புடன் இருக்கவும். வாழ்க்கைத்துணை நலன் கவனிக்கப்பட வேண்டிவரும்.
31-5-2013 முதல் உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். முயற்சி வீண்போகாது. தெய்வப் பணிகள் நிறைவேறும். பெரியவர்கள் உங்களுக்கு ஆசி புரிவதுடன், ஆதரவும் தருவார்கள். உடல்நலம் சீராகவே இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தொலைதூரப் பயணம் ஆக்கம் தரும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது. எதிர்ப்புக்கள் இருக்குமென்றாலும் சமாளிப்பீர்கள். உடல்நலம் அவ்வப்போது கவனிக்கப்பட வேண்டிவரும். தேவைகளைச் சமாளிக்கச் சிலர் கடன்வாங்க வேண்டிவரும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும். குறுக்கு வழிகளில் பிரவேசிக்கலாகாது. செய்து வரும் தொழிலில் முழுக்கவனம் தேவை. பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள், முதலாளிகள் ஆகியோருடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். இல்லையென்றால் அவர்களது கோபத்துக்கு ஆளாகி, சங்கடப்பட நேரும். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் ஓரளவு சிறப்பாக இருக்கும். இந்த சனிப் பெயர்ச்சிக் காலம் முழுவதும் ராகு, கேதுக்களின் நிலை சிறப்பாக இல்லாததால் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது அவசியமாகும்.

விருச்சிகம் :
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் உலவிக் கொண்டிருந்த சனி, விரய ஸ்தானத்துக்கு இடம் மாறுகிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. கோசாரப்படி இது அனுகூலமான நிலை ஆகாது. என்றாலும் சனி 3, 4-ஆம் இடங்களுக்கு அதிபதியாகி, 12-ல் தன் உச்ச ராசியில் இருப்பதாலும், 3, 4-ஆம் இடங்களுக்கு அனுகூலமான இடத்தில் சனி உலவுவதாலும் சில நன்மைகளும் உண்டாகும். உடன்பிறந்த இளைய சகோதர, சகோதரிகளின் வாழ்வு சிறக்கும். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். மக்களால் சில பிரச்னைகள் சூழும். வாழ்க்கைத்துணைவரின் உடல்நலனில் கவனம் தேவை. வீண்விரயம் ஏற்படும். தேவையில்லாத, அனாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியமாகும். மேலும் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் ரிஷபத்திலும், கடகத்திலும் குரு உலவும் நிலை அமைவதாலும், பெரும்பாலான காலம் சனி குருவின் பார்வையைப் பெறுவதாலும் நற்பலன்களும் உண்டாகும் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் ஜனன கால ஜாதகப்படி இந்த நேரத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானாலும் கவலைப்படத் தேவையில்லை. என்றாலும் சனிப் பிரீதி அவசியம் செய்யவேண்டும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை செல்வ நிலையில் அபிவிருத்தி காண வாய்ப்பு உண்டாகும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. சுப காரியங்கள் நிகழும். வாழ்க்கைத்துணைவரால் நலம் பெறுவீர்கள். மக்கள் நலனுக்காகச் செலவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பொறியியல் துறை லாபம் தரும். 17-5-2012 முதல் குரு 7-ஆமிடம் மாறுவதால் பொருள்வரவு கூடும். வாழ்க்கைத்துணைநலம் சீராகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். 26-6-2012 முதல் நீண்ட நாளைய எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை அலைச்சல் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பயணத்தின்போதும், வண்டி, வாகனங்களைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை. பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 23-12-2012 முதல் கால் பாதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். பயணத்தின்போது பொருள் காணாமல் போகும். வீண்செலவுகளும் இழப்புகளும் கூடும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும். தூக்கம் கெடும். மனதில் ஏதேனும் பயம் இருக்கும். தொழிலில் விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 31-5-2013 முதல் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் மன அமைதி கெடும். இருப்பிடத்தில் மாற்றம் செய்து கொள்வீர்கள். அந்த மாற்றமும் திருப்திகரமாக அமையாது. குரு, சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை பண வரவு அதிகரிக்கும் நேரமிது. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். விருந்து, உபசாரங்களில் பங்கு கொள்வீர்கள். மக்கள் நலம் சீராகும். நூதன கண்டுபிடிப்புகளின் மூலம் புகழும் பொருளும் கிடைக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். 19-6-2014 முதல் தொலைதூரத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சொத்துக்கள் சேரும். மதிப்பு உயரும். முயற்சி வீண்போகாது. ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்களால் ஆதாயமிராது. தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து இனங்களைச் சேர்ந்தவர்கள், சுரங்கப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி வருவது நல்லது. 12-7-2014 முதல் ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். அந்நிய மொழி, மதக்காரர்களால் நலம் உண்டாகும். குறுக்கு வழிகளில் பணம் சேரும். மக்களால் சில பிரச்னைகள் தலைதூக்கும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். வீண் விவகாரங்களில் தலையிடவேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சனிக்குரிய பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வரவும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 2, 3-ஆம் இடங்களுக்குரிய சனி 11-ஆமிடம் மாறியிருக்கிறார். விசேடமான நன்மைகள் உண்டாகும் நேரமிது. 2-ஆம் வீட்டோன் 11-ல் உலவுவதால் பொருளாதாரச் செழிப்பு உண்டாகும். பல வழிகளில் வருமானம் கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். 3-ஆம் வீட்டோன் 11-ல் இருப்பதால் இளைய சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். தகவல் தொடர்பு, கொடுக்கல்-வாங்கல், கலைத்துறை, சட்டத்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கறுப்பு, கருநீலநிறப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு பொருட்கள், பழைய பொருட்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள், கரி, ஆகாய மார்க்கம், காற்று சம்பந்தப்பட்ட இனங்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். சமுதாய நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். உயர்பதவி, பட்டங்கள் தேடிவரும். பொதுஜனத் தொடர்பு வலுக்கும். சனி சர ராசியில், சுக்கிரனின் வீட்டில், தன் உச்ச ராசியில் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அதிகம் பயன் கிடைக்கும். அழகுப் பொருட்கள் சேரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். பல வழிகளில் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். சகோதரர் வெளிநாடு செல்வார். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் பயன்பெறுவார்கள். இயந்திரங்கள் லாபம் தரும். இஞ்சினீயர்களது எண்ணம் நிறைவேறும். மந்திர சித்தி சிலருக்கு உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் என்பதால் சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. சிலருக்கு இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 16-5-2012 முதல் 4-8-2012 வரை சகோதர நலனில் கவனம் தேவைப்படும். தொழிலில் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். அதன்பிறகு பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உடன்பிறந்தவர்களின் நலம் சீராகும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும் நேரமிது. வேற்று மத, மொழி, இனக்காரர்கள் உங்களுக்குப் பெரிதும் உதவுவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புதையல் போன்ற பெரும் தனம் கிடைக்கும். குறுக்கு வழிகளிலும் ஆதாயம் பெறுவீர்கள். ராகுவும் சனியும் 23-12-2012 முதல் லாப ஸ்தானத்தில் உலவும் நிலை அமைவதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை உண்டாகும். பல வழிகளிலும் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் கைகூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். போக்குவரத்து, ஏற்றுமதி,இறக்குமதி, தோல், எலக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கொரியர், தகவல் தொடர்பு, நவீன விஞ்ஞானக் கருவிகள், கறுப்பு, கருநீலநிறப்பொருட்களால் ஆதாயம் பெருகும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மக்களாலும் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். காது, கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை. செல்வாக்கும் மதிப்பும் உயரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் இப்போது கிடைக்கும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தாய் நலம் சீராகும். சுகானுபவம் கூடும். உடல் நலம் திருப்தி தரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வாய்ப்புக்கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். வாழ்வில் முன்னேற்றம், காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். விவசாயிகளும் தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் சுபிட்சம் கூடும். வாழ்க்கைத்தரம் நிச்சயமாக உயரும்.

மகரம்

உங்கள் ஜன்ம ராசிக்கும் 2-ஆமிடத்துக்கும் உரிய சனி 10-ஆமிடம் வந்திருக்கிறார். சனி தன் உச்ச ராசியில் இருப்பதால் நலமே உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். புதிய முயற்சிகள் கைகூடும். செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சி காணலாம். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பதவிச் சிறப்பு உண்டாகும். தலைமை தாங்கும் தகுதியைப் பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். மன பலம் கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய சொத்துக்களும் சேரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் நலனில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகுவது அவசியமாகும். தொழில் ரீதியாகச் சிலர் இடமாற்றம் பெறுவார்கள். சனி சுக்கிரனின் வீட்டில், சர ராசியில், தன் உச்ச ராசியில் இருப்பதால் சட்டம், கலை, வாக்கு, பொருள் கொடுக்கல்-வாங்கல், சுரங்கம், இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், பழைய பொருட்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றால் வருமானம் கூடப் பெறலாம். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். அதனால் ஆதாயமும்கிடைக்கும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். மாணவர்களது நிலை உயரும். இயந்திரங்கள் லாபம் தரும். மூத்த சகோதர, சகோதரிகளால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. 17-5-2012 முதல் மக்கள் நலம் சீராகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். சகோதர நலம் சீராகும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் உருவாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்கள் நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆக வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு மந்திர சித்தி ஏற்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணம் செய்வதில் நாட்டம் கூடும். பயணத்தால் அனுகூலமும் பெறுவீர்கள். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நேரத்தில் பெரிதும் உதவி புரிவார்கள். போக்குவரத்துச் சாதனங்களால் லாபம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளால் வருமானம் கிடைத்துவரும். வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். தோல் பொருட்கள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண்பீர்கள். அரசு விருதும் பாராட்டுகளும் கிடைக்கும். மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவீர்கள். நவீன விஞ்ஞானத்துறைகளில் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை உடன்பிறந்தவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வெளிநாட்டு வேலை சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும். மக்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் மற்றும் நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்புக் கூடும். மாணவர்களது நிலை உயரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். 19-6-2014 முதல் செல்வ வளம் மேலும் கூடும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். கூட்டாகத் தொழில் செய்பவர்கள் லாபம் கூடப் பெறுவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். தெய்வப் பணிகள் நிறைவேறும். புனித நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும். பெரியவர்கள், தனவந்தர்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகளைப் பெறுவீர்கள். த்யானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் ஓரளவுக்குச் சிறப்பானதாக அமையும்.

கும்பம்:

உங்கள் ராசிக்கு அதிபதியும், விரயாதிபதியுமான சனி 9-ல் உலவுகிறார். அஷ்டமச் சனி விலகியதால் இதுவரையிலும் அனுபவித்து வந்த துன்பங்களும் துயரங்களும் இனி விலகும். மன அமைதிக்குறைவும் நீங்கும். தெளிவான பாதை புலப்படும். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மன பலமும் கூடும். 12-ஆம் வீட்டோன் 9-ல் இருப்பதால் தந்தையால் செலவுகள் ஏற்படும். தந்தையை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரலாம். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தாரால் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படக் காரணம் உண்டு; எச்சரிக்கை தேவை.
வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அகலுவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு கொண்டு வளர்ச்சி காண்பீர்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். தெய்வ காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சொத்துக்கள் சேரும். 16-5-2012 முதல் குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண்வம்பு கூடாது. மக்கள் நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாகச் சில மாற்றங்கள் உண்டாகும். என்றாலும் திருப்திகரமாக அமையாது. 4-8-2012 முதல் நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் நிறைவேறும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். போக்குவரத்துத் துறை லாபம் தரும். செய்தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஏற்றமும் உண்டாகும். வீடு மாற்றமும் சிலருக்கு இந்த நேரத்தில் அமையும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 23-12-2012 முதல் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் பாதிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் பிரச்னைகள் சூழும். 31-5-2013 முதல் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். தந்தை நலம் சீராகும். மதிப்புக்குக் குறைவிராது. மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். செல்வ வளம் பெருகும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும். தன, லாபம் பெருகும். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம், சட்டம், மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். உயர் பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். 19-6-2014 முதல் சோதனைகள் அதிகரிக்கும். எதிலும் யோசித்து ஈடுபடவும். பொருளாதார சிக்கல் உருவாகும். கடன் தொல்லை உண்டாகும். குடும்பத்தாராலும், பிற மொழி, மதக்காரர்களாலும் பிரச்னைகள் சூழும். வீண் வம்பு வேண்டாம். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பயணத்தால் அனுகூலமிராது. எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் சுமாரானது.

மீனம்:

உங்கள் ராசிக்கு 11, 12-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 8-ஆமிடத்தில் உலவுகிறார். அஷ்டம சனியின் காலமிது. சிறப்பாகாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. நேரான பாதையில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். வீண் வம்பு, வழக்கு; சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தண்டச் செலவுகள் ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு நீங்கள் தண்டனையைப் பெற நேரலாம். கெட்டவர்களின் தொடர்பை அறவே விட்டு விலகுவது அவசியமாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பது அரிது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். பொருள் களவு போகும். எடுத்த காரியத்தை முடிக்க அரும்பாடுபட வேண்டிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் பாதிக்கும். சொத்துக்களை இழக்க வேண்டிவரலாம். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். உடன்பிறந்தவர்களின் நலம் பாதிக்கும். தந்தையால் அதிகம் அனுகூலமிராது. அரசு தண்டனை பெறவோ, அரசு அபராதம் கட்டவோ வேண்டிவரும்.

பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. மக்களால் மன அமைதி குறையும். செய்தொழில் எதுவானாலும் அதில் அதிகம் கவனம் செலுத்தி, அயராது பாடுபடுவது அவசியமாகும். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கலாகாது. அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்பார்கள். இதனால் எதிலும் எச்சரிக்கை தேவை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. இறைவழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபடவும். அதன்மூலம் சங்கடங்களைக் குறைத்துக்கொள்ள முடியும். ஹனுமன் சாலீசா படியுங்கள்; கேளுங்கள். சனிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள். கோளறு பதிகம் சொல்லுங்கள்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். பேச்சால் ஜீவனம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கடன் உபத்திரவம் குறையும். தந்தையால் ஓரளவு நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு இருந்தால் வளர்ச்சி காணமுடியும். 17-5-2012 முதல் பொருளாதாரப் பிரச்னை உண்டாகும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். செய்தொழில் எதுவானாலும் அதில் முழுக்கவனம் தேவை. விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலைமாற்றமோ உண்டாகும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரலாம். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பொறாமைக்காரர்களாலும் போட்டியாளர்களாலும் தொல்லைகள் பெருகும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். உங்கள் கடமைகளை நீங்களே ஆற்றி வருவது அவசியமாகும்.
11-10-2012 முதல் 4-11-2012 வரை தொலைதூரத் தொடர்பு ஓரளவு நலம் தரும். பெற்றோரால் அளவோடு அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். 23-12-2012 முதல் பயணத்தால் சங்கடத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருப்பது நல்லது. ஆகாயம், காற்று சம்பந்தப்பட்ட இனங்களால் சங்கடங்கள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். தோல், பல், கண், வாய், குடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். ஃபுட் பாய்ஸன் ஆகலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை. எதிலும் வேகம் கூடாது.
5-11-2013 முதல் 1-11-2014 வரை பிரச்னைகள் சற்று குறையும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியைத் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்களால் அளவோடு ஆதாயமும் கிடைத்துவரும். 19-6-2014 முதல் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். மக்கள் நலம் சீராகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் எதையும் சமாளிப்பீர்கள். தெய்வானுகூலம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் சோதனையானது. இறைவழிபாட்டின் மூலமும் கிரக வழிபாட்டின் மூலமும் மட்டுமே அமைதி பெறமுடியும். ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். தர்ம நியாயப்படி நடப்பவர்களைச் சனி எப்போதும் தண்டிக்கமாட்டார் என்பதால் நேர்வழியில் ஈடுபடுங்கள். பெரியோர்களது அறிவுரைகளைக் கேட்டு அதன்படி செயல்படுங்கள். நல்லதே நடக்கும். நன்றி
vikatan

No comments: