பகவான் விரும்புவது எது?



முக்தி... இதைத் தான் பலரும் விரும்புவர். அதாவது, பிறவி எடுத்து பல சுக-துக்கங்களை அனுபவித்து, பிறகு மரணமடைகின்றனர். "இது போன்ற பிறவியும், துன்பங்களும் வேண்டாம். பகவானே... எனக்கு முக்தியைக் கொடு...' என்று வேண்டுபவர்கள் உண்டு.
மற்றும் சிலர், "பகவானே... எனக்கு மீண்டும் பிறவியைக் கொடுப்பதானால் கொடு; ஆனால், அது நல்ல பிறவியாக இருக்கட்டும். பகவானை வழிபட்டுக் கொண்டிருக்கும்படியான பிறவியைக் கொடு...' என்று தான் வேண்டுவர். இது, பக்தர்களின் விருப்பம்.
"அடுத்த பிறவியிலாவது நான் பணக்கார வீட்டில் பிறந்து, பணக்காரனாக இருக்க வேண்டும்...' என்று சிலர் வேண்டுவதும் உண்டு.
இப்படி வேண்டி பெறும் பிறவியில், அவன் உண்மையிலேயே அமைதியாக வாழ முடியுமா? பணம் படைத்தவர்களைக் கேட்டால் என்ன சொல்கின்றனர்? "பணமாவது, பொருளாவது சார்... மனசுலே அமைதியே கிடையாது. பணத்தைக் காப்பாற்ற எவ்வளவு பாடுபட வேண்டி உள்ளது.
திருடர், கொள்ளையர் பயம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நண்பர்கள், பந்து ஜனங்களின் தொந்தரவு...' என்கிறான்.
யாருக்காவாது ஏதாவது கொடுத்தால் அதுவே பிரச்னையாகி விடுகிறது. "அவனுக்கு அவ்வளவு கொடுத்தாயே... எனக்கு மட்டும் இவ்வளவுதானா?' என்று மனஸ்தாபம்.
சரி... இருக்கும் போது எல்லாரும் வந்து வாங்கிக் கொண்டு போகின்றனர். இவன் கொடுத்துக் கொடுத்தே ஏழையாகி போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் என்ன சொல்கின்றனர்? "இருக்கும் போது கண் மண் தெரியாமல் செலவு செய்தான். இப்போ ஒன்றுமில்லாமல் திண்டாடுகிறான். இருக்கும் போது நிதானமாக இருக்க வேண்டாமா?' என்கின்றனர்.
இவனிடம் வாங்கிக் கொண்டு போனவர்களே கூட, "இவனை யார் இப்படி அள்ளி, அள்ளிக் கொடுக்கச் சொன்னது! அப்போதே இல்லை என்று சொல்லியிருக்கக் கூடாதோ...' என்கின்றனர்.
பணம் உள்ள போது, 10 பேர் வாசலில் வந்து நிற்பர்; பணம் இல்லாத போது, இவன் வீட்டு வாசல் வழியாகக் கூட போகப் பயப்படுவர். இவன் கொடுத்ததை மறந்து விடுவர்; இல்லை என்று சொன்னதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்வர்.
பணம் இருக்கும் போது பிறருக்கும் உதவி செய்; பகவானுக்கும் ஒரு பங்கு கொடு. மனிதர்கள் நீ கொடுத்ததை மறந்து விடுவது சகஜம்;
ஆனால், பகவானுக்கு நீ சிறிதளவு செய்தாலும், அவன் மறக்க மாட்டான்; என்றும் ஞாபகம் வைத்துக் கொண்டு, நீ கொடுத்தை விட, பலமடங்கு திருப்பிக் கொடுத்து விடுவான். உன் பணம் அவனுக்குத் தேவையில்லை; உன் மனம் தான் அவனுக்குத் தேவை. மனமாற எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வான். சமயத்தில் திருப்பிக் கொடுப்பான்.

No comments: