மன்னனின் மயக்கம் தெளிந்தது...பட்டினத்தார் வரலாறு

பத்ரகிரியார் கூறுகிறார்:

எனக்கும் அது புரியவில்லை. `அந்த ஆண்டி ஒரு மாய வேலைக்காரன். சித்து வேலைக்காரன்' என்று என் ராணி புலம்பிக் கொண்டிருந்தாள்.

சிறைச் சாலையை நன்றாக கவனிக்கும்படி சில ஆட்களை அனுப்பிவிட்டு, நான் படுக்கையிலேயே கிடந்தேன்.

மூன்று தினங்கள் சென்றன.

என்னைச் சுற்றிலும் நான்கு அந்தப்புர நாயகிகள் இருந்தார்களே தவிர, ராணி இல்லை.

அவள் கழுமர நிகழ்ச்சியில் கலங்கி நிற்கிறாள் என்று எண்ணி சுவாமிகளை நானே கழுவில் ஏற்றுவது என்று முடிவுகட்டி, ஒரு நாள் மாலை நான் தனியாகவே சிறைக்கூடத்திற்குச் சென்றேன்.

அன்று கழுவேற்ற அல்ல; கழுவேற்றப் போகிறேன் என்ற செய்தியைச் சொல்ல.

அப்போது சுவாமிகள் வெறும் கோவணத்தோடு குளிர்ந்த தரையில் படுத்திருந்தார்கள்.

நான் ஆத்திரத்தோடு, `நாளை உன்னைக் கழுவேற்றப் போகிறேன்' என்றேன்.

சுவாமிகள் அமைதியாக, `உன் கையால் நான் சாக வேண்டும் என்றுதான், அன்று நான் சாகவில்லை போலிருக்கிறது!' என்றார்கள்.

`உன் சித்து வேலை என்னிடம் பலிக்காது!' என்றேன்.

`நான் செத்த மனிதன், எனக்கேனப்பா சித்து வேலை?'

`பர்த்ருஹரியின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்' என்றேன்.

`சந்தேகம் பர்த்ருஹரிக்கும் அப்பாற்பட்டது' என்றார்கள்.
<> <> <> <> <> <>

`என் ராணிக்கும் இரண்டு மனம் என்று சொன்னதற்கு மன்னிப்புக் கேள்!' என்றேன்.
`மகேசனைத் தவிர மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பதில் இகத்துக்கும் லாபமில்லை; பரத்துக்கும் லாபமில்லை!' என்றார்கள்.

`அப்படி என்றால் நாளைக் காலையில் சாவதற்குத் தயாராயிரு' என்றேன்.

`நான் இப்பொழுதே தயார். நீ போ, முடியுமானால் நிம்மதியாகத் தூங்கு! காலையில் வா!' என்றார்கள்.

நான் அரண்மனைக்குத் திரும்பினேன்; மாடத்தில் உலாத்தினேன். காலையில் சுவாமிகளைக் கழுவேற்றப் போகும் செய்தியை ராணிக்குச் சொல்ல விரும்பினேன்.

பள்ளி அறையில் தேடினேன்; அவளில்லை.

அந்தப்புரத்திலே தேடினேன்; அவளில்லை.

அந்த நள்ளிரவிலே ஏதோ ஒரு சக்தி என்னைக் குதிரை லாயத்தின் பக்கம் இழுத்துச் சென்றது.

அங்கே நான் கண்ட காட்சி...

அதை விவரிக்க என்னால் முடியவில்லை.

அஸ்வபாலன் என்ற குதிரைக்காரன் மடியில் எனது பட்டத்து ராணி படுத்திருந்தாள்.

அப்போது எனக்கு ஒரு நிகழ்ச்சி புலனாயிற்று.

என் மனைவி அந்த அஸ்வபாலனைக் கேட்டாள்: `நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒரு கனியை, ஒரு முனிவர் என் கணவருக்குக் கொடுத்தார். என் கணவர் அதை என்னிடம் கொடுத்தார்; நான் உங்களிடம் கொடுத்தேன். நீங்கள் சாப்பிட்டீர்களா?' என்று.

அதற்கு அவன் சொன்னான்: `இல்லை; அதை என் ஆசை நாயகி காமினியிடம் கொடுத்தேன்!' என்றான்.

நான் மயங்கிக் கிடந்த போது அதே காமினி, அதே பழத்தை என்னிடம் கொடுத்தாள், அந்தப்புரநாயகி என்ற முறையில்.

எனக்கிருந்த போதை மயக்கத்தில் அது அவளிடம் எப்படி வந்தது, என்று கேளாமல் தூங்கிவிட்டேன்.

இப்போது புரிந்தது.

காமனை மிஞ்சும் அழகனெனப் புகழப்பட்ட பர்த்ருஹரியின் மனைவி, உலகத்திலேயே கோரமான ஒரு குதிரைக்காரன் மடியில் படுத்திருப்பதைப் பார்த்தேன்.

`பெண்ணுக்கு இரண்டு மனம்' என்று சுவாமிகள் சொன்னது பொய்யல்ல.

ஒரு மனம் பூக்கடை; ஒரு மனம் சாக்கடை!

குதிரைக்காரனிடம் அவள் சொன்னாள்: `நீ கொடுத்த விஷத்தைப் பாலிலே போட்டு, என் கணவரின் பள்ளியிலே வைத்திருக்கிறேன்; நாளை அவர் உயிரோடு இருக்க மாட்டார். பிறகு நீதான் ராஜா!' என்று.

நல்லவேளை; அந்தப் பாலை நான் குடிக்கவில்லை.

நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அஸ்வபாலன், `மூன்று நாட்களாக என்னை ஏன் ஏமாற்றினாய்?' என்று அவளை அடித்தான்.

அவள், அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள்.

`குடிப்பிறப்பு என்றால் என்ன?' என்று அப்போது எனக்குப் புரிந்தது.

அவள் `பள்ளி அறைக்குப் போகலாம்' என்றாள்.

`இல்லை; இங்கேயே' என்று அவன் அவளோடு உறவு கொண்டான்.
<> <> <> <> <> <>

`இதற்கு மேல் என்னைப் பேச வைக்காதீர்கள்' என்று பத்ரகிரியார் விக்கி அழுதார்.
அவரைத் தட்டிக் கொடுத்தபடி பட்டினத்தார் முடித்து வைக்கிறார்.

பட்டினத்தார் முடிவுரை:

பந்த பாசங்களை அறுத்து விட்டாலும் பழைய பாவங்களை எண்ணும்போது, மனிதனுக்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

தீண்டக்கூடாத ஒன்றைத் தீண்டிவிட்டபின், கையைக் கழுவித் துடைத்துவிட வேண்டுமே தவிர, அடிக்கடி வாசனை பார்க்கக் கூடாது.

கோபிகள், பாவிகள், இழி மக்கள் இவர்களின் தொடர்பிலே தான் மனிதனுக்கு ஞானம் பிறக்கிறது.

தரமில்லாத ஒரு இடத்தில் பெண் எடுத்த காரணத்தால், சக்கரவர்த்தியாக வேண்டிய பத்ரகிரியார் தத்துவ ஞானியாகி விட்டார்.

தமிழ்ப் பெரியவர்கள் எல்லாம் குடிப்பிறப்பை அடிக்கடி வலியுறுத்தியதற்குக் காரணம் இதுதான்.

நலத்தின்கண் நாரின்மை தொன்றின்

அவனைக்

குலத்தின்கண் ஐயப்படும்.

- என்றார் வள்ளுவப் பெருந்தகை.

ஒருத்தியின் நடத்தை தவறாகத் தோன்றுமானால் அவள் பிறந்த குடும்பத்தையே கவனிக்க வேண்டும்.

குடிப்பிறப்பைப் பார்த்துப் பெண் எடுத்து விட்டால், எடுக்கப்பட்ட பெண் கோபக் காரியாக, கொடுமையாக மாறினாலும் மாறலாமே தவிர, நடத்தை கெட்டவளாக ஆக மாட்டாள்.

யாரோ ஒருத்தி- அழகியாயிருந்தாள்- அது ஒன்றே போதுமானதாக இருந்தது பத்ரகிரிக்கு; விளைவு, நரக வேதனை; சித்ரவதை.

மேனி மயக்கத்தின் முடிவு, ஞான மயக்கமாகத்தானே இருக்க முடியும்?

சிறைக்கூடத்திலே நான் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்.

கம்பிக் கதவுகளுக்கு வெளியே விம்மல் சத்தம் கேட்டது. பிற உயிர்களின் அழுகை ஒலி, எப்போது உன் ஆன்மாவுக்குள் இருந்து நீ அழுவது போலவே கேட்கிறதோ, அப்போது தான் நீ பக்குவம் பெற்ற ஞானி ஆகிவிட்டாய் என்று அர்த்தம்.

படுத்த நிலையிலேயே கண்ணை விழித்துப் பார்த்தேன்.

பத்ரகிரியார் நின்றிருந்தார்.

தூரத்தில் சில காவலாளிகள் கையைக் கட்டிக் கொண்டு நின்றார்கள்.

அவரது கண்ணீரைப் பார்த்தவுடனேயே எனக்கென்னவோ, `பெண்ணுக்கு இரண்டு மனம்' என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது.

`கதவை நீங்கள் திறப்பதா, நான் திறப்பதா?' என்றேன்.

`நீங்கள்தான் திறக்க வேண்டும்' என்று சாவியை என்னிடம் நீட்டினார் பத்ரகிரியார்.

நான் கம்பிகளுக்கு வெளியே கையைவிட்டுச் சிறைக்கூடப் பூட்டைத் திறந்தேன்.

`சுவாமி! நீங்கள் திறந்தது பூட்டையல்ல; என் அகக் கண்களை' என்றார் பத்ரகிரியார்.

`அல்ல; வேறு யாரோ அந்தக் கண்களைத் திறந்த பிறகுதான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்!' என்றேன்.

`உண்மைதான் சுவாமி; தீயொழுக்கம் கொண்டவள் தான் கணவனின் ஞானக் கண்களைத் திறக்கிறாள்' என்றார் பத்ரகிரியார்.

`எல்லார் கதையுமே அதுவல்ல; நான் கூட ஒரு முறை:

கைப்பிடி நாயகன் தூங்கையி லேயவன் கையெடுத்

தப்புறந்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்

ஒப்புடன் சென்று துயனீத்துப் பின்வந்து உறங்குவாளை

எப்படி நானம்புவேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

.... என்ற பாடலை, காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சந்நிதியில் பாடினேன்.

பலர் என் மனையாளே அப்படி என்று கருதி விட்டார்கள்.

மனைவியால் நிலை குலைந்தவர்களின் மனசாட்சியாக நின்று நான் பாடினேனே தவிர, என் மனையாள் அப்படி அல்ல.

பொன்னாசையையும், மண்ணாசையையும் வெறுத்து, என்னை எண்ணாத எண்ணமெல்லாம் எண்ண வைத்தவன் ஒரு பிராமணச் சிறுவன்.

`பர்த்ருஹரி, காலையில் என்னைக் கழுவேற்ற வருவாய் என்று கருதினேன்; நீயே கழுவேற்றப்பட்ட நிலையில் கண்ணீரோடு வருவாய் என்று நான் கருதியதில்லை' என்றேன்.

`சுவாமி! என்னை மணந்து கொண்ட ஒருத்தி, ஒரு கோரமான குதிரைக்காரன் மீது ஆசை வைத்தாளே! விதியின் விளையாட்டில் இத்தகைய விபரீதம் உண்டா?' என்று கேட்டார் பத்ரகிரியார்.

`அது தேனீயாக இருந்தால் தேனை மட்டும்தான் அருந்தும்; சாதாரண ஈயாக இருந்தால் நைவேத்தியத்திலும் உட்காரும், மலத்திலும் உட்காரும். சுவாமியின் பிரசாதத்தில் உட்கார்ந்த நாமா மலத்தில் உட்காருகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அன்று உன் பட்டத்து ராணி என்னிடம் பேசிய வார்த்தைகளில் இருந்தே, அவள் நலங்கெட்ட குடும்பத்தில் பிறந்தவள் என்பதை நான் கண்டு கொண்டேன். வார்த்தைகளே, பிறப்பை வெளிப்படுத்துகின்றன!' என்றேன்.

`என் மோக வெறியில் உங்களை அலட்சியப்படுத்தி விட்டேனே...!' என்று கண்ணீர் வடித்தார் பத்ரகிரியார்.

`நீ எதை விரும்புகிறாயோ அதை ஒரு கட்டத்தில் வெறுக்கவும், எதை வெறுக்கிறாயோ அதை ஒரு கட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனுடைய லீலை!' என்றேன் நான்.

`ஒன்றை விரும்பும் போதே, ஒரு நாள் வெறுக்க வேண்டி இருக்கும் என்று எண்ணி கொண்டு விட்டால், விருப்பு வெறுப்புகள் சமமாகி விடும்' என்றேன்.
<> <> <> <> <> <>

`நான் இனி என்ன செய்ய வேண்டும் சுவாமி' என்று கேட்டார் பத்ரகிரியார்.
`அவளைத் துறந்துவிடு' என்றேன்.

`இல்லை, அவளுக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறேன்!' என்றார்.

`ஒழுக்கம் தவறுவதே ஒருத்திக்கு மரண தண்டனை தானே... இனி, புதிய தண்டனை எதற்கு?' என்றேன்.

`அவளை மட்டும் துறப்பதா? அரசையும் துறப்பதா?' என்று கேட்டார்.

`மேலாடையை இழப்பதா, கீழாடையையும் சேர்த்து இழப்பதா என்று நீதான் முடிவு செய்யவேண்டும்' என்றேன்.

`சுவாமி! நீங்கள் உடனே அரண்மனைக்கு வர வேண்டும்!' என்றார்.

அரண்மனைக்கெல்லாம் போகமாட்டேன் என்று சொல்வது போலித்தனமான ஞானம் அல்லவா?

`வருகிறேன்' என்று சீடர்களோடு புறப்பட்டேன்.

வானளாவிய அரண்மனை கண்டேன்; வாரணம் கண்டேன்; பரிகள் கண்டேன்; மானுடத்தின் மகத்துவத்தைக் காணவில்லை.

மண் குடிசைக்கும் ஒளியூட்டக்கூடிய மாபெரும் பத்தினிகள் பலருண்டு; பளிங்கு மாளிகையையும் ஒளியிழக்க வைக்கும் ஒரு பத்தினியல்லவா இந்த மாளிகையில் குடியிருக்கிறாள் என்றெண்ணிய போது, எனக்குச் சிரிப்பு வந்தது.

நேரே அரியாசனத்திற்கு என்னை அழைத்துப் போனார் பத்ரகிரியார்.

`தன் நிலை அறிவான் நாயகன்' என்பதை அறியாத அவரது பத்தினி அதைத் தடுத்தாள்.

`அரசனது ஆசனத்தில் ஆண்டியா?' என்றாள் அவள்.

`ஏன்? அரசன் உட்காரக் கூடிய இடத்தில் ஒரு குதிரைக் காரனும் உட்காரலாம்!' என்றார் பத்ரகிரியார்.

சிருங்கார சதகம் பாடியவர் அல்லவா?

வைராக்கியம் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

`இந்த ஆண்டியை விட குதிரைக்காரர்கள் மோசமானவர்கள் அல்ல!' என்றாள் அவள்.

`அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும்... எனக்கென்ன தெரியும்?' என்றார் அவர்.

`நான் பத்தினியானால், இந்த அரியாசனம் அவருக்கு இடம் கொடுக்காது!' என்றாள் அவள்.

பத்ரகிரியார் சிரித்தார். நான் சிரிக்கவில்லை.

`பத்தினி' என்றொரு வார்த்தை இருப்பதையாவது அவள் அறிந்திருக்கிறாளே! போதாதா?

திடீரென்று அவர் என்ன நினைத்தாரோ, அவளது ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.

நான் தடுக்க முயன்றேன்; முடியவில்லை.

பத்ரகிரியார் வெறிபிடித்த வேங்கையானார்.

அவள் முகத்திலே கரும்புள்ளி, செம்புள்ளி குத்த வைத்தார். அந்தக் கோலத்திலேயே அவளைக் குதிரையில் ஏற்றி உட்கார வைத்தார்.

முன்னாலே ஒருவனைத் தண்டோராப் போட வைத்தார்.

`பதித் துரோகத்திற்கு இது பரிசு' என்று அவனைச் சொல்ல வைத்தார்.

அவளை நகர்வலம் வர வைத்தார்.

ஆத்திரமடைந்த ஒருவன், கடைசியாகத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதை யாரும் தடுக்க முடியாது;

ஆனால், அந்த ஆத்திரம் தீர்ந்ததும் அவன் அழுவான்;

அப்போது தான் அவனுக்கு விஷயங்களைச் சொல்ல முடியும்.

பத்ரகிரியாரும் அழுதார். நான் அவருக்கு ஞான தீட்சை நடத்தி வைத்தேன்.

No comments: