ஒரு பழைய பாடல்... "நஞ்சுடைய நாகம் கரைந்துரையும்; அஞ்சாட்புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு, நெஞ்சில் கரவுடையோர் தம்மைக் காப்பார், கரவார் கரவிலா நெஞ்சத்தவர்...'
— அதாவது, தம்மிடம் குற்றம் உள்ளவர்கள் பயந்து, பயந்து ஒளிந்து கொள்வர்; குற்றம் எதுவும் செய்யாதவர், தைரியமாக வெளியில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரிவர்.
ஒரு திருடன் இருந்தான். அவன் எப்போதும் போலீசுக்கு பயந்து ஒளிந்து கொண்டிருப்பான். எங்கேயாவது காக்கி சட்டை தெரிந்தால், நம்மைத்தான் தேடி வருகின்றனர் என்று எண்ணி, ஒளிந்து கொள்வான்.
வெளியே வரும் போது, சுற்றும் முற்றும் பார்த்து, இருட்டில் பயந்து கொண்டே வருவான். ஏன் என்றால், அவனிடம் குற்ற உணர்வு உள்ளது.
குற்றம் எதுவும் செய்யாதவர் அப்படி பயப்படுவதில்லை; எங்கு வேண்டுமானாலும் போவர், வருவர். பார்ப்பவர்களும், "அவர் ரொம்ப சாது; அவருக்கு கெடுதல் எதுவும் செய்யக் கூடாது...' என்று நினைப்பர். குற்றம் செய்தவனாக இருந்தால், அவனை போலீசுக்குக் காட்டி கொடுப்பர் அல்லது அவர்களே அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைப்பர். அதனால், மனிதன் குற்றமற்றவனாக வாழ வேண்டும். அப்படியிருந்தால், எந்தவித பயமும் இருக்காது.
விஷமுள்ள பாம்பைக் கண்டால் அடித்து கொன்று விடுவர். அதனால், அது ஒளிந்து, ஒளிந்து வாழ வேண்டியுள்ளது. விஷம் இல்லாத நீர்ப் பாம்பு குளக்கரையில் படுத்து கிடக்கும். "இது நீர்ப் பாம்பு தான்; இதை அடிக்க வேண்டாம்!' என்று போய் விடுவர்; பாம்புக்கு ஆபத்து ஏதுமிருக்காது.
அதே போல பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, கள்ளம் கபடமில்லாத வரைப் பார்த்தால், "அவர் ஒரு சாது; அவருக்கு எந்தவித உபத்திரவமும் செய்யக் கூடாது...' என்று நினைப்பர்.
அதுவே ஒரு திருடன், ரவுடி என்றால் எல்லாரும் சேர்ந்து அவனைப் பிடித்து மொத்து, மொத்தென்று மொத்தி, கட்டி இழுத்துப் போய், போலீசில் ஒப்படைப்பர். அதனால், நல்லவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் தாராளமாக பயமின்றி கோவில், குளம் என்று போய் கொண்டிருக்கலாம்.
குற்றம் செய்தவர்கள்தான் பயந்து, பயந்து ஒளிய வேண்டும். ஏன் அப்படி இருக்க வேண்டும். நல்லவர்களாகவே நாலு பேர் நடுவில் வரலாமே! அதுவும் அவன் தலைவிதி என்றால், யார் என்ன செய்ய முடியும்?
No comments:
Post a Comment