பன்னிரண்டு ’உயிர்’ எழுத்துக்களை வைத்துத்தான் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறோம். வீட்டில் தொந்தரவு செய்யும் குழந்தையை ’உயிரை வாங்காதே’ என்று திட்டுகிறோம்.
’உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்து விடு’ – என்று ஹரிஹரன் பாடாத ஊரே ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இல்லை. பாட்டைக் கேட்ட நம்மில் நூத்துக்கு ஒருத்தராவது மனீஷாவை அன்றி ”உயிர்” என்றால் என்ன, என்று ஒருவேளை யோசிக்க ஆரம்பித்திருந்தால்?… தமிழ்நாட்டில் பெரும் அறிவியல் புரட்சியே நடந்திருக்கும்… என்ன செய்வது.
துரியோதனின் உயிர் அவன் தொடையில். பொன்னி காமிக்ஸ் கதைகளில் மந்திரவாதி வில்லனின் உயிர் எப்பவும் ஏழு கடல் ஏழு மலை தாண்டிய ஒரு மாளிகையில் உள்ள கூண்டில் அடைத்த கிளியில் பத்திரமாக இருக்கும். இளவரசன் சென்று அதன் கழுத்தைத் திருகும் வரை.
நம் உடலிலே உயிர் எங்கே இருகிறது?
-o00o-
சிந்தனை (thought), மனம் (mind), தன்ணுணர்வு (consciousness) இவையெல்லாம் உயிரின் வெளிப்பாடுகளாக இருப்பதால் ஒன்றோடொன்று தொடர்புடையவையே. இவைகளை தத்துவ, ஆன்மீக, உளவியல் நோக்கில் ஆராய்ந்தும் உயிர் என்றால் என்ன என்ற கேள்வியை விவாதிக்க முடியும். காட்டாக, தன்ணுணர்வு (consciousness) என்றால் என்பதை நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் பின்வரும் கட்டுரையில் காண்க http://www.thinnai.com/?module=displaystory&story_id=40410211.
சிந்தனை, மனம், தன்னுணர்வு ஆகியவை தன்னளவில் தனியாக விவாதிக்கத் தக்க ஆழமான விஷயங்கள் என்பதால் முதலில் உயிர் என்றால் என்ன என்ற கேள்வியை மட்டும் நேரடியாக விவாதிப்போம். அறிவியல் ரீதியான விளக்கம் மட்டுமே முழுமையாகாது என்பதால் கொஞ்சம் தத்துவ விளக்கத்தையும் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது. நண்பர் எக்ஸ் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். “என்ன ஓய்! தத்துவம் பற்றி எதுவுமே சொல்லாமல் எஸ்கேப் ஆனது மட்டும் இல்லாமல், அறிவியல் தத்துவம் இரண்டும் ஒன்று என்று வேறு ஜல்லியடித்திருக்கிறீரே” என்று.
-o00o-
முற்காலத்தில் (கி.மு. 500 களில்) தத்துவம் என்ற வார்த்தை இன்றை விடவும் ஆழமான பொருளில் வழங்கியது. அறிந்திராத ஒன்றைப் பற்றிய அறிய முற்படும் சிந்தனையும் தர்க்கமும் தத்துவம் (philosophy, Greek: love of wisdom) என்றே அறியப்பட்டது. விஞ்ஞானம் என்று தனித்துறையாக வளர்ந்து பரவியிராததால், பெரும்பாலும் விஞ்ஞானிகள் என்று தனியாக எவரும் இருக்கவில்லை. எதைப்பற்றியும் சிந்திக்கும், அறிய முற்படும் சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் என்று அறியப்பட்டார்கள். நீங்கள் பள்ளியில் படித்த ஜ்யாமெட்ரியில் வரும் a2+b2=c2 என்ற தேற்றத்தை கண்டுபிடித்தது அரிஸ்டாட்டில் காலத்துக்கு முந்திய, கி.மு 495ல் காலமான அதே கிரேக்க தத்துவ ஞானி பித்தாகரஸ் தான். ’பித்தாகரஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்தது பித்தாகரஸ் அல்ல! அவர் காலத்துக்கும் முந்தைய ஒருவர்’ -என்று வாதிடும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் உண்டு.
அறிவியல், அரசியல், பொது மேலாண்மை, வரலாறு, மொழியியல் உட்பட எந்த ஒரு துறையிலும் தரப்படும் அதிகபட்சமான பட்டம் இன்றும் கூட, Ph.D (Doctor of Philosophy) என்றே அறியப் படுகிறது, என்பதை நினைவு கொள்வோம்.
-o00o-
”பிறப்பிற்கு முன்பும் இறப்பிற்குப் பின்பும் இருப்பதும், உடலை விட்டும் தனித்து இயங்குவதும், ஸ்தூலமானதும் பொருள் அல்லாததும் ஆன்மா. அதுவே எல்லா உயிர்களையும் இயக்குவிக்கிறது” என்று நம்பியவர் வேறு யாரும் அல்ல. கிரேக்க தத்துவ ஞானி தாத்தா பிளாட்டோ (கி.மு. 428–348). மரணத்திற்குப் பிறகு மீளவே முடியாத மாயைக்குள் (hades, meaning the unseen) அமிழ்ந்து விடுகிறது ஆன்மா என்று நம்பினார் பித்தாகரஸ்.
உயிர் / ஆன்மா என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமப்படுவது நாம் மட்டும் அல்ல. டி அனிமா (Latin, De anima) என்ற தலைப்பில் உயிர்/ ஆன்மா பற்றி கி.மு. 350ல் ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார் அரிஸ்டாட்டில். ”உலகில் இதுவரை கேட்கப் பட்ட கேள்விகளிலேயே மிகவும் கடினமானது உயிர்/ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விதான்” -என்று சொல்லித்தான் அதன் முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் அவர். ஆன்மா என்பது உடலின் இயக்கத்திற்கு அவசியமானது என்று கருதினாலும் அது உடல் இல்லாமல் தனித்து இயங்க முடியும் என்று தன் குரு பிளாட்டோ சொன்னதை அரிஸ்டாட்டில் முழுக்கவும் ஏற்கவில்லை என்பது இப்புத்தகத்திலிருந்து தெரிகிறது. அதற்குப் பிறகு ரொம்ப நாள் கழித்து இதையெல்லாம் படித்துப் பார்த்த இத்தாலியின் போதகரும் தத்துவ அறிஞருமாகிய தாமஸ் அக்யுனாஸ் (Thomas Aquinas கி.பி.1225–1274) ஆன்மாவை கிறித்துவ அடிப்படையில் மறு விளக்கம் செய்தார் எனினும் தர்க்க ரீதியாக விளக்கவில்லை.
“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (Genesis 2:7). என்று பைபிளில் இருப்பதால் ஆன்மா தனித்து இயங்க முடியும் என்ற பிளாட்டோவின் சிந்தனையை கிறித்தவம் ஏற்கவில்லை என்றே கருத இடமிருக்கிறது. கிறித்தவ இஸ்லாமிய யூத வழி வந்த மதங்கள் எவையும் மறு பிறப்பைப் பற்றிப் பேசுவதில்லை. இருந்தும் மரணத்தின் பிறகு மனிதர்களின் ஆன்மாக்கள் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ நிரந்தரமாகத் தங்கிவிடும் என்பது கிறித்தவ நம்பிக்கை. காட்டாக, “அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து” (மத்தேயு 12:43) “திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும்” (மத்தேயு 12:45) என்ற வரிகள்.
இஸ்லாமும் ஏறக்குறைய அவ்வாறே கருதுகிறது. “அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று (மீண்டும்) கூறினார்கள். ‘முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்”. குர்ஆன், 3062, Volume :3 Book :56.
இந்து ஞான மரபு வழி வந்த மதங்களான இந்து, சீக்கிய, ஜைன மற்றும் புத்த மதங்கள் அறம் மற்றும் கடமையை வலியுறுத்தும் பொருட்டு பிறப்பையும் முக்தியையும் முன் வைக்கின்றன. அத்வைதம் பற்றி சென்ற கட்டுரையில் மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். மேலும் த்வைதம், விஷிஷ்டாத்வைதம் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிய ஜெயமோகனின் இந்திய ஞானம், இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஆகிய புத்தகங்களைப் பார்க்கவும்.
“நான்” (“I”, self) என்ற பொருளில் அகவயமான அனுபவமாக மட்டுவே விளக்க முடியும் எனவே இல்லை அல்லது இருக்கிறது என்று நிறுவ முடியாத ஒன்று ஆன்மா -என்கிறார் இம்மானுவெல் கன்ட் (Immanuel Kant,1724–1804). Psychology (உளவியல்) என்ற வார்த்தைக்கே ”ஆன்மா இயல்” (psykhe- breath, spirit, soul + logia- study of; = study of the soul) என்று தான் பெயர்! இந்தப் பத்தியை நண்பர் எக்ஸூக்குப் படித்துக் காட்டியபோது அவர் சொன்னது - ”என்ன கொடுமை சரவணன் இது?”
-o00o-
உயிர் என்பது, உருண்டை வடிவில் பச்சை நிறத்தில் ஒரு கிலோ எடையில் உள்ள ஒரு பொருள் அல்ல. கால் பந்துக்குள் இருக்கும் காற்று போன்றதும் அல்ல. ’உயிர்’ என்று நாம் அறிவது உயிரியின் ஒரு தனித்த பண்பு அல்லது பண்புகளின் தொகுப்பையே. பிறப்பிற்கு முன்னும், மரணத்திற்குப் பின்னும் உயிர் இருப்பதில்லை. இது நவீன அறிவியல் தரும் விளக்கம்.
நீங்கள் பார்க்க முடிகிற, தொட்டு அல்லது சுவைத்து உணர முடிகிற அனைத்தும் பருப் பொருள்களே (Matter). பொருள்கள் மூலகங்களினால் (elements) கட்டப் பட்டவை. மூலகங்களின் அடிப்படைக் கட்டுமானம், மூலகங்கள் இணைந்து மூலக்கூறுகள் (molecules) உருவாகும் அடிப்படை விதிகள் ஒரே மாதிரியானவை.
ஒருவகையில் பார்த்தால் உங்களுக்கும் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணினிக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. அணு மற்றும் எலக்ட்ரான் அமைப்பு அடிப்படைகள் ஒன்றே.
உலோகக் கலவைகள், பிளாஸ்டிக் போன்ற எளிய சிறிய மூலக்கூறுகளால் ஆகியது கணினி. நம் உடலோ சிக்கலான அமைப்புள்ள பல வகையான பெரிய மூலக்கூறுகளால் ஆகி, உயர் நிலையில், இயைந்து இயங்கும்படி சிறப்பான ஒரு ஒழுங்கு வரிசையில் அணியாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
சிறப்பான அரிய கலவையான மூலக்கூறுகள் இணைந்து ஸெல் சிறு உறுப்புகளாகவும் ஸெல் சிறு உறுப்புகள் இயங்கும் வகையில் ஸெல்களாகவும் தொகுக்கப் பட்டுள்ளன. நம் உடல் கட்டிடத்தின் செங்கல் ஸெல். ஒரே மாதிரியான ஸெல்கள் தசை, நரம்பு, எலும்பு, இரத்தம் என திசுக்களாகவும் ஒரேமாதிரியான திசுக்கள் உடல் உறுப்புகளாகவும் தொகுக்கப்பட்டு உள்ளன.
சாப்பிட, செரிக்க, உணவைச் சேமிக்க, என்று தனித் தனி உறுப்புகள். பார்க்க, கேட்க, கழிவுகளைச் சேகரிக்க, சேகரித்து வெளியேற்ற, யோசிக்க, விதண்டாவாதம் பேச -இவ்வாறு பல உறுப்புகள் இணைந்து ஒருமித்து ஒரு தொகுப்பாக இயங்குவதால் நம் உடல் பல வேலைகளைச் செய்யும் திறன் பெறுகிறது. ஒரு கணினியை விடச் சிக்கலான அமைப்புடன் பல செயல்களைச் செய்யும் திறன் பெற்றுள்ளது. என் நண்பர் எக்ஸைப் போல அடுத்த கேள்வியைக் கேட்கும் முன், கீழே உள்ள வரிகளைப் படித்து விடவும்.
“இந்த பிரபஞ்சத்தில் இருப்பது ’அணுக்களும் வெற்றிடமும் மட்டுமே; மீதி அனைத்தும் நம் கருத்துக்களே” (Nothing exists except atoms and empty space; everything else is opinion – Democritus 460 – 370 BC).
டெமக்ரடீஸ் என்ற கிரேக்க ஞானி 450 பி.சி.யில் சொல்லியது. இப்பவும் பிரம்மிக்கத்தக்கது.
நீங்களும் இதை ஒரு முறை ஆழ்ந்து யோசிக்கவும். எச்சரிக்கை: மரத்தடியிலிருந்து யோசிக்க வேண்டாம், புத்தருக்கு ஆனது போல ஏடாகூடமாக ஆகிவிடக் கூடும்.
பெட்டிச் செய்திஉதவியவை, மற்றும் மேலும் படிக்க
• உடலில் மொத்தம் 100 டிரில்லியன் (1 x 1012) ஸெல்கள் உள்ளன, ஒரு சதுர அங்குலத்தில் உள்ள ஸெல்களின் எண்ணிக்கை, 19 மில்லியன் (19 x 106).
• சராசரியாக ஒரு மனித தலையில் 100,000 முடிகள் உள்ளன.
• மனித உடலில் இரத்தம் ஓடும் தமனி, சிரை, நாளங்கள் இவற்றை நீளமாக வைத்தால் அவை 60,000 மைல் நீளம் வரும்.
• பிறந்தது முதல் இறப்பது வரை நம் இதயம் சராசரியாக குறைந்தது 2.5 பில்லியன் தடவைகள் துடிக்கிறது.
• மனித இதயம் உண்டாக்கும் அழுத்தம் சுமார் 30 அடிகளுக்கு இரத்தத்தை பீய்ச்சி அடிக்கப் போதுமானது.
• உடலின் இருப்பதிலேயே உறுதியான தசை, நாக்கு.
• 2010ல் உங்கள் ஒவ்வொரு இமையும் சுமார் 10,000,000 தடவைகள் மூடித் திறந்தன (ஒவ்வொரு வருடமும்).
• ஒரு இரத்த சிவப்பணு உடலை முழுக்க சுற்றி வர ஆகும் நேரம் 20 நொடிகள்.
• மனிதர்களுள் இடது கைப்பழக்கமுள்ளவர்கள் மொத்தம் 10 சதம் மட்டுமே.
• உடலின் மொத்த எலும்புகளில் நாலில் ஒரு பகுதி பாதத்தில் உள்ளது.
• இளவேனில் காலத்தில் குழந்தைகள் வேகமாக வளருகின்றனர்.
1. Aristotle, De anima (on the soul) Translated by J. A. Smith http://classics.mit.edu/Aristotle/soul.html
2. King James Bible: http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=2; http://kingjbible.com/genesis/2.htm
3. அரவிந்தன் நீலகண்டன், அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் - ஒரு எளிய பறவை நோக்கு http://www.thinnai.com/?module=displaystory&story_id=40410211
4. From the Beginning to Plato, Edited by C.C.W.Taylor, 2005; Routledge History of Philosophy, Volume I.
5. Soul, http://www.encyclopedia.com/topic/soul.aspx#1
6. Soul, http://en.wikipedia.org/wiki/Soul
7. ஜெயமோகன், அத்வைதம் ஒரு விவாதம், http://www.jeyamohan.in/?p=7583
8. குர் ஆன், http://www.tamililquran.com/main.asp
9. Encyclopedia of Death and Dying, http://www.deathreference.com/
10. மனித உடல், http://www.kidskonnect.com/subject-index/31-health/337-human-body.html
11. ஜெயமோகன், 2009. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், தமிழினி பதிப்பகம்
12. ஜெயமோகன், 2009. இந்திய ஞானம், தமிழினி பதிப்பகம்
13. Encyclopedia of Philosophy, 2006. second edition, Thomson gale.
----------------
வேணுகோபால் தயாநிதி
நன்றி-சொல்வனம்
1 comment:
//முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்”. குர்ஆன், 3062, Volume :3 Book :56.//
வணக்கம் நண்பரே,
நல்ல தொடர்,ஒரு சிறிய கருத்து மேற்கூறிய வசனம் குரான் அல்ல ஹதித் சாலிஹ் புஹாரி 3062, 3vol,book 56
***************
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3062
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டே ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், 'இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து, 'இவர் நரகவாசிகளில் ஒருவர்' என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'அவர் நரகத்திற்கே செல்வார்" என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, 'அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்" என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், 'அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள். பிறகு, பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, 'முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்" என்று பொது அறிவித்தார்கள்.
****************
தொடர் மிகவும் அருமை.தொடர்கிறேன்.நன்றி.
Post a Comment