நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்!

நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் வாக்கியம், ``என்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?''. பொதுவாகவே நம்மைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேறுவிதமாகக் கூறுகிறார்கள், மனோவியல் நிபுணர்கள்.
அவர்கள், நமது ஆளுமையின் சில அம்சங்களை நம்மை விடப் பிறர் நன்றாக அறிவார்கள் என்கிறார்கள்.
``நமது ஆளுமையில் சில அம்சங்களை நாம் அறிய மாட்டோம். ஆனால், அதைப் பிறர் நன்றாக அறிவார்கள். அதைப் போல பிறர் தங்களைப் பற்றி அறியாத சில அம்சங்களை நாம் அறிவோம்'' என்கிறார் உளவியலாளர் சிமின் வஸிரே. இவர், வாஷிங்டன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்.
எரிக்கா என் கார்ல்ஸன் என்பவருடன் இணைந்து இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர் சிமின். இவர், ``ஓர் ஆளுமை பற்றி அறிய, அதை இரு கோணங்களில் நோக்க வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.
எனவே நமக்கு நெருக்கமானவர்களும், நம்முடன் அதிக நேரத்தைக் கழிப்பவர்களும் நன்றாக நம்மைப் பற்றி அறிவார்கள் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. ஆனால், புதியவர்களும் கூட, நமது ஆடைத் தேர்வு, இசை விருப்பம், `பேஸ்புக்'கில் வெளியிட்டிருக்கும் தகவல்கள் போன்றவற்றின் மூலம் நம்மைப் பற்றி யூகிக்க முடியும் என்பது, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் கருத்து.
பிறரைச் சரியாகக் கணிக்க முடியும் என்றபோதும் ஒவ்வொருவரும் அதைத் தமது இஷ்டம்போல மாற்றிக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக, `காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்கிற மாதிரியான செயல்பாடுகள். அடுத்தவீட்டுக் குழந்தை அறிவாளியாக இருந்தாலும், அது நமக்குத் தெரிந்திருந்தாலும், நம்முடைய குழந்தையே அறிவாளி என்று கருதத்தான் நாம் விரும்புகிறோம் என்று ஆய்வாளர்கள் தடாலடியாகக் கூறுகின்றனர்.

No comments: