மனம் வேண்டும்!



நல்ல காரியம் செய்ய வேண்டுமானாலும் கூட, அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
கோவிலுக்குப் போய், சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவதற்குக் கூட, புண்ணியம் செய்திருக்க வேண்டும்; அதற்கு மனமும் வேண்டும்.
ஒருவர், கோவிலுக்கு எதிரில் உள்ள கடைக்குப் போய் மூக்குப் பொடி வாங்குகிறார். அப்படியே கோவில் உள்ளே போய், சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தால் புண்ணியம் கிடைக்கும்; ஆனால், அவரோ, கோவில் வாசல் வரை போய், மூக்குப் பொடியை மட்டும் வாங்கி, வீட்டுக்கு வந்து விடுகின்றார்.

மூக்குப் பொடி வாங்கி வந்தால் புண்ணியமா... கோவிலில் சுவாமி தரிசனம் செய்தால் புண்ணியமா? மனம் அதில் ஈடுபடவில்லையே!
துவாரகை சென்று, கிருஷ்ணனை தரிசித்து வர வேண்டும் என்று நினைத்தார் குசேலர். வெறுங்கையுடன் போகக் கூடாது என்று, பல வீடுகளில் அவல் யாசகம் எடுத்து, அதை, ஒரு கந்தல் துணியில் முடிந்து, துவாரகைக்குப் புறப்பட்டார்.
ஒரு வீட்டுத் திண்ணையில், ஒரு சந்தேகப் பேர்வழி இருந்தார். குசேலர், அவலுடன் துவாரகைக்குத்தான்
போகிறாரா, தெருக்கோடியில் போய் அவலைத் தின்று விட்டு வருகிறாரா பார்க்கலாம் என்று நினைத்தார் அவர்.
குசேலர் போன வழியே பின் தொடர்ந்தார். துவாரகை போய் சேர்ந்தார் குசேலர்;
சந்தேகப் பேர்வழியும் பின்னாடியே துவாரகை போய் சேர்ந்தார்.
கண்ணன் மாளிகை வாசலில் போய் நின்றார் குசேலர். இவர் வந்திருப்பதை அறிந்த கண்ணன், தன் ஆட்களை அனுப்பி, தன் மாளிகைக்குள் குசேலரை அழைத்து வரச் செய்தார். குசேலரும், கண்ணன் மாளிகைக்குள் போய் விட்டார்.
இத்தனையையும் மறைந்திருந்து பார்த்து, நிஜமாகவே அவலுடன் கண்ணனைப் பார்க்கத்தான் குசேலர் போயிருக்கிறார்; அவர் பொய் சொல்லவில்லை என்ற திருப்தியோடு, ஊர் திரும்பினார் அந்த சந்தேகப் பேர்வழி.
குசேலரைப் பின் தொடர்ந்து, துவாரகை வரை போனவர், மாளிகைக்குள் போய் கண்ணனை தரிசித்து வந்திருக்கக் கூடாதா? அந்தளவுக்கு அவருக்கு புண்ணியமும் இல்லை, மனமும் இல்லை; அவர் எண்ணமெல்லாம் குசேலர் உண்மை சொன்னாரா, பொய் சொன்னாரா என்பதிலேயே தான் இருந்தது; பகவானுடைய எண்ணம் வரவில்லை.
எனவே, சந்தர்ப்பம் கிடைக்கும் போது புண்ணியத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதற்கு மனம், புத்தி எல்லாம் பகவானிடம் செல்ல வேண்டும். கோவிலுக்குப் போகலாம் என்று கிளம்புவான்; வழியில் ரிகார்டு டான்ஸ் நடக்கும். கோவிலுக்குப் போவதை விட்டு விட்டு, ரிகார்டு டான்ஸ் பார்த்து, வீட்டுக்கு திரும்புவான்.
கோவிலுக்குப் போனால், புண்ணியம் கிடைக்கும்; ரிகார்டு டான்ஸ் பார்த்தால், என்ன புண்ணியம் கிடைக்கும்? யோசித்து, செயல்பட வேண்டும்.

No comments: