பல அவதாரங்கள் எடுத்து, பக்தர்களை காத்தார் பகவான்; அதில், ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் ஒன்று. இந்த அவதாரத்தில், அவரது அருள் பெற்றவர்கள் ஏராளம். பகவானுக்கு இப்படி அருள் செய்வதிலேயே ஒரு தனி ஆனந்தம். இது தான் பகவத் குணம். ஒரு சமயம், தீட்சித பத்தினிகளுக்கு உபதேசம் செய்து, அருள் செய்ய வேண்டும் என்று எண்ணினார்; அதற்கு, சந்தர்ப்பமும் ஏற்பட்டது. யமுனா நதிக்கரையில் கோபர்களுடன் தங்கி இருந்தார். அவர்களுக்கு பசி உண்டாயிற்று; கண்ணனிடம் கூறினர். அதைக் கேட்ட கிருஷ்ணன், "இங்கே அருகாமையில் தீட்சிதர்கள் யாகம் செய்கின்றனர். அங்கே நிறைய போஜன பதார்த்தங்கள் இருக்கும். உங்களில் ஒரு சிலர் அங்கே போய், "கிருஷ்ணர், பலராமர் மற்றும் பல கோபர்கள் யமுனை கரையில் தங்கி இருக்கின்றனர்; பசியால் வாடுகின்றனர். அவர்களுக்காக அன்னம் கொடுங்கள்... என்று கேட்டு, வாங்கி வாருங்கள்...' என்று சொல்லி, சில கோபர்களை அனுப்பினார்.
யாக சாலைக்குச் சென்று, தீட்சிதர்களிடம் அதேபோல் கோபர்கள் கூறினர்; ஆனால், அந்த தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். எந்த பகவானை திருப்தி செய்ய இந்த யாக, யக்ஞங்களை செய்கிறோமோ, அதே பகவான் தான் கிருஷ்ணனாக வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வில்லை. கிருஷ்ணனை சாதாரண மனிதனாகவே நினைத்து விட்டனர். யாகம் நடக்கும் போது வெளியார் யாருக்கும், எதுவும் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டனர்.
கோபர்கள் திரும்பி வந்து விவரத்தை கூறினர். மறுபடியும் அவர்களை பார்த்து, "நீங்கள் தீட்சித பத்தினிகள்
இருக்கும் கொட்டகைக்குப் போய், அவர்களிடம் கிருஷ்ணனும், மற்றவர்களும் வந்திருப்பதாகவும், பசிக்கு ஆகாரம் வேண்டும் என்று சொல்லுங்கள்...' என்றார் கண்ணன்; அவர்களும் அப்படியே செய்தனர்.
தீட்சித பத்தினிகள் முன்னமே கிருஷ்ணனை பற்றி கேள்விப்பட்டிருக்கின்றனர்; அவனை தரிசனம் செய்து, ஆத்ம லாபம் பெற வேண்டும் என்றும் ஆவல் கொண்டிருந்தனர். இப்போது, கண்ணனே நேரில் வந்திருப்பதாகவும், பசியோடு இருப்பதாகவும் கேள்விப்பட்டதும், மிகுந்த ஆனந்தத்துடன் போஜன வகைகளை எடுத்துக் கொண்டு, கோபர்களுடன் கிருஷ்ணன் இருக்கும் இடத்துக்கு வந்தனர். தீட்சித பத்தினிகள் கொண்டு வந்ததை எல்லாம் கோபாலனுக்கு அர்ப்பணம் செய்து, வணங்கி நின்றனர்.
கோபர்களுடைய பசியைப் போக்கி, சந்தோஷத்துடன் தீட்சித பத்தினிகளுக்கு உபதேசம் செய்து, "நீங்கள் திரும்பிப் போய், உங்கள் கணவன்மார்கள் இருக்குமிடத்தில் யாகத்தை பூர்த்தி செய்யுங்கள். உங்களுக்கெல்லாம் மோட்சம் கிடைப்பது நிச்சயம்...' என்று அருளினார் பகவான். தீட்சித பத்தினிகளும் திரும்பிச் சென்று, தீட்சிதர்களிடம் நடந்த விஷயத்தை கூறினர். அதை கேட்ட தீட்சிதர்கள், "அடடா... வந்திருக்கும் கிருஷ்ணன் அந்த பரமாத்மா தான் என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது; வேத சாஸ்திரம் படித்து, யாக, யக்ஞம் செய்யும் நமக்குத் தெரியாமல் போய் விட்டதே...' என்று வருந்தினர்; பிறகு புத்தி வந்தது. பகவான் யாவருக்கும் அருள் செய்யக் கூடியவன். அதை புரிந்து, அவனை அணுக வேண்டும்; அவ்வளவுதான்!
No comments:
Post a Comment