அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது

தானத்தில் சிறந்ததென அன்னதானம், கல்வி தானம், கண் தானம்... என ஆயிரம் தானங்களைச் சொல்வோம்.
ஒவ்வொரு தானமும் உயர்ந்தது தான், சந்தேகமில்லை.



அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது : மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அலுவலர் பிரபா சாமிராஜ்: ஆரோக்கியமான உடல்நலம் உடையவர்கள் தாராளமாக ரத்ததானம் செய்யலாம். அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது. ஒருவரின் ரத்தத்தில் இருந்து சிவப்பணு, பிளாஸ்மா, பிளேட்லெட் செல்கள் தனியாக பிரிக்கப்பட்டு மூவரின் உயிர் காப்பாற்றுவதற்கு உதவுகிறது. நபருக்கேற்ப 100, 350, 450 மில்லி ரத்தம் சேகரிக்கப்படுகிறது. எட்டு முதல் 10 நிமிடங்களாகும். அதன்பின் குறைந்தது ஒருமணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.

250 மில்லி பழச்சாறு, அரைலிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். அன்றைய தினம் கடினமாக உடற்பயிற்சி, உடல் வேலை, வாகனம் ஓட்டுதலை தவிர்க்கலாம். மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 9 முதல் மதியம் ஒருமணி வரை, தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யலாம்.


யார் கொடையாளி?*18 முதல் 60 வயதுக்குட்பட்ட 45 கிலோ எடைக்கு மேல் உள்ள ஆண், பெண்கள்.
*ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருப்பவர்கள்.
*ரத்தஅழுத்தம் 120/70 முதல் 140/90 இருப்பவர்கள்.
*ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை, பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தானம் செய்யலாம்.
*மாதவிடாய் துவங்கிய ஒன்று முதல் ஐந்து நாட்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தபின், ரேபிஸ் நோய் சிகிச்சைக்கு பின் ஓராண்டு வரை, டைபாய்டு, மலேரியா நோய் சிகிச்சைக்கு பின், டாட்டூஸ் (பச்சை) குத்தியபின் ஆறுமாதங்கள் வரை, மது குடித்த பின், 24 மணி நேரம் வரை ரத்த தானம் செய்யக் கூடாது.
*இருதயநோய், காசநோய், வலிப்புநோய், ஆஸ்துமா, இன்சுலின் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்துபவர்கள், மனநலம் குன்றியவர்கள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோயாளிகள், ரத்தம் உறையாத பிரச்னையுள்ளவர்கள், எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் நிரந்தரமாக ரத்ததானம் செய்யக்கூடாது.


"உதிர தான' கழகமும், உயிர்காக்கும் மகத்துவமும் : அரிய வகை ரத்தம் கொண்ட உறுப்பினர்களை இணைத்து "உதிரம்' அமைப்பை உருவாக்கியுள்ளார் டாக்டர் தங்கபாண்டியன். இவர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலக திட்ட அலுவலராகவும் உள்ளார்.


மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து ஏழு மணி நேரம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அரியவகை ஓ, ஏ, பி, ஏபி, ஏ2பி நெகடிவ் மற்றும் ஏ2பி பாசிட்டிவ் ரத்தபிரிவை சேர்ந்தவர்கள் "உதிரத்தின்' உறுப்பினர்கள். கடந்தாண்டு துவங்கி, ஐந்து முகாம்களின் மூலம் 650 அலகுகள் ரத்தம் தானம் செய்தனர். அமைப்பின் தலைவர் தங்கபாண்டியன் கூறியதாவது: ரத்தத்திற்கு மாற்று ரத்தம் தான். அரசு மருத்துவனையோ, தனியார் மருத்துவமனையோ, ரத்தம் இல்லாமல் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகக்கூடாது. நாங்கள் தானம் செய்த 150 அலகுகள் ரத்தம், நோயாளிகளின் உயிரை காத்துள்ளது. மாற்றுத் திறனாளி ஒருவருக்கு "ஓ நெகடிவ்' ரத்தவகை கிடைக்காததால், நான்கு மாதங்களாக இருதய சிகிச்சை செய்ய முடியவில்லை. 13 வயது பெண்ணுக்கு ஹீமோபிலியா (ரத்தம் உறையாது) பாதிப்பால், மாதவிடாய் காலத்தில் தொடர் உதிரப் போக்கு (பி நெகடிவ்) ஏற்பட்டது. அனுமந்தன்பட்டியில் ஒரு பெண்ணுக்கு (ஏ நெகடிவ்) தைராய்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு ரத்தம் கிடைக்காமல் அவதிப்பட்டார். இதுபோன்றவர்களுக்கு உதிரம் கொடுத்து, அவர்களை வாழ வைத்ததே எங்கள் சாதனை, என்றார்.
இன்று, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை, ரத்த தான முகாம் நடக்கிறது.
உதிரத்தில் உறுப்பினராக சேர வேண்டுமா, டாக்டர் தங்கபாண்டியன் (80125 02345), ஜோஸ்வா சாமுவேல் ஜெபராஜ்(90424 21911) ஐ தொடர்பு கொள்ளலாம்.


உயிரை காப்பாற்றும் குருதிக் கொடை : - இன்று சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினம்-:தானங்களிலேயே சிறந்தது ரத்த தானம். உடலுறுப்புகளை இறந்த பிறகு தான் தானம் செய்ய முடியும். உயிருடன் இருக்கும் போதே ரத்ததானம் செய்ய முடியும். உலகில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பான ரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது.


பல நாடுகளில் ரத்தம் தேவைப்படும் போது நோயளியின் உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து தான் ரத்தம் பெறப்படுகிறது. சில நாடுகளில், ரத்த தானம் செய்வோர் பணம் பெறுகின்றனர். பெரும்பாலான நேரங்களில், சுயமாக ரத்ததானம் செய்ய முன்வருவோரின் ரத்தமே பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல, தொண்டுள்ளம் படைத்தோருக்காகத் தான் சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினம், ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.


யார் தரலாம் : ரத்தத்தை வகைப்படுத்தும் முறையை கண்டறிந்த, கார்ல் லேண்ட்ஸ்டெய்னரை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த தினம், உலக ரத்த தானம் செய்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது.எல்லோரிடமிருந்தும் ரத்தம் தானமாக பெறப்படுவதில்லை. ரத்தம் கொடுப்பவரின் வயது 18லிருந்து 60க்குள் இருக்க வேண்டும். எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும், உடலின் வெப்ப நிலையும் சரியான அளவில் இருப்பது அவசியம். நமது உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கிறது. இதில் 350 மி.லி., மட்டுமே தானத்தின் போது எடுக்கப்படுகிறது. 2 நாட்களுக்குள் இழந்த ரத்தத்தை உடல் மீட்டுவிடுகிறது. 2 மாதங்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடுகிறது. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.


அதிகரிக்கும் தேவை : உலகில் ஆண்டுதோறும், 9 கோடியே 20 லட்சம் பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதில் 45 சதவீதம், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. 25 நாடுகளில் 40 சதவீதத்துக்கும் மேலானோர் ரத்த தானம் செய்கின்றனர். மருத்துவமனைகளில் ரத்த அளவை, போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சை தர முடியும். வளரும் நாடுகளில் ரத்த தானம் செய்வோரின் சதவீதம் (1000 பேருக்கு 10 பேர் மட்டுமே) குறைவாக உள்ளது. அனைவரும் தாமாக முன்வந்த ரத்த தானம் செய்வோம் என இத்தினத்தில் உறுதி எடுப்போம்.


உடம்பில் ஓடும் மூலாதாரமான செங்குருதியை, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க, பரந்த மனம் வேண்டும். நல்இதயம் படைத்தோர் செய்யும் உன்னத தானம் தான் ரத்த தானம். இன்று ரத்ததான தினம். உதிரம் கொடுத்து, பல உயிர்களை காப்பாற்றியவர்கள், தங்களது அனுபவங்களை விளக்குகின்றனர்.


விவேகானந்தன் (சுயதொழில், மதுரை): 24 வயதில் ஆரம்பித்து, கடந்த 26 ஆண்டுகளாக 80 முறைக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளேன். ஆண்டுக்கு ஐந்துமுறை தானம் செய்வேன். போனில் தகவல் தெரிவித்தால், மருத்துவமனைக்கு நேரில் சென்று தானம் செய்வது எங்கள் நண்பர்களின் வழக்கம். மதுரையைச் சேர்ந்த ஒருவரின் ஆறுமாத குழந்தைக்கு ரத்தத்தில் அணுக்கள் பற்றாக்குறை காரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்தம் ஏற்றவேண்டியிருந்தது. அதன்பின் மாதந்தோறும் ரத்தம் செலுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து 12 ஆண்டுகளாக நண்பர்கள் அட்டவணையிட்டு ரத்ததானம் செய்தோம். தற்போது அந்த சிறுவன் நன்றாக இருக்கிறான். இனிமேல் ரத்தம் செலுத்த வேண்டியதில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். எங்களைப் பொறுத்தவரை, ஒரு குழந்தையை காப்பாற்றியதை பெருமையாக நினைக்கிறோம்.


பானுமதி (வங்கிஅலுவலர், மதுரை): இதுவரை 14 முறை தானம் செய்துள்ளேன். ஒருமுறை கடலூரிலிருந்து நெய்வேலிக்கு பணிஇடமாற்றத்தின் காரணமாக, வீட்டை காலி செய்து, வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். "கர்ப்பப்பை வெடித்ததால், உயிருக்கு போராடும் பெண்ணுக்கு ரத்ததானம் தேவைப்படுகிறது' என, போன் வந்தது. சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்ததானம் செய்தேன். அந்தப் பெண் தற்போது நலமாக உள்ளார். அதேபோல மதுரையில் "அப்பென்டிசைட்டிஸ்' பிரச்னையால், ரத்தப்போக்கு ஏற்பட்டபோது, ரத்ததானம் செய்தேன். அவரும் நன்றாக உள்ளார். உயிரைக் காப்பதை விட, பெரிய தானம் எதுவும் இல்லை.


பாஸ்கர் (போட்டோகிராபர், திண்டுக்கல்): 18 வயதில் துவங்கி, இதுவரை 100 முறை ரத்தானம் செய்துள்ளேன். 75 முறை ரத்ததானம் அளித்ததற்காக 2004 ல் தமிழக அரசின் தங்கபதக்கம், சான்றிதழ் பெற்றேன். ஐந்தாண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாங்கரை பிரிவில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடந்த லாரியின் மீது ரயில் மோதியது. இதில் உயிருக்கு போராடிய இருவருக்கு ஒரே நேரத்தில் ரத்தம் கொடுத்து காப்பற்றினேன். 2008 ல் நந்தவனப்பட்டியில் நடந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன். அவர்கள் உயிர் பிழைத்து என்னை வாழ்த்திய போது, பிறவி பயனடைந்ததை உணர்ந்தேன்.


டாக்டர் செல்வராஜ் (வடுகபட்டி): மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது ரத்ததானக் குழு செயலாளராக இருந்தேன். ஒரே ஆண்டில் 50 ஆயிரம் பாட்டில்கள் ரத்தம் சேகரித்து கொடுத்தோம். 61 தடவை ரத்ததானம் செய்துள்ளேன். 1999ல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்த பெண்ணுக்கு, ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன். தானம் செய்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு புத்துணர்வு ஏற்படும். தேனி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.


டாக்டர் சரவணன் (பரமக்குடி):கல்லூரி பருவத்திலிருந்து 58 முறை ரத்ததானம் செய்துள்ளேன். நம் உடலில் உள்ள வயதான ரத்த சிவப்பணு செல்கள் அழிந்து சுழற்சி முறையில் புதுப்பிக்கப்படுகின்றன. ரத்தம் கொடுக்கும் போதும் புது செல்கள் உருவாகி, உடலுக்கு புத்துணர்வை தரும். மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரின் கல்லீரல் ஆப்பரேஷனுக்காக எட்டுபேர் ரத்ததானம் செய்தோம். அங்கிருந்த பேராசிரியர் எங்களை அழைத்து ஆப்பரேஷனை நேரடியாக பார்க்க அனுமதித்தார்.


ஏ.ஆர்., தேவராஜன் (காஸ்மாஸ் லயன்ஸ் சங்க துணை தலைவர், காரைக்குடி): 18 ஆண்டுகளில் 75 முறை ரத்தம் வழங்கியுள்ளேன். எனது ரத்தம் அரியவகை,"ஓ' நெகடிவ். 1993ல் மருத்துவமனையில் இருந்த எனது தாயை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கர்ப்பிணிக்கு ரத்தம் தேவைப்பட்டது. வலியசென்று ரத்ததானம் செய்தேன். இன்று வரை தொடர்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் வியாபார ரீதியாக இலங்கை சென்றிருந்தேன். அங்கு ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்ததானம் செய்தேன். இன்றுவரை அவர் யாரென எனக்கு தெரியாது. குறைந்தது 100 முறையாவது தானம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.


ஆர். சந்திரமோகன் (விவசாயி, விருதுநகர்): 53 முறை ரத்ததானம் செய்துள்ளேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தம் கொடுத்தேன். பந்தல்குடியை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ரத்ததானம் செய்ததன் மூலம் ஒன்பது மாதங்கள் உயிர்வாழ்ந்தார். பிரசவ நேரத்தில் நிறைய பெண்களுக்கு அதிகமுறை ரத்தம் வழங்கியுள்ளேன். சிறுகுழந்தைகளுக்கு 100 மில்லி ரத்தம் கொடுத்தால் போதும் என்று சொல்லும் போது, மனதுக்கு வருத்தமாக இருக்கும்.

Thanks...

No comments: