“எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்’ என்பது பழமொழி. நம் உடல் உறுப்புகளை செயல்படுத்தும் ஒட்டு மொத்த கன்ட்ரோல் நம் தலையில் இருக்கக்கூடிய மூளையாகும்...
கடந்த 2000ம் ஆண்டு உலக சுகாதார ஆய்வுப்படி சாலை விபத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் 7ம் இடத்தில் இருந்தது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்வரும் 2020 ல் 2ம் நிலையை அடையும். இதற்கு காரணம் பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்வதே ஆகும் என மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.செல்வமுத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 50 சதவீத சாலை விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவு , மது அருந்தி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது தான் முக்கிய காரணங்களாகும். ஆகவே வருமுன் காப்பது சாலை விபத்தினால் ஏற்படும் மூளைக்காயத்திற்கு சாலச்சிறந்தது. சாலை விபத்து முக்கியமான உயிர்க்கொல்லி நோயாக உலகளவில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. தலைக்காய சிகிச்சை முறையில் நம் மருத்துவமனை பல முன்னேற்றங்கள் கொண்டுள்ளது. சிறந்த செயற்கை சுவாசக் கருவிகள், மூளையில் ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவிகள் மற்றும் சமீப கால மருந்துகள் தலைக்காய நோயாளிகளுக்குத் தற்பொழுது வரப்பிரசாதமாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது. எவ்வளவு தான் மருத்துவம் முன்னேற்றம் அடைந்தாலும், தலைக்காயத்தை வரும் முன் காப்பது நம் கையில் உள்ளது. சாலை விதிகளை மதித்தல், ஹெல்மெட் அணிதல், மது அருந்தாமல் வாகனம் ஓட்டுதல் முதலியவற்றை கடைபிடித்து நம் உயிரையும், மூளையையும் காப்பாற்றுவோம்.
விபத்தில் சிக்கியவரை கழுத்து முதல் முதுகெலும்பு வரை வளையாமல் நேராக படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். வெளிநாடுகளில் உள்ள சாலையோர விபத்து சிகிச்சை பிரிவில் பணியாற்றும் பாரா மெடிக்கல் பணியாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கங்கள் உரிய பயிற்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை தரம் பிரித்து பார்க்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். அதே போல் நாமும் பின்பற்ற வேண்டும்.
சாலை விபத்தில் சிக்கி சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு வாய் வழியாக நுரையீரலுக்கு மூச்சுக்குழாயை செலுத்த வேண்டும். அதன் மூலம் மருத்துவமனை வரும் வரை செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். அதனால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும், மூளைக்கும் ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்கும். ரத்த அழுத்தம் சரியான விகிதத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.
சாலை விபத்திற்காகவே தனியாக சிறப்பு கவனப்பிரிவும் செயல்பட்டு வருகிறது. ஆக மொத்தத்தில் என்னதான் மருத்துவத்துறை முன்னேறினாலும் சாலையில் செல்பவர்கள் சாலை விதிகளை மதித்து செல்லுதல், ஹெல்மெட் அணிதல், மது அருந்தாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற கொள்கைகளை தவறாமல் கடைபிடித்து வந்தால் வெகுவிரைவில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கலாம்.
- டாக்டர்.கே.செல்வமுத்துக்குமரன்
Thanks...
http://kalaimakal.do.am/index/0-280
No comments:
Post a Comment