கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்
விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்
மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல்கள்
மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமானச் சான்றிதழ்
கல்விக் கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்புச் சான்றிதழ்(ஏதேனும் இருந்தால்)
கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவரது அல்லது அவரது பெற்றோரது அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரது கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு அறிக்கை
வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமானக் கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை அல்லாமல், வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பிருக்கிறது. அவற்றையும் மாணவர்கள் அளிக்க வேண்டியது அவசியம்.

மாணவர்களுக்கான வங்கிக் கடன்

இந்திய மாணவர்கள் இந்தியா அல்லது வெளிநாட்டில் உயர் கல்விப் பெற வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. பணம் இல்லாத காரணத்தால் உயர் கல்வியை யாரும் இழக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
அதற்கான வழிமுறைகள்
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் வயது வரம்பு - 16 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எந்தெந்த செலவுகளுக்கு கல்விக் கடன் -  சேர்க்கை மற்றும் தேர்வுக் கட்டணம், முன்பிணையத் தொகை, புத்தகம் வாங்குதல், பயணச் செலவு.
இந்தியாவில் படிக்க வழங்கப்படும் கடன் தொகை - 10 லட்சம் ரூபாய் வரை.
வெளிநாட்டில் படிக்க வழங்கப்படும் கடன் தொகை - 20 லட்ச ரூபாய் வரை.
கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் - 5 முதல் 7 ஆண்டுகள்.

கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை

கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கினார்.
தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, வழிகாட்டி எனும் உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
"அது சரி...! படிக்க நிறைய செலவு ஆகுமே என்ற கவலையா?" எனும் தலைப்பில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் பேசியதாவது: மாணவர்களுக்கு பணம் இல்லை என்பதால், கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், முழு முனைப்புடன் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கல்விக் கடன் திட்டம். நாட்டில் 25 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இவற்றில், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., மெடிக்கல், இன்ஜி., உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளுக்கும் வங்கிகள் கல்வி கடன்களை வழங்குகின்றன. பொதுத் துறை வங்கிகளிடம், சிறப்பு படிப்புகளுக்கு மட்டும் கல்விக் கடனை பெற முடியாது.
வங்கிகளிடம் கல்விக் கடனை பெறும் முன், இருக்கும் தேவையான ஆவணங்களை முதலிலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு வேண்டும். உள்நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு 10 லட்சமும், வெளிநாட்டில் உள்ள படிப்புகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசத்தை வங்கிகள் வழங்குகின்றன.
கல்விக் கடனை பெற விரும்பும் மாணவர்கள், வங்கி பணிகள் அதிகம் இருக்கும் நாட்களைத் தவிர்த்து அணுகினால், கல்விக் கடன் பெறுவதில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் என, அனைத்து விவரங்களையும் எளிதில் அறிந்து, கடனை பெற உதவியாக இருக்கும். கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதை மாணவர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு விருத்தாசலம் பேசினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்

உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments: