அட்சய திரிதியை நன்னாள், தர்மத்தை வலியுறுத்துகிறது. தர்மம் இருக்கும் நாட்டில், செல்வம் பெருகும். இந்நாளில் செய்யப்படும் தர்மம், பெரும் நன்மை தரும். ஒரு காலத்தில், மக்களின் பசி தீர்க்க, இந்நாளில் தயிர்சாதம் தானம் செய்தனர். "அட்சய' எனும் சொல்லுக்கு, "வளர்தல்' என்று பொருள். இந்தச் சொல்லுக்குரிய மகிமை பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்...
விஜயரகுநாத நாயக்க மன்னர், ஆந்திர, கர்நாடகத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒரு சமயம், அவரது ஆட்சியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக மழை இல்லாததால், தண்ணீர் பஞ்சமும் வந்து விட்டது. வசதி உள்ளவர்கள் பக்கத்து ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர். ஏழை ஜனங்கள் மடியும் நிலை ஏற்பட்டது.
ஒருநாள், அவ்வூர் அமைச்சர் வீட்டிற்கு ஓடி வந்தான் ஒரு ஏழை விவசாயி. அவன் அங்கிருந்த அமைச்சரிடம், "அமைச்சரே... எங்கள் குடும்பம் பட்டினியால் தவிக்கிறது. வயல்கள் காய்ந்து விட்டதால், வேலை இல்லை; பணமின்றி அவஸ்தைப் படுகிறேன். இப்போது, குடிநீரும் இல்லை. என் மனைவி சாகக் கிடக்கிறாள். அவளுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால் போதும்; பிழைத்துக் கொள்வாள். எனக்கு, ஐந்து பெண் குழந்தைகள். தாயில்லாவிட்டால் என் குழந்தைகளின் நிலை என்னாகும்? தயவு செய்து என் மனைவியைக் காப்பாற்றுங்கள்...' என்று புலம்பினான்.
இரக்கமுள்ள அந்த அமைச்சர், அவனை தன் தேரில் ஏற்றி, ஒரு பானை தண்ணீருடன் சென்றார். அங்கு போய் அவளுக்கு தண்ணீர் கொடுப்பதற்குள், அவளது தலை சாய்ந்து விட்டது. அந்த ஏழையும், அவனது பிள்ளைகளும் அழுத அழுகை, அமைச்சரை சங்கடப்படுத்தியது. அந்த ஏழைக்கு ஆறுதல் சொல்லி, அந்தப் பெண் குழந்தைகளின் திருமணத்துக்கு பணம் கொடுத்து விட்டு வந்தார்.
மறுநாள், இதுபற்றி மன்னரிடம் சொன்ன அமைச்சர், "மன்னா... இயற்கையை யாராலும் வெல்ல இயலாது. நாம் மகான் ராகவேந்திரரை அழைப்போம். அவர், இங்கு வந்தாலே போதும். மழை பெய்யுமென நான் நம்புகிறேன். மக்கள் படும் வேதனை தீரும்...' என்றார்; மன்னரும் சம்மதித்தார்.
ராகவேந்திரரை அவர்கள் அழைத்து வந்தனர். அவர் தரையில் நெல்லைப் பரப்பி, "அட்சய' என்று எழுதினார்; மறுநிமிடமே மழை கொட்டியது. 10 ஆண்டுகளாக பெய்யாத மழை, 10 நாட்களில் கொட்டி, கண்மாய்கள் நிரம்பின; ஆறுகள் பெருகி ஓடின. மக்கள் விவசாயப் பணிகளைத் துவக்க, மன்னர் மானியம் அளித்தார்.
"அட்சய' எனும் சொல், அந்தளவுக்கு சக்தி வாய்ந்தது. அட்சய திரிதியை நன்னாளில் நகை, பொருள் வாங்கினால், ஏராளமாய் பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நமக்காக மட்டும் இல்லாமல், தர்ம சிந்தனையுடன் கஷ்டப்படுபவர்களுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, வசதி படைத்தவர்கள் ஏழைப் பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுக்கலாம்; ஏழை மாணவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்யலாம்.
இந்நாளில், நகை வாங்குவதன் மூலம், சேமிக்கும் வழக்கமும் ஏற்படுகிறது. ஐந்தாண்டுக்கு முன், ஒரு பவுன் நகை, எட்டாயிரத்துக்கு வாங்கி இருந்தால், அதன் இப்போதைய மதிப்பு, 16 ஆயிரம் ரூபாய், இப்படி இரட்டிப்பு நன்மை கிடைக்கச் செய்யும் விழாவாக, அட்சய திரிதியை அமைந்துள்ளது.
இந்நாளில், லட்சுமி தாயார் படத்தின் முன், நெய் விளக்கேற்றி, செல்வம் பெருக வேண்டுவர். உழைப்பின் மூலம் பெறும் செல்வம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதற்காக, கிருஷ்ண பகவானை வழிபட வேண்டும். திரவுபதியின் புடவையை கவுரவர்கள் இழுத்து அவமானப்படுத்திய வேளையில், கிருஷ்ணர் அவள் முன் தோன்றி, "அட்சய' என்றார்; அந்தப் புடவை வளர்ந்து கொண்டே இருந்தது. இவ்வகையில், வாழ்க்கையில் சிரமப்படுபவர்களுக்கு பாதுகாப்பு தரும் நன்னாளாகவும் அட்சய திரிதியை அமைந்துள்ளது. அட்சய திரிதியை நன்னாளில், அனைவர் இல்லத்திலும் செல்வ வளம் பெருக வேண்டுவோம்.
ஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...
செல்வ வளம் பெருகட்டும்!-மே-6 அட்சய திரிதியை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment