வீடு கட்டும் முன் இங்கே வாங்க!

வீடுகட்டும் பணி தடையின்றி நடக்க திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோயிலுக்கு சென்று வாருங்கள். 
தல வரலாறு: அந்தகாசுரன் என்ற அசுரன் தேவர்களுக்கு தொல்லை தந்தான். அவனை அழித்த சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. பசி தணியாததால் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தது. சிவபெருமான் பூதம் முன் தோன்றி, ""வேண்டிய வரம் கேள்,'' என்றார்.
""
மூன்று உலகங்களையும் எரித்து அழிக்கும் திறன் வேண்டும்,'' என கேட்டது.
சிவபெருமானும், சில காரணங்களால் அந்த வரத்தை அளித்தார். பூதம் முதலில் பூமியை விழுங்க முற்பட்டது. தேவர்கள் அதைத் தடுத்து, பூமியில் குப்புறத்தள்ளி, பூதத்தை அழுத்திப் பிடித்து எழ முடியாதபடி செய்தனர். கவிழ்ந்த நிலையில் இருந்த அந்த பூதம், தேவர்களிடம் ""எனக்கு பசிக்கிறது! நீங்கள் அழுத்திப் பிடித்துள்ளதால் என்னால் உணவு தேடி போக முடியாது. நீங்களே உணவளியுங்கள்,'' என்றது. 
""
பூதமே! பூலோகமக்கள் வீடு, கட்டடம் கட்டும் முன், மனைப்பகுதியில் செய்யும் பூஜையில் வழங்கும் பொருள்களும், விதிமுறையின்றி செய்யப்படும் யாகங்களில் வழங்கப்படும் பொருள்களும் உனக்கு உணவாகட்டும். பிரம்மன் முதலான 45 தேவர்களின் சக்தி உன்னை அழுத்திப் பிடித்திருக்கும். குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஒன்றரை நாழிகை (36 நிமிடம்) நேரம் எழ அனுமதி தரப்படும். உனக்கு "வாஸ்துபுருஷன்' என்று பெயரிடுகிறோம். நீ எழும் நேரத்தில் மக்கள் மனை பூஜை செய்வர். அப்போது அவர்கள் உனக்கு உணவு அளிப்பர். அதற்கு நன்றிக்கடனாக, அவர்கள் எழுப்பும் வீடு, கட்டடங்களை நல்ல முறையில் எவ்வித குற்றம் குறையுமில்லாமலும், தடையில்லாமலும் முடித்து தர வேண்டும்,'' 
என்றனர். பூதமும் சம்மதித்தது. அச்சம் தரும் தோற்றத்தில் மண்ணில் முகம் புதைத்திருந்ததால், பூதம் பிறந்த இடத்துக்கு "மண்ணச்சநல்லூர்' என்று பெயர் ஏற்பட்டது. இதுவே வாஸ்து பூதம் ஆனது. இதை உருவாக்கிய சிவனுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு "பூமிநாதர்' என்று பெயர் சூட்டப்ட்டது. 
சிறப்பம்சம்: பூமிநாத சுவாமி சுயம்புலிங்கமாக உ<ள்ளார். சிவன் கோயிலில் பொதுவாக பைரவர் தெற்கு நோக்கியே நிற்பார். ஆனால், இங்கு மேற்கு முகமாக உள்ளார். 
வாஸ்து பரிகார பூஜை: வீடு கட்டும் முன்னும், நிலம் வாங்கும் முன்னும் நிலத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்து வரவேண்டும். வாஸ்து நாள் அன்று இந்தக் கோயிலுக்கு கொண்டு வந்து தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜித்த மண்ணுடன் கருவறையை வலம் வந்து, முகப்பு மண்டபத்தில் கட்டிவிட வேண்டும். கட்டுமானப்பணிகள் துவங்கியவுடன், மீண்டும் கோயிலுக்கு வந்து, மண்டபத்தில் கட்டிய மண் முடிச்சை அவிழ்த்து கோயில் வளாகத்திலுள்ள வில்வ மரத்தடியில் கொட்ட வேண்டும். 
இதனால், தடையின்றி வீடு, கட்டடப் பணிகள் நடக்கும் என்பது ஐதீகம். புது கட்டடம் கட்டுபவர்கள், வில்வ மரத்தடியிலிருந்து மண்ணெடுத்து பிரகாரம் வலம் வந்து, மனையின் வடகிழக்கு மூலையில் போடுவதன் மூலமும் பணிகள் தங்குதடையின்றி நடப்பதாக நம்பிக்கையுள்ளது. வாஸ்துநாள் தவிர, அமாவாசையும், புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களில் மண் பூஜை நடத்துவதும் விசேஷம்.
அம்மனுக்கு வஸ்திரம்: அம்பாள் அறம்வளர்த்த நாயகிக்கு வஸ்திரம் சாத்தி வழிப்பட்டால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. 
திறக்கும் நேரம்: காலை 6- பகல் 11.30 மணி, மாலை 4- இரவு 8 மணி.
இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 12 கி.மீ., 
போன்: 93447- 69294. 

 

No comments: