ஆறாத துன்பத்தையும் ஆற்றும் அப்பக்குடத்தான்!

எத்தனை பரிகாரம் செய்தும் பிரச்னை தீராதவர்கள், ஆறாத துன்பத்தால் சிரமப்படுபவர்கள் 108 திருப்பதிகளுள் ஒன்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளதுமான கோவிலடி அப்பக்குடத்தானை தரிசித்து வரலாம். இவ்வூரின் புராணப்பெயர் திருப்பேர்நகர்.
தல வரலாறு: உபமன்யு மன்னன் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளாகி தன் பலமிழந்தான். சாப விமோசனம் தர வேண்டி மன்றாடினான். முனிவர் அவனிடம்,""பலசவனம் எனப்படும் 
தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்,''என்றார். இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்தான். தானம் நீண்ட நாள் நடந்தது. 
ஒரு நாள் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். ஆச்சரியப்பட்ட மன்னன்,""ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,''என கேட்டான். அதற்கு அவர், ""எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,''என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.
தலசிறப்பு: உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்' என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளின் வலதுகை அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. மிகவும் பழமையான இத்தலம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்றும், ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் இவ்வூருக்கு "கோவிலடி' என பெயர் வந்ததாகவும் கூறுவர். ஸ்ரீரங்கப்பட்டினத்தை(மைசூரு) ஆதிரங்கம் என்றும், கோவிலடியை அப்பால ரங்கம் என்றும், ஸ்ரீரங்கத்தை மத்திய ரங்கம் என்றும், கும்பகோணத்தை சதுர்த்த ரங்கம் என்றும், 
மயிலாடுதுறையை பஞ்ச ரங்கம் என்றும் சொல்வர். இந்த வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும். இங்கு வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம்.
பெருமாள் மேற்கு பார்த்தும், தாயார் கமலவல்லி கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவர்களை வழிபாடு செய்தால் பலன் கிடைப்பதாக நம்பிக்கை. பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் படைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்து விட்டு திருவெள்ளறை சென்றார். அப்பக்குடத்தான் அங்கும் சென்றார். ஆழ்வார், திருவெள்ளறையில் வைத்து மீண்டும் இவரை மங்களாசாசனம் செய்தார்.
திறக்கும் நேரம்: காலை 8.30- 12 மணி, மாலை 4.30- 8 மணி.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து கல்லணை வந்து, அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் பஸ்சில் சென்றால் கோவிலடியை அடையலாம். தூரம் 25 கி.மீ.,
போன்: 04362- 281 488, 281 460. 

 

No comments: