Pages

ஒரே நொடியில் ஒரு கோடி வரம்

பக்தர்களின் உளமார்ந்த உயர்ந்த கோரிக்கைகள் ஒரு கோடியளவுக்கு இருந்தாலும் , கண்மூடி திறப்பதற்குள் நிறைவேற்றி வைக்கும் நிமிஷாம்பாள், கர்நாடக மாநிலம் கஞ்சாமில் அருள்புரிகிறாள். தல வரலாறு: முக்தராஜன் என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அன்னை பராசக்தியின் பக்தரான அவன், அவளை வழிபட்ட பின்னரே, அன்றாடக் கடமைகளைத் தொடங்குவான். ஒருசமயம், ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனையும், அவன் நாட்டு மக்களையும் துன்புறுத்தினான். முக்தராஜனால் அவனை அடக்க முடியவில்லை. மனிதசக்தியால் இயலாதபோது, தெய்வீக சக்தியின் துணையை நாடுவதே பக்தியின் படிநிலை. இஷ்டதெய்வமாகிய பராசக்தியை நோக்கி, உணவு, நீரின்றி தவத்தில் ஆழ்ந்தான். உயிர் மட்டும் உடலில் ஒட்டிக் கொண்டிருக்க உடல் கரைந்து விட்டது. தன் மீது <உயிரையும் பொருட்படுத்தாமல் பக்தி செலுத்திய,பராசக்தி உக்ரரூபம் எடுத்து பூமிக்கு வந்தாள். மன்னனுக்கு காட்சி கொடுத்தாள். அநியாய சக்திகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் உயர்ந்த பொதுநல கோரிக்øயை ஏற்றாள். ஜானு சுமண்டலன் முன்பு சென்று, கண்ணை மூடித் திறந்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பாலாகி விட்டான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு, அசுரவதம் நடந்த இடத்தில் கோயில் எழுப்பினான் மன்னன், என்றென்றும் அங்கு தங்கியிருந்து, மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கவும், அவர்களின் பொதுநலக் கோரிக்கைக்கு உடனடியாக அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். கணநேரத்தில் அருள்புரியும் அம்பிகை என்னும் பொருளில் "நிமிஷாம்பாள்' என்று பெயர் சூட்டப்பட்டது. நிமிஷாம்பாள் ஜெயந்தி: வைகாசி மாதம் வளர்பிறை தசமியன்று நிமிஷாம்பாள் ஜெயந்தி (இவ்வாண்டு மே12) கொண்டாடப்படுகிறது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இவளது தலைக்கு மேலுள்ள குடை தர்மச்சக்கரத்தின் அம்சமாக கருதப்படுகிறது. நான்கு கைகளில் இரண்டில் சூலம் உடுக்கையும், மற்றவை வரத (வரம் தருதல்) அபய ஹஸ்தமாகவும் (அடைக்கலம் தருதல்) உள்ளன. மும்முடி கிருஷ்ணராஜ உடையார் மன்னராக இருந்தபோது அம்பாள் முன்பு சக்கரப்பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜெயந்தி நாளில் 108 கலசாபிஷேகம், துர்காஹோமம் நடக்கும். லலிதா சகஸ்ரநாமத்தில் 281வது நாமாவாக "ஒன்னுமேஷ நிமி÷ஷாத்பன்ன விபன்ன புவனாவல்லே நம:' என்று நிமிஷாம்பாள் போற்றப்படுகிறாள். "கிருஷ்ண சிலா' என்னும் கருமை நிறத்தில், தரிசிப்பவரைப் பரவசத்தில் ஆழத்துகிறாள் தேவி. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது. பவுர்ணமி பூஜை:பவுர்ணமியன்று, பக்தர்கள் இங்கு வந்து விரதமிருந்து அம்பாளைத் தரிசிக்கின்றனர். அன்று மட்டும் லட்சம் பேர் கூடுகின்றனர். திருமணத்தடை, எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கவும், குழந்தை பாக்கியம், வழக்கில் வெற்றி ஆகியவற்றுக்காக இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமி நாட்களில் பாலபிஷேகம் செய்பவர்க்கு விரைவில் மணவாழ்வு கைகூடும். கோயில் வாசலில் காவிரி நதி ஓடுகிறது. காவிரியில் நீராட மிக அகன்ற படித்துறையும், விநாயகர் சந்நிதியும் உள்ளன. ஐந்து சந்நிதிகள்: காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் நடந்தே சென்று பக்திநெறியைப் பரப்பினார். விநாயகர், சிவபெருமான், பார்வதி, சூரியன், மகாவிஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களையும் ஒன்றிணைத்து சனாதன தர்மத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டினார். ஆதிசங்கரரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்விதமாக இக்கோயிலில் ஐந்து தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பரிவார மூர்த்திகள்:பரிவாரமூர்த்திகளில் சூரியன், அனுமன் சந்நிதிகள் மேற்குநோக்கி அமைந்துள்ளன. கேரளபாணியில் அர்ச்சகர்கள் அமர்ந்தே பூஜை செய்கின்றனர். வெண்ணெய், மலர் அலங்காரம், வெள்ளிக்கவசம் என்று சந்நிதிகளில் தெய்வங்கள் மிக நேர்த்தியாக உள்ளனர். திருமணத்தடை, நீங்கவும், கல்வி அபிவிருத்திக்கும் அனுமனுக்கு வெண்ணெய்காப்பு சாத்துகின்றனர். இக்கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளும், கிருஷ்ணசிலா என்னும் கருப்பு கல்லால் செய்யப்பட்டுள்ளனனர். எல்லா சந்நிதிகளி<லும் தீர்த்தம் வழங்கப்படுகிறது. சூரியபகவான். விஷ்ணுவின் அம்சமாக "சூரியநாராயணர்' என்னும் பெயரில் அருள்கிறார். உத்ராயணம், தட்சிணாயனம், ரதசப்தமி நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. திருவிழா:நிமிஷாம்பாள் ஜெயந்தி, மாத பவுர்ணமி, நவராத்திரி, மகாசிவராத்திரிதிறக்கும் நேரம்: காலை 6- இரவு 8.30 மணி. இருப்பிடம்: மைசூருவில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் கஞ்சாம் உள்ளது. பஸ் உண்டு.போன்:08236 252 640, 098458 01632
ஒரு கொடியில் இருமலர்கள்அசுரனை வதம் செய்த பாவம் நீங்க நிமிஷாம்பாள் சிவனை ஸ்தாபித்து வழிபட்டாள். அவர் "மவுத்திகேஸ்வரர்' என்னும் திருநாமத்தோடு லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். லிங்கத்தில் முகம் போன்ற கவசம் சாத்தப்பட்டுள்ளது. பிரதோஷவேளையில் மவுத்திகேஸ்வரரைத் தரிசித்தால் ஆயுள் அபிவிருத்தி உண்டாகும். சிவபெருமானின் வலப்புறத்தில் லட்சுமிநாராயணர் சந்நிதி உள்ளது. அன்பின் காரணமாக பூலோகத்திற்கு தனது சகோதரியைக் காண வந்த பெருமாள் இங்கே தங்கிவிட்டார். ஒரு கொடியில் பூத்த இருமலர்களான லட்சுமிநாராயணரையும், நிமிஷாம்பாளையும் தரிசித்தால் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறைந்து ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம்.

 

No comments: