அரை மணி நேரத்தில் ரத்தப் பரிசோதனை முடிவுகள்!


இன்றைய நவீன மருத்துவ முறையின் ஓர் அங்கம், ரத்தப் பரிசோதனை. தற்போது, ரத்தப் பரிசோதனைக்கு மருத்துவமனை அல்லது அதற்கென உள்ள சோதனைக் கூடத்தில் ரத்தம் கொடுத்துவிட்டு முடிவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இனி அந்த நிலை மாறப் போகிறது. ஒரு கைக்கு அடக்கமான, மலிவான ரத்தப் பரிசோதனைக் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு துளி ரத்தம் இட்டால் போதும், இந்த உபகரணம் அரை மணி நேரத்தில் துல்லியமான முடிவுகளைக் கூறிவிடும்.

இந்த நவீன உபகரணத்தை உருவாக்கியிருக்கும் ரோட் தீவு பல்கலைக்கழகப் பொறியாளர்கள், ரத்தப் பரிசோதனையைத் தங்கள் கருவி எளிதானதாகவும், மலிவானதாகவும், மிகவும் திறன் மிக்கதாகவும் ஆக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.
``மருத்துவப் பரிசோதனையைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய முன்னேற்றம். எங்களின் இந்தக் கருவி மூலம், ரத்தப் பரிசோதனையை மருத்துவமனையிலோ, மருத்துவரின் அறையிலோ, ஏன், வீட்டிலோ கூட செய்துகொள்ளலாம். நோயாளி ஒருவர், மருத்துவரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே ரத்தப் பரிசோதனை செய்துவிடலாம். அவர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பே சோதனை முடிவுகள் காத்திருக்கும்'' என்கிறார், ஆய்வுக் குழுவில் ஒருவரான முகம்மது பக்ரி.
இந்த முறையில், கிரெடிட் கார்டை விடச் சிறிய ஒரு பிளாஸ்டிக் பாலிமர் அட்டையில் ஒரு துளி ரத்தம் வைக்கப்படுகிறது. பின்னர் அது சிறிய `காலணிப் பெட்டி' போன்ற உபகரணத்துக்குள் செருகப்படுகிறது. ரத்தமானது அதில் ஏற்கனவே உள்ள பொருட்களுடன் வினைபுரியும் விதத்தை `சென்சார்கள்' உணர்ந்து முடிவை அறிவித்துவிடுகின்றன.

No comments: