பிறப்புலேர்ந்து இறப்பு வரைக்கும் எல்லாருக்கும், எந்த வயதுலயும் வரக்கூடிய பிரச்சினை வயிற்றுப்போக்கு. இது பாதிச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். சாப்பிடற உணவு ஜீரணிக்கப்பட்ட பிறகு, சிறுகுடலால உறிஞ்சப்பட்டு, மீதி பெருங்குடலுக்குத் தள்ளப்படுது. சில சமயத்துல சிறுகுடல்லேர்ந்து உறிஞ்சப்படாம, அப்படியே பெருங் குடலுக்குத் தள்ளப்படும். அதோட பாக்டீரியா தொற்றும் சேர்ந்துதான் வயிற்றுப்போக்கை உண்டாக்குது. வயிற்றுப்போக்குக்கான காரணங்கள் நிறைய....
ஊரு விட்டு ஊரு, இல்லைனா நாடு விட்டு நாடு போறவங்களுக்கு, இது சகஜம். ஆரோக்கியமில்லாத சாப்பாடு, சமைக்காத உணவு, கை, கால்களை சரியா கழுவாததுன்னு இதுக்குப் பல காரணங்கள். சின்னக் குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்றுப்போக்குக்கு இன்ஃபெக்ஷனோ, பால் அலர்ஜியோ காரணமா இருக்கலாம். குழந்தைகளுக்கு பேதியாகிறப்ப அலட்சியம் கூடாது. 23 தடவை போனாலே என்னனு கவனிக்கணும்.
வயித்தைக் காயப் போட்டாலே இந்தப் பிரச்சினை சரியாயிடும்ங்கிறது பலரோட நம்பிக்கை. அது ரொம்ப தப்பு. வயித்துக்கு ஓய்வே கொடுக்கக் கூடாது. ரத்தம் கெட்டியாகிறது, உடம்புல உள்ள நீர்ச்சத்தெல்லாம் வறண்டு போகிறது, மயக்கம்னு அதோட பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.
வயிற்றுக்போக்கை அதிகப்படுத்தற உணவுகள்னு சிலதைச் சொல்லலாம். பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், சுண்டல், முழு தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், பால், ஜூஸ், பாட்டில் பானங்கள், காபி இதெல்லாம் அந்த ரகம்.
பேதியைக் கட்டுப்படுத்தற உணவுகள்னு பார்த்தா அரிசி, நெய் ஜவ்வரிசி, ஆரோரூட்ல செய்த கஞ்சி, வெந்தயம், நீர்மோர், கேரட், உருளைக்கிழங்குன்னு நிறைய இருக்கு.
வயிற்றுப்போக்கு வந்தவங்க, அதிக நார்ச்சத்து உணவுகளைத் தவிர்க்கணும். அரிசி நொய், ஜவ்வரிசி, ஆரோரூட் மாவுல தளர்வா, கொஞ்சமா உப்பு சேர்த்த கஞ்சியை அடிக்கடி கொஞ்சமா, ஒவ்வொரு டீஸ்பூனா ஒரு நிமிஷம் எடுத்து விழுங்கறது நல்லது. காபி குடிக்கிறது உடம்புல உள்ள நீர்ச்சத்தை அழிச்சிடும். ஓரளவு கெட்டியான சூப் குடிக்கலாம். பெரியவங்களுக்கு பேதியானா, நீர்மோர்ல வெந்தயப் பொடி சேர்த்துக் குடிக்கலாம்.
தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கும் பேதியாகலாம். அதுக்காக தாய்ப்பால் கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. பவுடர் பால் கொடுக்கிற குழந்தைகளுக்கு, அதை மாத்தின உடனே, சரியா ஜீரணமாகாம போகலாம். குழந்தையோட உடல்வாகு, அதோட செரிமானத் திறன் எல்லாம் பார்த்து, டாக்டரோட அட்வைஸ் படி புது உணவை ஆரம்பிக்கிறது நல்லது. கஞ்சியா இருந்தா, குழந்தைகளுக்கு வடிகட்டியும், பெரியவங்களுக்கு அப்படியேவும் கொடுக்கலாம்.
ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ் நல்லது. மத்தபடி ஆப்பிள், பேரிக்காய், பச்சை திராட்சை தவிர்க்கப்படணும். சாக்லெட் கூடாது. அதுல உள்ள 'சார்பிட்டால்' என்ற செயற்கை இனிப்பு, பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தும். அதிக இனிப்பு, அதிக உப்பு ரெண்டுமே தவிர்க்கப்படணும்.
No comments:
Post a Comment