புத்தி தெளிவு பெறலாமே!ஸ்ரீபகவானுடைய உபதேசங்களே வேதங்கள். அவைகளில் நமக்கு துக்கத்தைப் போக்கி, சுகத்தை அடையும் உபாயங்கள் கூறப்பட்டுள்ளன. அவைகளை நமக்குப் புரியும்படி விளக்கமாக கூறியுள்ளனர் மகான்களும், முனிவர்களும். வேளை தவறாமல் சாப்பிட்டு விட்டு, தூங்கி எழுவது மட்டுமே சுகம் அல்ல; மகான்களின் உபதேசத்தை தெரிந்து, அதன்படி நடப்பதே உண்மையான சுகத்துக்கும், மோட்சத்திற்கும் உரிய வழிகள்.
"வேதாந்தமா... அது ஒரு வறட்டு சப்ஜெக்ட் சார்...' என்பர் விபரமறியாத சிலர். ஆனால், அதை ஊன்றிப் படித்தால், புரிந்து கொண்டால், அதிலுள்ள ஆனந்தம் தெரியும்; வேறு திசையில் திரும்ப மாட்டார்கள். கருணைக் கடலான ஆதி சங்கரர், வணக்கத்துடன் தன்னை வணங்கிய சீடர்களுக்கு ரத்னம் போன்ற அந்த உபதேசங்களை வழங்கினார். பல விதமான சந்தேகங்களால் அலைபாய்ந்து கொண்டிருந்த சீடர்களின் மனம், தெளிவு பெற்றது. இந்த ஆதிசங்கரர் வழங்கிய உபதேசங்கள், சீடன் கேட்பது போலவும், குரு பதில் சொல்வது போலவும் அமைந்துள்ளது. இதற்கு, "ஸ்ரீப்ரச்நோத்ர ரத்ன மாலிகா' என்று பெயர்.
அதில், சொல்லப்பட்டுள்ள பல கேள்வி - பதில்களில் ஒரு சில:
பூஜ்யர்களான ஓ குருவே... கிரகித்துக் கொள்ள வேண்டியது எது?
குரு வசனம்.
விட வேண்டியது எது? சாஸ்திரங்களில் கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்கள். எவர் குரு?
உண்மையை அறிந்து, சீடர்களின் நன்மைக்காக எப்போதும் முயற்சிப்பவர்.
படித்தவர்கள் சீக்கிரமாக செய்ய வேண்டியது எது?
பிறப்பு, இறப்பு இவைகளின் தொடர்பை அறுத்தல்.
மோட்சமாகிற மரத்துக்கு விதை யாது?
அக்னி ஹோத்ரம் முதலிய சத்கர்மங்களால் சித்த சுத்தி ஏற்பட்டதும் உண்டாகும் சிறந்த ஞானம்.
சிறந்த நன்மையை அளிப்பது எது?
தர்மம்.
இவ்வுலகில் பரிசுத்தனாக இருப்பவன் எவன்?
விவேகமுள்ளவன்.
விஷம் எது?
பெரியோரை அலட்சியம் செய்தல்.
சம்சாரத்தை வளர்க்கும் கொடி எது?
ஆசை.
காதுகளால் இவ்வுலகில் அமிர்தம் போல் அருந்தக் கூடியது எது?
சாதுக்கள் செய்யும் உபதேசமே.
குருடனுக்கும் மேற்பட்ட குருடன் யார்?
ஆசையுள்ளவன்.
கண்டுபிடிக்க முடியாதது எது?
பெண்களின் சரிதம்.
துயரம் எது?
திருப்தி இல்லாமலிருப்பது.
தாழ்மையாக்குவது எது?
கீழ்பட்டவனிடம் யாசித்தல்.
- இப்படி சிந்திக்க வைக்கும் பல கேள்விகளும், சித்தம் தெளிய வைக்கும் பதில்களும் உள்ளன.
ஒரு சமயம் தர்ம தேவதை, தர்ம புத்திரர் முன் ஒரு யட்சசாகத் தோன்றி, தர்மத்தைச் சார்ந்த பல கேள்விகள் கேட்க, தர்ம புத்திரரும் அவைகளுக்கு சரியான பதிலளித்தார். தர்மதேவதை சந்தோஷப்பட்டு, இவர்களுக்கு யுத்தத்தில் ஜெயம் ஏற்படும் என்று வாழ்த்தியது. இது போல் திருதராஷ்டிரனுக்கு பல தர்ம நீதிகளை உபதேசம் செய்தார் விதுரர். இதை, விதுரநீதி என்பர். எதை, எதையோ படித்துவிட்டு, படுக்கையில் பிதற்றுவதற்கு பதிலாக, இவைகளைப் படித்து, புத்தி தெளிவு பெறலாம்.

No comments: