மாரடைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்வது எப்படி?


இதயத்திலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் தமனியின் சுவர்கள் தடித்துப் போவதால் இதய நோய்கள் ஏற்படுகின்றன. 

புகை பிடித்தல், குடிப்பழக்கம், மன அழுத்தம், அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுதல், தவறான வாழ்க்கை முறை, அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்தால் ரத்த நாளங்கள் சீராகச் செயல்பட ஆரம்பிக்கும். 

தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி ஆகியவை ரத்த நாளங்கள் பழுதடையாமல் செயல்பட உறுதுணையாக இருக்கும்.
 

ஆரோக்கியமான வாழக்கை முறை: 

பொதுவாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் 70 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகமாக ஏற்படுகிறது. நல்ல பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ரத்த நாளங்கள் நன்றாகச் செயல்படும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. 

சீரான உணவு, சீரான உடற்பயிற்சி, சரியான மருந்து இருந்தால் ரத்த ஓட்டத்தை தமனி, சிரைகளில் சீர்படுத்தி இயத்தை வலுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். 

மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்: 

ஒரு குறிப்பிட்ட மருந்தின் பெயரையும், அதை ஏன் சாப்பிடுகிறோம் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

மருந்தைச் சாப்பிட மறந்துவிட்டால் அதற்காக விடுபட்ட மருந்தை அடுத்த வேளை சேர்த்துச் சாப்பிடக் கூடாது. பிற மருந்துகள் குறிப்பாக ஆஸ்பிரின், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றை டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிடவும். 

இதய நோயாளிகள் தங்களது மருந்துகளை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டாம். அதேபோன்று அடுத்தவர்களின் மருந்துகளை இதய நோயாளிகள் வாங்கிச் சாப்பிட வேண்டாம். சில மருந்துகள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகளுடன் ஒத்துப்போகாது. அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, டாக்டரின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும். வெளியூர் செல்லும்போது தேவையான அளவு மருந்துகளை எடுத்துச் செல்லவும். 

ஏனெனில் உங்களுக்குத் தேவையான மருந்துகள் நீங்கள் போகும் நகரத்தில் கிடைக்காமல் போகலாம். குழந்தைகளுக்கு எட்டாதவாறு, சூரிய ஒளிபடாத இடத்தில் மருந்துகளைப் பாதுகாப்பாக வைக்கவும். 

மது வேண்டாம்:
 

டாக்டரிடம் செல்லும்போது அவர் அளித்த சீட்டை மறக்காமல் எடுத்துச் செல்லவும். மதுப்பழக்கம் இருந்தால், அது இதயநோயின் மருந்துகளை வேலை செய்யவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.

No comments: