பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது.
இது உண்மைதானா?
நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.
கிட்னி கல் என்றால் என்ன?
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ,
(crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidism), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections), , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.
யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.
கிட்னி கற்கள் யாருக்கு வரும்-
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கிட்னி கல் – அறிகுறிகள்
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.
நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.
அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.
ஆராய்ச்சியின் முடிவுகள்
Eric taylor MD மற்றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் :
மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஒன்று :-Health professionals follow up study
45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
இரண்டு :- Nurses Health study I
94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.
மூன்று :- Nurses Health study II
1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH (Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர்.
இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில்,
1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.
2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
3. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.
4. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.
5. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்
6. குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
7. குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.
8. குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது :–
மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது,
*நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.
*முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
*பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
*மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
*பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
*திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.
* புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
* சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகக் கற்கள் தற்போது இளைஞர், இளைஞிகளுக்கும் கூட தோன்றுகிறது. இதற்கு பல காரணம் இருந்தாலும், இதனை சரிபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கடுமையான வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்றவற்றை இது ஏற்படுத்தக் கூடும்.
இதற்கு, சில எளிய வைத்திய முறைகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் இவை கூறப்பட்டுள்ளன. அதாவது, வாரத்தில் 3 நாட்கள் இடைவெளியில் 2 முறை அதாவது செவ்வாய், வெள்ளி என வைத்துக் கொள்ளலாம். இந்த கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றை கலந்து லேசாக(வெதுவெதுப்பாக) சூடாக்கி, அதனை வயிறு, முதுகு, தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
அன்றைய தினம் சாப்பிடும் உணவில், சூடான மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த பூசணிக்காய் கூட்டு, மோர், கேரட் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் வெதுவெதுப்பான நீரைப் பருகுதல் நல்லது.
மேலும், காலை வேளையில் வெறும் வயிற்றுடன் உள்ள போது சிறிது நேரம் ஸ்கிப்பிங் எனப்படும் கயிறுதாண்டும் உடற்பயிற்சி செய்தல் மிகவும் நல்லது.
வீட்டு வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து வருவது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
இவற்றை செய்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும். சிறுநீரகக் கற்கள் கரைய சிகிச்சை மேற்கொண்டாலும், அதனுடன் மேற்கூறிய பழக்க வழக்கங்களையும் கடைபிடிப்பது நல்லது.
No comments:
Post a Comment