Pages

தித்திக்க வைக்குமா தீபாவளி?

ஓராண்டுக்குள் தனி ஒருவரின் வருவாய் உயர்ந்ததோ இல்லையோ, விலைவாசி உயர்வு நன்றாகவே உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு தீபாவளிக்கும் இந்த ஆண்டு தீபாவளிக்கும் இடையே அனைத்து பொருட்களின் விலை உயர்வு 30 - 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு "ஷாப்பிங்' பர்ச்சேஸ் என்றால், புத்தாடையும், பொன் நகையும், இனிப்பு பலகாரமும், பட்டாசு வெடிச் சத்தமும் மகிழ்ச்சியை கொண்டாட வைக்கும். தீபாவளியை தித்திக்க வைக்கும். இத்தீபாவளியையும் சற்றே சளைத்தது அல்ல; ஆனால், கொஞ்சம் "காஸ்ட்லி' அவ்வளவு தான்.சர்வதேச அளவில் பருத்தி விலைச்சல் குறைந்ததால், அதன்பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பருத்தி உற்பத்தியில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் இந்தியா, தனக்கு மிஞ்சியதை உலக நாடுகளுக்கு அளித்திருந்தால், ஒவ்வொரு தனி மனிதனும் புத்தாடை வாங்கும்போது, விலை உயர்வை சந்தித்திருக்க வேண்டியிருக்காது. மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் முடிவு, ஜவுளித்துறையின் இயலாமை, அப்பாவி மக்களையும் பாதிக்க வைத்துள்ளது.உயர் ரக பருத்தியின் விலை, சென்ற ஆண்டு கேண்டி ஒன்றுக்கு, 23,000 ரூபாயாக இருந்தது.
இந்த ஆண்டு, 38 ஆயிரம் வரை உயர்ந்தது. 50 சதவீத அளவுக்கு உயர்ந்ததால், இந்த உயர்வு, நூலில் எதிரொலித்தது. நூல் விலை உயர்வால், இப்போது ஆடையின் விலை 30 முதல் 50 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை துணி வகைகள் உயர்ந்துள்ளன. மூலப்பொருள் விலை உயர்வால், துணி விலை தவிர்க்க முடியாததாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான். இருப்பினும், சாதாரணமாக குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 முதல் 2000 ரூபாய் வரை செலவிட்டால் மட்டுமே உற்சாகப்படுத்த முடியும். பெரியவர், குடும்பத்தினர் என சேர்த்தால், 5000 ரூபாய் பட்ஜெட் நடுத்தர குடும்பத்திற்கு தேவை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜவுளிக்கடைகளில் தள்ளுபடி என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அசல் விலைக்கே பெரும்பாலான கடைகள் விற்று வருகின்றன.
இருப்பினும், விழா கொண்டாட்டம் வந்து விட்டால், புதிய ஆடைகளை வாங்குவதில் மக்களிடையே பெரும் தயக்கம் இல்லை. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கிராமத்து மக்களிடையே தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் வந்த பணப்புழக்கம், போதிய வருவாய் உயர்வால் இது சாத்தியமாகியுள்ளது. ஜவுளிக்கடைகளில் கூடும் கூட்டமே மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளதற்கான சாட்சியாக உள்ளது. இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு, இந்த ஆண்டு உள்ளது; விற்பனையும் உயர்ந்துள்ளது.
இதே போன்று, தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு கணிசமாக அவ்வப்போது தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தனி மனித வருவாய்க்கு ஏற்ப ஒவ்வொரு தீபாவளிக்கும் தங்கம் வாங்கி சேமித்து வருபவர்களுக்கு லாபகரமாக உள்ளது. வாங்கிய பணத்தை வேறு சேமிப்புகளில் சேமிப்பதைவிட, தங்கத்தில் முதலீடு செய்வதால் அதிக லாபம் ஈட்ட முடியும். ஒவ்வொரு மாதமும் ஒரு கிராம் சேமித்தால், எதிர்காலத்தில் கவலை கொள்ள வேண்டியதில்லை. கடந்த காலங்களை கருத்தில் கொண்டு தங்கத்தின் விலையை ஒப்பிட்டுப்பார்த்தால், பல மடங்கு லாபம் பெற்றிக்கலாம் என்பது கண்கூடாக தெரியும்.எதிர்காலத்தில், ஒரு சவரன் 20 ஆயிரத்தை தொடும் என்ற ஆருடமும் பொய்க்காது என்பதே உண்மை.
இனிப்பு விலையும் உயராமல் இல்லை; சென்ற ஆண்டு சர்க்கரை விலையை விட, தீபாவளிக்கு இந்த ஆண்டு சர்க்கரை விலை அதிகம். எனவே, கடைகளில் வாங்கும் ஸ்வீட்டுகளின் விலையும் சற்றே உயர்ந்துள்ளது என்றால் மிகையாகாது. தற்போது கடைகளில்,சர்க்கரை விலை கிலோ ரூ.30க்கு விற்பனையாகிறது. தீபாவளி நெருங்குவதையொட்டி இதுவும் சற்று விலை உயரும் வாய்ப்பு உள்ளது.பட்டாசு இன்னும் விற்பனைக்கு வந்தால், குழந்தைகளுக்கு அவை பாதுகாப்பானவையா, அல்லது பெற்றோர்களின் பர்சுக்கு பாதுகாப்பனதா என்பதை அறிய முடியும். தீபாவளி நெருங்கும் வேளையில் அசாதாரண விலை உயர்வு இந்த பொருட்களை மட்டுமல்ல, அனைத்து மளிகை பொருட்களிலும், காய்கறிகளிலும் எதிரொலித்துள்ளது. சில மாதங்களில், 20, 30 சதவீத விலை உயர்வு, மக்களை வியப்படையச் செய்துள்ளது. மில்கள் போன்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நடுத்தர தொழிலாளர்களும் இந்த ஆண்டு போனஸ் கூடுதலாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
நன்றி-தினமலர்

No comments: