ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை என்பது ஒருநாள் வரக்கூடிய பருவமாகும். இந்த பருவம்தான் மிகுந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் பருவமாகும். நம் முன்னோர்கள் முதுமைப்பருவத்தை மீண்டும் ஒரு குழந்தைப் பருவம் என்றனர்.
பண்பாடு நிறைந்த நம் பாரத தேசத்தில் மக்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். அனுபவமிக்க முதியோர் சொல்லும் வழி காட்டுதலில் பிள்ளைகளை வழி நடத்தி வந்தனர். இதனால் இவர்கள் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து குடும்பத்தை ஆலமரமாகத் தழைக்கச் செய்தனர்.
இந்த முதுமைப் பருவத்தில் உடல் பலவகையான பாதிப்புகளை சந்திக்க நேர்வது இயல்பான ஒன்று தான். உடலின் சத்துக்கள் குறைதல், எலும்புகளின் வலிமை குன்றல், உறுப்புகளின் செயல்பாடு குறைதல் போன்றவை இக்காலத்தில் ஏற்படும். முதியவர்கள் பலர் பல நோய்களில் அவதியுற்றாலும், முக்கால் வாசிப்பேர் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர். முதுமைப் பருவத்தில் தூக்கமின்மை உடலின் ஆரோக்கியத் திற்குக் கேடாகும்.
முதுமைப் பருவம் என்பது இயற்கை கொடுக்கும் ஓய்வுப் பருவம். இளைய தலை முறையினரை நல்வழிப்படுத்தும் பருவமும் இதுவே.
முதுமையில் அதிக மன உளைச்சல், மனதிற்கு வேதனை தரும் சம்பவங்கள், ஓயாத சிந்தனை இவற்றாலும், அல்லது சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இவற்றாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது.
நரம்பு மண்டலத்தில் சரிவர இரத்த ஓட்டமின்மையாலும், இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதாலும் அதாவது கல்லீரல் பாதிக்கப் பட்டு அதனால் பித்தப்பை அலர்ஜி உண்டாகி அதிக பித்த நீரைச் சுரக்கிறது. இதனாலும் இரத்தத்தில் பித்த நீர் அதிகரிக்கிறது.
இதனால் தூக்கமின்மை உண்டாகிறது. பொதுவாக தூக்கமின்மைக்கு பித்தம் அதிகரிப்பு தான் முக்கிய காரணமாகும். பித்தத்தை அதிகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களை உண்பதாலும், அதனால் வயிற்றில் செரியாமை ஏற்பட்டு, வாயு அதிகரித்து, நரம்பு மண்டலத்தை பாதித்து உடலில் நரம்புகள் இறுக்கம் உண்டாகி தசை நார்கள் இறுகிவிடுகின்றன. இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.
வயதுக்கு மீறி உடலுக்கு கடின வேலை கொடுப்பவர்கள், ஓய்வில்லா வேலை இவையாலும் உடல் அசதியுற்று தூக்கமின்மை உண்டாகும்.
அதுபோல் மலச்சிக்கல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். மலச்சிக்கலால் குடலில் உள்ள குன்ம வாயு சீற்றம் கொண்டு சிரசைத் தாக்கும் . இதனால் மூளை வறட்சி உண்டாகி நரம்பு மண்டலத்தை உலரச் செய்து, மனதிற்கு ஒருவித தாக்கத்தை உண்டுபண்ணி தூக்க மின்மையை ஏற்படுத்துகிறது.
முதுமையில் உண்டாகும் அதீத பாசம், ஏக்கம், இயலாமை, பொருளாதார தட்டுப்பாடு, குழந்தைகளால் போதிய கவனிப்பின்மை, தனிமை, போதிய தங்கும் வசதியின்மை, அடுத்தவரின் உதவியை எதிர்பார்ப்பது போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை உண்டாகும்.
சிலருக்கு நோய்களின் தாக்குதலுக்கு மருந்து, மாத்திரை எடுப்பதால் அவை தூக்கமின்மையை உண்டாக்கும். இளம் வயதில் அதிக மது, போதை வஸ்து, புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு முதுமையில் தூக்கமின்மை ஏற்படும்.
மனதளவில் தான் வயது முதிர்ந்தவர் என்ற எண்ணத்தில் எந்த வித வேலையையும் செய்யாமல், உடலுக்கு அசைவு கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் தூக்க மின்மை உண்டாகும்.
தூக்கமின்மையைப் போக்க
பழங்காலத்தில் அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சொல்படிதான் அந்த குடும்பத்து உறுப்பினர்கள் நடந்துகொள்வார்கள். முதியவர்கள் மாலைநேரத்தில் வீட்டுத் திண்ணையிலோ, கோவில்களிலோ அல்லது எதாவது ஒரு பொது இடத்திலோ அமர்ந்து ஒருவருக்கொருவர் கலந்து பேசி மனக் குறைகளையும் நிறைகளையும் பகிர்ந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தங்களுக்கு உண்டான மனக்குறைகள் தீர்ந்து நல்ல தூக்கத்தை பெற்றார்கள்.
மனம் அமைதி பெற்றால் உறக்கம் தானாக நம்மைத் தழுவிவிடும். நம் முன்னோர்கள் அயராது உழைத்து உடலுக்கும் பயிற்சி கொடுத்து, மாலையில் மற்றவர்களுடன் கலந்து பேசி, மனதிற்கும் அமைதி கொடுத்து வாழ்ந்ததால் சஞ்சலம், சலனம் இல்லா ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றனர்.
ஆனால் தற்போது முதுமையிலும், வேலைப்பளு, மன அமைதியின்மை எப்போதும் போராட்டம், பொறுமையின்மையும் ஆட் கொண்டுவிட்டது. ஒருவருக்கொருவர் மனத் துயரங்களை பகிர்வது என்பது இல்லாமல் போய்விட்டது. அதோடு உணவு முறை, இரசாயனம் கலந்த உணவு போன்றவற்றால் உடல் சீர்கேடு அடைந்து முதுமையில் தூக்கமின்மை ஏற்படுகிறது.
நல்ல தூக்கத்திற்கு முதுமையில் நடைப்பயிற்சி அவசியம். மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
தூக்க மாத்திரை உண்பவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். இதனால் இவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிவிடுகிறது. நாளடைவில் தூக்கமாத்திரையை 1க்கு 2 என்று அதிகரித்தாலும் தூக்கம் என்பது வெறும் கனவாகிவிடுகிறது. தூக்கமாத்திரை உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
நல்ல தூக்கம் பெற
· நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், இரவு உணவில் காரத்தைக் குறைத்து சாப்பிட வேண்டும்.
· நார்ச்சத்து மிகுந்த பழங்கள், எளிதில் சீரணமாகும். மென்மையான உணவுகள் போன்றவற்றை உண்ண வேண்டும்.
· இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் சூடான பால் அருந்தினால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
· படுக்கையறை மிகுந்த காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். மென்மையான இசையைக் கேட்டுக்கொண்டே தூங்கலாம்.
· தியானம் செய்ய வேண்டும். இதனால் சிதைந்து கிடக்கும் எண்ணங்கள் ஒருநிலைப்பட்டு மன அமைதியடைந்து, எதையும் தாங்கும் இதயமாக தியானம் உங்களை மாற்றும். இந்நிலை அடைந்தால், தூக்கம் தானாகவே உங்களைத் தேடி வரும். எனவே தியானம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
· தாமரை இலையின் மேல் தண்ணீர் போல் பற்றற்று வாழ் என்றார் ராமகிருஷ்ணர். அவ்வாறு வாழ்ந்தால் மனம் அமைதியடையும். மனம் அமைதி அடைந்தால் நல்ல தூக்கம் தானாகவே வரும்.
· மனம் விட்டு பேசுங்கள், மகிழ்ச்சியான எண்ணங்களை அசைபோடுங்கள், முதுமைப் பருவம் போராட்டமாக இல்லாமல் போற்றுதலாகத் தோன்றும்.
No comments:
Post a Comment