பஞ்சபூத கணபதி


ஓம் எனும் ஓங்கார ஒலியானது பரந்து விரிந்து அகண்ட இப்பிரபஞ்சத்தின் முதல் தோற்றமாக அமைந்தது. அந்த ஓங்கார ஒலியிலிருந்து ஒளி தோற்றம் பெற்றது.  அதாவது சூரியன் உருவானது. இந்த ஒலியும், ஒளியும் இணைந்து அற்புத  பேராற்றல்கள் உருவாவதற்கு காரணமாயின. இந்த பேராற்றல்களின் வெளிப்பாடாக  பஞ்சபூத மூலக்கூறுகள் தோன்றி நாளடைவில் மிகப்பெரிய பஞ்சபூதங்களாக  தோற்றம் பெற்றன.  ஆகாயம், நிலம், நீர் , அக்னி, வாயு எனப்படும் பஞ்சபூதங்கள் தங்களுக்குள் ஒன்றுடன் ஒன்று கலந்து முழுமை பெற்ற தனித்தனி பூதங்களாக உருவெடுத்தன.  இப்பூதங்கள் தங்களுக்கென்று  தனித்தனி  யான தன்மைகள், பண்புகள், குணங்கள், செய்லகள் கொண்டு அமைந்தன. பஞ்சபூதங்கள் தங்களின் கூட்டு முயற்சியால் ஒன்றுடன் ஒன்று கலந்தும், மயங்கியும் உலகப்பொருட்களின் தோற்றத்திற்கும் அவற்றின் இயக்கத்திற்கும் காரணமாயின.
பஞ்சபூதங்கள் இல்லை எனில் இவ்வூலகம் இல்லை. என்னுமளவுக்கு உலக இயக்கத்தின்  அடிப்படை ஆதாரமாக  விளங்கும் பஞ்சபூத சக்திகளின் ஆற்றலை உணர்ந்த மனிதன், அவற்றை வழிபட முனைந்தான். நாளடைவில்  ஒவ்வொரு  பூதத்தின்  தனிப்பெரும் சிறப்பு. அதன் தனித்தன்மையை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு பூதத்திற்கும் முறையே ஆகாயம், வட்டம்,  நிலம், சதுரம், நீர், பிறை, அக்னி, முக்கோணம், வாயு அறுங்கோணம் என தனித்தனியாக வரிவடிவம் வடித்து  வழிபட ஆரம்பித்தன.
காலப்போக்கில் பஞ்சபூத சுழற்சி முறையினை கண்டான் மனிதன். ஆகாயத்திலிருந்து நிலத்திற்கு வந்த நீர் நிலத்தின்மேல்  தங்குகிறது. இந்த நீர் அக்னியால் வாயுவாக்கப்பட்டு ஆகாயத்துடன் ஒன்றுகிறது. எனவே பஞ்சபூத சுழற்சி அடிப்படையில் பஞ்சபூத குறியீட்டு வடிவங்களை ஒன்றாக அமைத்து முழு முதற்கடவுளான விநாயகரின் வடிவத்தை அமைத்தான்.
முழு முதற்கடவுளை வணங்கி தொழும்போது மூர்த்தியின் திருஉருவ வடிவலிருந்து வெளிப்படும் பஞ்சபூத சக்தி அலைகள் மனிதனின் உள்ளும், புறமும், இருக்கும் பஞ்சபூத சக்திகளுக்கு வலுவூட்டுவதாய்  அமைகின்றன. வலிமை பெற்ற பஞ்சபூத சக்திகளின்  துணைகொண்டு முயன்ற செய்யும் எந்த ஒரு நற்செயலும் நல்ல மங்கள விளைவை நிகழ்த்தி தர வல்லதாய் அமைகின்றது. எனவே தான் எச்செயலையும் செய்ய தொடங்குமுன் முழு முதற் கடவுளை தொழுது பஞ்சபூத சக்திகளுக்கு வலிமை ஏற்றி செயல்பட முனையும் பழக்கத்தை  மனிதன் நடைமுறைப்படுத்தி இருக்கின்றான்.
முழுமுதற்கடவுளை வணங்கி வழிபடும் முறையாக  தலையில்  குட்டிக்கொள்வதும் செவிகளை பிடித்து கொண்டு தோப்புக்கரணம் போடுதலும் பஞ்சபூத சுழற்சி முறையினை நடைமுறைப்படுத்தும் நிகழ்வாக அமைகிறது. தலை ஆகாய அம்சம், குட்டிக்கொள்ளுதல் நிலத்தின் அம்சமாகும். தோப்புக்கரணம் போடுதல் நிலத்தின் மேலுள்ள  நீர் அக்னியால் வாயுவாக்கப்படும் நிகழ்வு ஆகும்.  செவியை பிடித்துக்கொண்டு போடுதல் வாயு, ஆகாயத்துடன் ஒன்றுதல் ஆகும். (செவி – ஆகாய அம்சம்) பஞ்ச பூத சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தியபின் அற்புத ஆற்றல் கிடைக்கப்பெறுகிறது. இத்தகைய ஆற்றல் துணைக்கொண்டு  நற்செயல்களை செயலாற்ற முனையும் போது அவை அற்புத பலன்களை தரக்கூடியதாய் அமைகின்றன. இதுவே கணபதி வழிபாட்டின் தத்துவம்.

No comments: