அடிப்படை வசதி இல்லாத கத்தப்பட்டி டோல்கேட்

அடிப்படை வசதி இல்லாத கத்தப்பட்டி டோல்கேட் வருவாய் அதிகம் வந்தும் நடவடிக்கை இல்லை
Tuesday, 03 August 2010 11:15
ஒரு டோல்கேட்டிற்கு தேவையான, குடிநீர் வசதி, ஓய்வறை, போன், முதலுதவி வசதி, ஆம்புலன்ஸ், ரெக்கவரி வேன் என, எந்த அடிப்படை வசதியும் இன்றி கத்தப்பட்டி டோல்கேட் உள்ளது. பல கோடி ரூபாய் செலவில், தேசிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சியில் இருந்து மதுரை வரை இரு பிரிவாக இப்பணிகளை ஜே.எம்.சி., எனும் தனியார் நிறுவனம் மேற்கொண்டது. சுங்க வசூலுக்கான டோல்கேட் கத்தப்பட்டியில் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் மூன்றரை முதல் நான்கு லட்ச ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூலாகிறது. ஆனால் ஒரு டோல்கேட்டிற்கு என உள்ள எந்த அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை.
இப்பகுதி பொதுமக்கள், பயணிகள், ஊழியர்கள் கூறியதாவது :அசோக்.S ( முத்துப்பட்டி ): இப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் ஏற்கனவே உள்ள வளைவுகள் அப்படியே தான் உள்ளன. இரு பக்க சாலைகளின் நடுவில் செடிகள் வளர்க்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனத்தின் ஒளி நேரடியாக எதிர்புற வாகனத்தில் படுகிறது.இது விபத்துக்கு வழி வகுக்கிறது. அணுகு சாலையில் திரும்புவதற்கு ஏற்றவாறு, சாலை விரிவுபடுத்தப்படவில்லை. குறுகிய இடத்தில் சட்டென்று திரும்புவது சிரமமாக உள்ளது.
பரமானந்தம் (தெற்குதெரு) : தேசிய நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 5 கி.மீ., தூரத்திற்கும் டெலிபோன் வசதி வேண்டும். இதை செய்யவில்லை. இப்பகுதியில் உள்ள வாகனங்கள் மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களும் டோல்கேட் செல்லாமல் எப்படி செல்வது ? என விசாரித்து மாற்றுப்பாதை யில் செல்கின்றனர். சிட்டம்பட்டி வழியாக முத்துப்பட்டி என்னும் ஊர் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வாறு செல்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள கண்மாய்கரைகள் முற்றிலும் சேதமாகி, விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முருகன் (கத்தப்பட்டி) : இரவு நேரங்களில் டோல் கேட்டை தவிர எந்த இடத்திலும் விளக்குள் இல்லாததால், ரோடு இருள் அடைந்து உள்ளது. இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் கூட எந்த இடத்திலும் அமைக்கப்படவில்லை.
டோல்கேட்டில் பணி செய்யும் ஊழியர்கள் தங்கள் பெயரை குறிப்பிட விரும்பாமல் கூறியதாவது : இங்கு மூன்று ஷிப்ட்களில் 145 ஊழியர்கள் பணியாற்றுகிறோம். எங்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் தரவில்லை. அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை வசதி கூட இங்கு இல்லை. வாகன ஓட்டிகள் இப்பகுதியில் நிறுத்தினால் சாப்பிட ஓட்டல்கள் இல்லை. ஒவ்வொரு டோல்கேட்டிலும் ஆம்புலன்ஸ், ரெக்கவரி வேன், பேட்ரல் வேன் என மூன்று வாகனங்கள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு இவை கிடையாது. தகவல் தெரிவிக்க போன் வசதி கிடையாது. அரசு உடனடியாக தலையிட்டு இதனை கவனிக்க வேண்டும், என்றனர். தினமும் லட்சக்கணக்கில் வரும் வருவாயில் ஓரு சிறு அளவாவது டோல்கேட் வசதிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

No comments: