சாஸ்திரம் பெரிதா ? பணம் பெரிதா ?


"மிகுந்த புண்ணியங்களை விலையாகக் கொடுத்து, இந்த மனித சரீரமாகிய ஓடம் வாங்கப்பட்டுள்ளது. இது, உடைந்து போவதற்குள், பிறவிக் கடலைத் தாண்டி, அக்கரை போய்ச் சேர்!' என்று, அறிவுரை கூறியுள்ளார் ஒரு மகான். மானிடப் பிறவி கிடைத்தும், எவர்கள் ஞானம் பெறவில்லையோ, அவர்கள், பசுவாகவோ, இதர விலங்குகளாகவோ இருந்திருக்கலாம்.
ஏனெனில், மனிதர்களுக்குதான் சாஸ்திரம், சம்பிரதாயம், பாவம், புண்ணியம் செய்யத் தகுந்தவை, செய்யத் தகாதவை என்றெல்லாம் உள்ளது; விலங்குகளுக்கு இதெல்லாம் கிடையாது. அதனால், சாஸ்திர, சம்பிரதாயங்களை அனுசரித்து நடவாத மனிதன், மிருகமாகவே இருந்திருக்கலாம் என்றார் அவர். பணம், பொருள் மீது தீராத பேராசை மனிதனுக்கு. நிறைய சம்பாதிக்க வேண்டும், நிறைய சேர்த்து வைக்க வேண்டும். இதற்காக ஓய்வில்லாமல் ஓடித் திரிவதும், கவலைப்படுவதுமாகவே காலம் கழிகிறது. சம்பாதித்தது போதும், சேர்த்து வைத்தது போதும் என்று எத்தனை பேர் சொல்கின்றனர்?  பணம் சேரச் சேர ஆனந்தம். ஒன்றுக்கு பக்கத்தில் எத்தனை பூஜ்யம் சேர்த்தாலும், அவ்வளவுக்கு அவ்வளவு ஆனந்தம். இன்னும் ஒரு பூஜ்யம் சேர வேண்டும் என்று ஆசை. கடைசியில், இவன் கொண்டு போவது ஒரே ஒரு பெரிய பூஜ்யம் தான்; ஆனால், அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதில்லை. இவன் நிறைய சேர்க்கச் சேர்க்க, இவனது வயதும் ஏற, ஏற, மற்ற பந்துமித்திரர்கள் இவனையே கவனிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  எவ்வளவு வைத்திருக்கிறான்? யார், யாருக்கு என்ன கிடைக்கும் என்பது அவர்களது கவலை. இவனது வாழ்நாளை கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறான் சித்ரகுப்தன். பொருள், பணம் சேர்க்க வேண்டியது தான். இருக்கும்போதே தேவை உள்ளவர்களுக்கு கொடுத்தால், அவர்களும் பயன்பெற்று, சந்தோஷப்படுவர்; தனக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்படும். நாம் போன பிறகு இவ்வளவும் யார் எடுத்துக் கொள்வரோ என்று மனக்கவலையுடன், சாந்தியில்லாமல் போக வேண்டாம். "நிறைய சம்பாதித்தான், எல்லாருக்கும் கொடுத்தான் புண்ணியவான்; அவனுக்கு நல்ல கதி கிடைக்கட்டும்...' என்று உற்றாரும், சுற்றாரும் சொல்ல வேண்டாமா? பணம் படைத்தவன், ஏழ்மை நிலையில் உள்ள சுற்றத்தாருக்கு உதவி செய்யாவிடில், அது பெரும் பாவம் என்கிறது தர்ம சாஸ்திரம்.   சாஸ்திரம் பெரிதா? பணம் பெரிதா? சிந்திக்க வேண்டும். இப்போது கொடுப்பது பல மடங்காக பிற ஜென்மங்களில் திரும்பி வரும், வந்தே தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. கொடுக்க மனம் வரவேண்டும், கை வரவேண்டும்; இரண்டும் இருந்தால் போதும்!

No comments: