தினமும் இஞ்சி சேர்த்தால் உடல் வலி குறைந்து விடும்


தினசரி உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் வலி உட்பட பல்வேறு தசை வலிகளை நீக்கி விடும் என்று அமெரிக்க ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான். எனினும், சளி, இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது பொதுவான மருத்துவ பயன்கள். அவற்றுக்கு மேல் இஞ்சியின் செயல்பாடு பற்றி ஜார்ஜியா பல்கலைக்கழக உணவியல் பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதன் முடிவு பற்றி பேராசிரியர் ஓ கானர் கூறியதாவது:
இஞ்சியின் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உள்ளதை சமீபத்தில் எலிகளிடம் நடத்திய சோதனையில் அறிந்தோம். தவிர, உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
இஞ்சியை பச்சையாக உணவில் சேர்த்து சிலருக்கு 11 நாட்கள் அளித்து வந்தோம். இன்னொரு குழுவினருக்கு கொதிக்க வைத்த இஞ்சியை அதே 11 நாட்கள் கொடுத்து வந்தோம். அதன் பிறகு நடத்திய சோதனையில் சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை உணவில் சேர்த்தவர்களது உடல் வலிகளுக்கு நிவாரணம் கிடைத்தது தெரிய வந்தது.
குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைப்பது ஆய்வில் உறுதியானது. தினமும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வோருக்கு உடல் வலிகளை 25 சதவீதம் குறைக்க முடியும் என்றார்.
அமெரிக்க ஆய்வு தகவல்.

No comments: