உற்சாகம் தரும் மெல்லோட்டம்-(Jogging)

ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சி   இவை மூன்றும் மனிதனுக்கு அவசியத் தேவையாகும்.  ஆனால் அவை அளவோடு இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி மனிதனை என்றும் புத்துணர்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்யும் மருந்தாகும்.  இன்றைய கால கட்டத்தில் இளம் வயதில் உடற்பயிற்சியின்றி இருந்தவர்கள், 40 வயதை கடந்தாலே நோயின் பிடிக்கு ஆளாகின்றனர்.  நோயில்லா பெருவாழ்வு பெற உடற்பயிற்சி அவசியமாகும்.
தேங்கிய குட்டை நீர் சாக்கடையாக மாறிவிடும்.  ஓடாத இயந்திரம் பழுதாகிவிடும்.  உபயோகமில்லா இரும்பு ஆயுதங்களில் துரு ஏறிவிடும்.  உழைக்காத, உடற்பயிற்சி செய்யாத உடலும் உருக் குலைந்துவிடும்.
பொதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்றவை உலகெங்கிலும் உள்ள மக்களால் ஆண், பெண் பாகுபாடின்றி மேற்கொள்ளப்படுகிறது.
உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
· உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
· நம் உடலின் உறுப்புகளும், நரம்புகளும் புத்துணர்வடையும்.
· தசைகள் நன்கு சுருங்கி விரிவடைவதால் உடல் பலமடையும்.
· உண்ட உணவு எளிதில் சீரணமடையும்.  அதன் சத்துக்கள் முழுவதும் உடலில் சீராக பரவும்.
· இதயம் பலப்படும்.
உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை.  ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.
நல்ல காற்றோட்டம் நிறைந்த பகுதியில் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை உடற்பயிற்சி செய்யலாம்.  உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் இரண்டையும்  வெளியேற்றி விடவேண்டும்.
மெல்லோட்டம்
மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள்.  விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.
இந்த மெல்லோட்டத்தை ஆண் பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம்.  மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.
பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும்.  ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.  அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.  இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம்.  தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்
· மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.
· நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
· இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.
· உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.
· இதயத் தசைகள் வலுவாக்குகிறது.
· இதயம் சுருங்கி விரியும்போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.
· இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.
· உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.
· எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
· என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.
· முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.
மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும்.  இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.

No comments: