ஒரு மண்டல விரதம் ஏன்?


எந்த தெய்வத்தை பூஜிப்பதாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜிக்க வேண்டும் என்பார்கள். இதற்கான காரணம் தெரியுமா?
சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள் ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும். அசுவதி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும். இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத்தொகையான 48-ஐ வழிபாட்டில் ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும், ராசிநாதர்களும், நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே மண்டல வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜிப்பது மரபு. இந்த நாட்களில், எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் கோவிலுக்குச் செல்லுதல், அந்த தெய்வத்திற்குரிய மூலமந்திரங்களை ஜெபித்தல், மந்திரம் சொல்ல முடியாதவர்கள் அந்த தெய்வத்திற்குரிய எளிய துதிப்பாடல்கள், கவசங்களைப் பாராயணம் செய்தல், சகஸ்ர நாமங்களை ஜெபித்தல், புஷ்பத்தால் அர்ச்சித்தல், தீபம் ஏற்றுதல்... போன்ற எளிய விதங்களில் வழிபட வேண்டும்.
ஒருமுகப்பட்ட மனதுடன் ஒரு மண்டலம் செய்து வரும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறி வருவதை அனுபவத்தில் உணரலாம். மண்டல வழிபாடு செய்வது என்பது மிகவும் மகத்தானது.
ஆனால், மண்டல வழிபாடு இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஒரு செயலில் முழுமையான வெற்றியை வேண்டுவோர் தமக்கு விருப்பமான இஷ்ட தேவதையை முன்னிறுத்தி தொடர்ந்து 48 நாட்கள் பூஜித்து வர நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.

No comments: