சாஸ்திரம் என்பது கற்றுணர்ந்தோரால் கையாளப் பட்டு அவரவர் வாழ்க்கை என்னும் உரைக்கல்லில் இட்டு பதப்படுத்தப்பட்ட உயிரோட்டமுள்ள விதிமுறைகள். அதையே பின்வரும் சந்ததிகளுக்கு புராண இதிகாச கதைகள் போன்று கட்டுரையாக்கப்பட்டன.
சூத்திரம் என்பதோ அதன் செயலையும், விளைவையும், இன்னென்னவென்று இயம்புவ தான நிலையிலே நன்நெறியாளர்களால் கையாளப் பட்டு, அவர்தம் சந்ததிக்கு இரகசியமாக பகரப் பட்டது. அதன் காரண காரியங்கள் இன்னென்ன வென்று திட்டமாக தெரிந்திருந்தும் பலதரப்பட்ட மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வில்லை. காரணம் சூத்திரம் என்பதோ ஆணை! குற்றுமற்ற ஆணை!! எதிர் கேள்விகளுக்கு இடமில்லாத தெய்வீக ஆணை! ஒன்றை நான் பகரவா!!
காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றிட
கோலினை ஊன்றிக் குறுகி நடப்பவர்
கோலினை வீசி குலவித் திரிவரே
என்னே விந்தை!!
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றையும் ஒன்றாக உட்கொண்டால் அதனுடைய விளைவுதான் என்ன? மருத்துவப் பயன்தான் என்ன? என்பது.
மேற்சொன்ன காலத்தின் தன்மையறிந்து அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் இம் மூன்றையும் நேரம் அனுசரித்து உட்கொண்டால் வந்த வினை தீர்க்கும் மருந்தாகவும், வல்வினை வராவண்ணம் தடுக்கும் காவலனாகவும் பயன்பட்டு நற்பலனைத் தருகிறது.
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஒரு மனிதனுக்கு அவன் இயக்கம் சரிவர தொடங்குவதற்கு தேவையானது உஷ்ணம். அதுவரை நிலவி வந்தது வாதம்.
இந்த உஷ்ணத்தை உடனடியாக வழங்கி வாதமென்ற உடல் விரைப்பை மாற்றி செயலாற்றத் தூண்டுகிறது இஞ்சி. எனவேதான் காலையில் இஞ்சி.
பின் ஏன் கடும்பகல் சுக்கு?
கதிரவன் உச்சி மீது வெயிலாக பொழிந்து உடலை உஷ்ணப்படுத்தி வியர்வையை ஏற்படுத்துகிறான். உடலிலிருந்து வியர்வை வெளியேறும்போது உடலின் உட்பகுதியில் ஏற்படும் மாற்றம் , ஒன்றிலிருந்து ஒன்று வெளிவரும்போது மற்றொன்று குளிர நேரிடுகிறது. இதுதான் இயற்கையின் விதி.
புற உடலில் ஆவி, உடலின் உட்புறத்திலிருந்து குளிர். எனவே, சரீர சமநிலை மாறிவிடும். இப்படி உடலின் சமநிலை மாறிவிடும்போது இந்த நிலையை சரிகட்ட ஏற்படும் தானான முயற்சியின் விளைவே கபம். இந்த கபம் ஏற்படாமல் தடுக்கவும், ஏற்பட்ட கபத்தை அகற்றவும் கடும்பகல் சுக்கு.
மாலையில் கடுக்காய்
பகல் முழுவதும் உடல் உழைப்பால் களைத்துவிடும் மனிதனின் வயிற்றுக்குள் இருக்கும் அனைத்து மலபந்தங்களோடு, உறவாடி விளையாடி, காலையில் அவன் எழுந்தவுடன் மலத்தை வெளியேற்றி அவன் வயிற்றை சுத்தமுறச் செய்வதுதான் கடுக்காயின் சேவை.
ஆக காலவரையான மண்டலம் என்ற மூன்று பட்சங்கள் தொடர்ந்து சேர்த்து வந்தால் முதியவனும் கோலை வீசிவிட்டு இளங்காளையாக மாறி குலவ ஆரம்பித்து விடுகிறான்.
மண்டலக் கணக்கு
1 மண்டலம் என்பது 48 நாட்கள். மூன்று பட்சங்கள் அதாவது ஒரு பட்சம் என்பது 14 நாட்கள், பட்சங்கள் இரண்டு வகையாக உள்ளன. சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம். இவை இரண்டும் சூரிய சந்திரனின் நிலைப்பாட்டினைக் கொண்ட காலக் கணக்கு.
அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை சுக்ல பட்சம். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை கிருஷ்ண பட்சம்.
இந்த பூமியின் நிலைப்பாட்டிற்கு சந்திரனின் சுழற்சி ஒரு பட்சத்தில் 1800, அதுபோல் அடுத்த பட்சத்திற்கு 1800 அப்படி 3600 ஒரு சுழற்சியை முழுமை பெறச் செய்யும் சந்திரனின் கால ஓட்டம். இந்த பட்சங்களே மருந்து உட்கொள்ளுவதற்கு ஏற்ற காலமாக பரிந்துரைக்கப் படுகிறது.
இன்றும் நம் கிராமங்களில் அமாவாசை, பௌர்ணமி, அல்லது அஷ்டமி என்று எதாவது ஒன்று சொல்லி அந்த நாட்களில் குழந்தைக்கு தலையில் தண்ணீர் ஊற்றக்கூடாது என்பார்கள்.
ஏனெனில் இந்த நாட்களில் சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியிலும், பூமியில் உள்ள அனைத்து வஸ்துக்களிலும் அதிகமாக செலுத்தப்படுகிறது. அதன் விளைவாகவே கடலின் அலைகள் பேரலையாகவும், மிருகங்களின் கருவுறும் காலமாகவும்இருக்கிறது. ஏன்.. மனிதர்களின் உணர்வுகள் தூண்டப்படுவதுமாக உள்ள நிலை ஏற்படுகிறது.
தூண்டப்பட்ட உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அவன் சீரழிந்துவிடாமல் தடுப்பதற்காக வேண்டியே விரதம் என்ற போர்வையில் (பௌர்ணமி, அமாவாசை) கடிவாளம் பூட்டப்பட்டது.
இப்படிப்பட்ட உன்னதமான சந்திர கால நிர்ணயத்தை வைத்து மண்டலக் கணக்கில் மேற்சொன்ன இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றையும் மருந்தாக கொண்டு வாழ்நாளை விருத்தியாக்கச் செய்து சுகமுடன் வாழச் சொன்னால் இதுவே சூத்திரமும் ஆகும்.
No comments:
Post a Comment