"காக்கிச் சட்டை'க்கும் உண்டு கரிசனம்: பரிதவித்த சிங்கப்பூர் பயணிக்கு உதவி

தமிழகத்தைச் சேர்ந்தவர் ராமன் (35). சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்ற இவர், குடியுரிமை பெற்றார். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் டிரெய்லர் ஓட்டும் டிரைவராக பணியாற்றி வருகிறார். மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம்.கடந்த வாரம், வியாபார விஷயமாக ராமன் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் உரிமையாளர் தமிழகம் வந்தார். அவருடன் ராமனையும் அழைத்து வந்தார். இருவரும் திருநெல்வேலி சென்றனர்.

சிங்கப்பூர் திரும்ப இருவருக்கும் கடந்த 16ம் தேதிக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. 15ம் தேதி வியாபார விஷயத்தை முடித்துக் கொண்டு, நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை திரும்ப ஏற்பாடு செய்தார். அப்போது, ராமனைக் காணவில்லை. பலமுறை முயன்றும் உரிமையாளரால் ராமனை  தொடர்பு கொள்ள முடியவில்லை.இதனால், உரிமையாளர் மட்டும் திருநெல்வேலியில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை வந்து சேர்ந்ததும், சிங்கப்பூர் தூதரகத்திற்கு சென்ற உரிமையாளர், ராமன் காணாமல் போன விஷயத்தை விரிவாக எடுத்துக் கூறினார். ராமனுடைய பாஸ்போர்ட்டையும், டிக்கெட்டையும் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்த அவர், திட்டமிட்டபடி 16ம் தேதி விமானம் ஏறி, சிங்கப்பூர் சென்று விட்டார்.

 இந்நிலையில், உரிமையாளரை தவறவிட்ட ராமன், அடித்துப் பிடித்து 16ம் தேதி இரவு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவர் வருவதற்குள்  குறிப்பிட்ட விமானம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுவிட்டது. அதிர்ச்சியடைந்த ராமன், செய்வதறியாது விமான நிலையத்தில் சுற்றி வந்தார். களைப்பு மேலிடவே விமான நிலைய பார்க்கிங் ஏரியா அருகில் உள்ள ஒரு இடத்தில், தனது பேக்கையும், செருப்பையும் வைத்துவிட்டு தூங்கி விட்டார். அவர் அசந்து தூங்கியதை பயன்படுத்தி யாரோ சிலர் அவரது பேக்கையும், செருப்பையும் திருடிச் சென்று விட்டனர். விழித்தபின், தனது பொருட்கள் திருடு போய்விட்டதை அறிந்த ராமன் அதிர்ச்சியடைந்தார்.

ஒரு விபத்தில் கால் விரல்களை இழந்திருந்ததால் செருப்பில்லாமல் நடமாட முடியாது என்ற நிலையில், அருகில் கிடந்த பிய்ந்து போன இரண்டு செருப்புகளை எடுத்து, கால்களில் மாட்டிக் கொண்டார். அவை கழன்று விழாமல் இருக்க சணலால் கட்டினார். இந்த கோலத்தோடு விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ராமனை, அங்கிருந்த சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று நினைத்து, கவனிக்காமல் விட்டு விட்டனர்.துக்கத்துடன் விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த ராமனை, எதிரில் வந்த போலீஸ் கான்ஸ்டபிள்களான அன்புசின்னப்பன், கோபால் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் கேட்டதும், பீறிட்டு வந்த அழுகையுடன் ராமன் தனது சோகக் கதையை கூறினார். அவரை தேற்றிய போலீசார், அவரிடம் 100 ரூபாய் கொடுத்து, சாப்பிட்டு வரும்படி கூறினர். பின் ராமனிடம் இருந்து பெற்ற டெலிபோன் எண் மூலம் சிங்கப்பூர் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர்.

அப்போது, ராமன் கூறியது அனைத்தும் உண்மை என்றும், அவரை எப்படியாவது சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்ப உதவ வேண்டும் என்றும் நிறுவனத்தினர் கூறினர். இதையடுத்து, உயர் அதிகாரிகள் மூலம் சிங்கப்பூர் தூதரகத்தை தொடர்பு கொண்ட போலீசார், ராமனின் பரிதாபமான நிலையை எடுத்துக் கூறினர். உடனே, தூதரக அதிகாரிகள் நேரில் வந்து ராமனிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தூதரகத்தில் இருந்து நேற்று மதியம் ராமனின் பாஸ்போர்ட், விமான டிக்கெட் ஆகியவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. அதன் மூலம் நேற்று இரவு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட "சில்க் ஏர்' விமானத்தில் ராமன் சிங்கப்பூர் சென்றார். நாடு திரும்பியதும் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்த ராமன், சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

Thanks
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=131177

No comments: