ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்


 
திண்டுக்கல் : நீர், உணவு இல்லாமல் சில நாட்கள் வாழலாம். ஆனால் மூச்சுகாற்று இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது. 3 நிமிடங்களுக்கு மேல் ஆக்சிஜன் செல்வது தடைபட்டால் மூளை செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
சுவாசம்: மூச்சுகுழல், நுரையீரல், உதரவிதானம், காற்று நுண்ணறைகள், மூச்சுகிளை சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம்.
* உதரவிதானம் சுருங்கி விரியும் போது சுவாசம் நிகழ்கிறது. உதாரவிதானம் சுருங்கி ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுகிறது. விரியும்போது கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.
* ஒரு நுரையீரலில் 30 ஆயிரம் சிறு மூச்சுகுழல்கள் உள்ளன.
* 600 மில்லியன் காற்று நுண்ணறைகள் உள்ளன.
* வல நுரையீரல் எடை 620 கிராம், இட நுரையீரல் 560 கிராம்.
* நுரையீரல்களில் தசைகள் இல்லை. மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகிறது.
* சுவாசத்தின் போது காற்று உள்சென்று வெளிவரும் அளவை ஸ்பைரோ மீட்டரால் கணக்கிடலாம்.
* நுரையீரல்களின் மொத்த காற்றின் கொள்ளளவு 4.5 லிட்டர். சுவாசத்தின் போது அரை லிட்டர் காற்று உள்ளே செல்கிறது.
*முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் செல்லும்.

பாதிப்பு: நுரையீரல் பாதிப்பால் ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும். புகை பிடித்தல், வீட்டிற்கு வெளியே, உள்ளே மாசு, நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகியன இதற்கு காரணம்.

தடுக்க வழி: புகைப்பதால் வரும் புகையில் மூன்றில் ஒரு பங்கு புகைபிடிப்போரையும், 2 பங்கு சுற்றியுள்ளோரையும் பாதிக்கிறது.நாம், நம்மை சுற்றியுள்ளோர் புகைக்காமலும் தடுப்பது அவசியம்.
* தொற்று வியாதிகளில் 80 சதவீதம் கைகளால் பரவுகிறது. எனவே கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* கார் என்ஜினை தேவையின்றி ஓட்டக்கூடாது.
* திறந்த வெளியில் பொருட்களை எரிக்க கூடாது.
* மாசு தடுப்பு குறித்த சட்டங்களை பின்பற்ற வேண்டும்.
* புகையில்லா அடுப்பை பயன்படுத்தவும், மின் உபகரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
* வீட்டை சுற்றிலும் கழிவுநீர் தேங்க விடக்கூடாது.
* சோபா, மிதியடி, மெத்தை, நாற்காலிகளில் தூசி படிய விடக்கூடாது.
* உடன் பணிபுரிபவருக்கு ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் இருந்தால் நாம் முக மூடியும், தடுப்பு உடையும் அணிவது அவசியம்.

வேண்டாம் சிகரெட்: சிகரெட்டில் உள்ள புகையிலையில் நிக்கோடின் என்ற போதை பொருள் உண்டு. ரத்தத்தில் நேரடியாக கலந்தால் மனிதரை கொல்லத்தக்கது நிகோடின். புகையிலையில் நூற்றுக்கணக்கான வேதிபொருள் உள்ளது. புகைக்கும்போது தோல், நுரையீரலின் உட்பகுதியில் இவை ஒட்டுகிறது. மூச்சுக்குழலில் ஒட்டும் நுண் கிருமிகளையும், தூசிகளையும் அகற்ற முடியாது. இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாகும். துர்நாற்றம் வீசும் தலைமுடி, கறைபடிந்த பற்கள், இதயநோய், துர்நாற்றம் வீசும் வாய், தோல் சுருக்கமும் ஏற்படும்.ஆழ்ந்த சுவாசம்: மனிதன் ஒரு நிமிடத்தில் 14-15 முறை மூச்சை இழுக்கிறான். உணர்ச்சிவசப்படும் போது இவ்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் கெடும். சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.சரியான பயிற்சியால் மூச்சு இழுப்பதை 6-4 முறை என குறைக்கலாம். நுரையீரல் எனும் இயந்திரத்தை நோயிலிருந்து காக்கலாம். நீண்ட நாள் வாழலாம்.

No comments: