அரசியல்வாதிகளை புரட்டிப்போட்ட குரு பெயர்ச்சி



சென்னை : மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவான் மற்றும் மத்திய அமைச்சராக இருந்த ராஜாவின் பதவி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பறிக்கப்பட்டது. அதேபோல், ஆந்திர மாநில முதல்வராக இருந்த ரோசய்யா பதவி விலகினார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியை பிடித்தார். இதற்கெல்லாம் சமீபத்தில் நிகழ்ந்த குரு பெயர்ச்சியும் காரணம் என ஆன்மிகவாதிகள் கூறியுள்ளனர்.

கடந்த (21ம் தேதி) ஞாயிறு அன்று குரு பெயர்ச்சி நடைபெற்றது. அப்போது, கும்ப ராசியில் இருந்த குரு பகவான் மீன ராசிக்கு மாறி, தற்போது ஆட்சி பலத்துடன் சஞ்சரித்து வருகிறார். நவக்கிரகங்களில் நல்லவரான குரு, மீன வீட்டில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும் போது நாட்டுக்கும், மக்களுக்கும் நலம் பயக்கும் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். கொடூரமான தீய செயல்கள், வன்முறைகள், பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து, கோவில்கள் கட்டுவது, பள்ளிகள் கட்டுவது, தர்ம ஸ்தாபனங்கள் கட்டுவது போன்ற நல்ல பலன்கள் அதிகரிக்கும். வேஷம் போடுவோரின் செயல்பாடுகள் ஒழிந்து நல்லவர்களின் செயல்பாடுகள் வெளியுலகத்திற்கு தெரியவரும். அதேபோல், நாடு செழிப்புடனும், வளமுடனும் இருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் தேர்தல் நடந்தால், நல்லவர்களையே மக்கள் தேர்வு செய்வர். ஊழல் பேர்வழிகளை ஓரங்கட்டுவர். மக்கள் மனதில் புரட்சிகரமான, அதே நேரத்தில் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் மாற்றங்கள் நிகழும். அந்த அடிப்படையில் பார்த்தால், பீகாரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய, சட்டம் ஒழுங்கை சீர்படுத்திய, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார். அவரது நல்லாட்சி தொடர மக்கள் ஓட்டளித்துள்ளனர்.

அதே நேரத்தில், குரு ஆதிக்கம் அதிகரிக்கும் போது, ஊழல் பேர்வழிகள் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதன் அடிப்படையில், இதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவானும், மத்திய அமைச்சராக இருந்த ராஜாவும் பதவி விலகியுள்ளனர். ஆந்திராவில் முதல்வராக ரோசய்யா பதவியேற்ற பின், தொடர்ந்து போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வந்தன. முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்களாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. குரு சாதகமான நிலைக்கு வந்தால், நாட்டில் அமைதி நிலவும் என்பதன் அடிப்படையில், ரோசய்யா தானாகவே முன்வந்து பதவி விலக, அங்கு புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்றுள்ளார். அதேபோல், கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டாலும், குரு பெயர்ச்சி அவருக்கு சாதகமாக இருந்துள்ளதால், மேலிடத் தலைவர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து பதவியில் தொடர அனுமதித்துள்ளனர்.

மக்களுக்கு நல்லது செய்ய நினைத்து அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்தவர்களுக்கு எல்லாம் இப்போது பதவி வரும் வாய்ப்பு உள்ளதால், இதுவும் முதல்வர் மாற்றங்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. வரும் மே மாதம் வரை மேலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

No comments: