முதுமையில் கூன் விழுவது ஏன்?


நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.  முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று.  முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது.  அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பழுது பாட்டால் (Degeneration of vertebrae)  வருவதாகும்.
முதுகெலும்பு பழுதுபாடு

முதலில் கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்புகள் (வம்சிகள்) பழுதுபடக் காரணம் தலையில் அதிக பளு தூக்குவது.  மேலும் கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற காரணங்களால் கழுத்து வம்சிகள் குறிப்பாக 6வது மற்றும் 7வது (C6,C7) (Cervical vertebrae)  வம்சிகள் பாதிக்கப்பட்டு, சில சமயம் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் விளைவாக கழுத்து முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இயல்பான ( normal posture) நிலையிலிருந்து மாறி கூன் விழுந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இதேபோல் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்புப் பகுதியில் உள்ள வம்சிகளில் (Lumbar vertebrae) வரும் பழுது மற்றும் தேய்மானம் வழக்கமானது.

குறிப்பாக 4,5 வது இடுப்பு வம்சிகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் சாதாரணமான ஒன்று.

பழுதுபாடுகளுக்கான பொதுவான காரணங்கள்


· அதிகப்படியான பளு தூக்குதல்

· இயந்திரங்களில் அதிக நேரம் பணியாற்றுதல்

· அதிகமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை உபயோகித்தல்.

· பொருத்தமில்லாத இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல்

· புகைப்பழக்கம்

· மது, போதைப் பழக்கம்

· மன உளைச்சலுடன் நீண்ட நேரம் பணியாற்றுதல்.

· மிகுந்த கோபம், தாழ்வு மனப்பான்மை

· விபத்தால் முதுகுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருத்தல்.

வம்சிகளின் இடைத்தட்டு பிறழ்ச்சி

பொதுவாக இடுப்பு வம்சிகளில் ஒரு வம்சிக்கும் மற்றொரு வம்சிக்கும் இடையில் இருக்கும், வம்சி இடைத்தட்டானது அடிபடும் போதும், அல்லது மேற்சொன்ன பல காரணங்களினாலும், தான் இருக்கும் இயல்பான இடத்திலிருந்து  விலகி விடுகிறது.

இதனால் மேலும் கீழும் இருக்கும் வம்சிகள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று உராய்வதால், அது நாளடைவில்  எலும்புத் (Erosion) தேய்மானம் ஏற்பட்டு முதுகெலும்பு அமைப்பு இயல்பான நிலையிலிருந்து (Posture))  விலகி சற்று முன்னோக்கி சாய்ந்து கூன் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

எலும்புகளின் துணை வளர்ச்சி

சில நேரம் இந்த வம்சிகளுக்கு அருகில் ஒரு சிறு எலும்புத்துண்டு வளர்ந்து (Osteophytes)  அது நாளடைவில் வம்சித் துளை (Inter vertebral foraman) யை சூழ்ந்து வளர்ச்சி அடைவதால் அப்பகுதியில் உள்ள நரம்புகள் அழுத்தப்பட்டு, மிகுந்த வலியை உண்டாக்குகிறது.

காச நோயினால் கூன் விழுதல்

50 விழுக்காடு, காச நோயின் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு அவை பழுதாகி அதன் இயல்பான நிலை மாறி கூன் விழுவதற்கு காரணமாகிறது.

சத்துப் பற்றாக்குறை

வயதான காலங்களில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து போதிய அளவு கிடைக்காமல் போவதால் எலும்புகள் வன்மை குன்றி, மெலிவுற்று (Osteoporosis)  அதனாலும் கூன் விழுவதற்கு காரணமாகிறது.

கூன் விழுவதை தடுக்கும் வழிகள்

கவிழ்ந்த நிலையில் செய்யும் வேலைகளைத் தவிர்க்கலாம்.

சற்று மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்கலாம்.

வயது முதிர்ந்த காலத்தில் வாதத்தை மிகுதிப்படுத்தும் உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றையும், வாதம்உண்டாக்கும் பருப்பு வகைகளையும் தவிர்க்கலாம்.

அடிக்கடி வெந்நீர் ஒற்றடமிடுதல் நல்லது.

பத்மாசனம், சித்தாசனம், சக்கராசனம், தனுராசனம் போன்ற முதுகெலும்புக்கு வன்மை உண்டாக்கும் ஆசனங்களை மேற்கொள்வது மிகவும் நல்லது.

No comments: