திருமணதோஷம் போக்கும் திருமணஞ்சேரி


சிவம் என்றாலே மங்கலம். மங்கலகரமான இறைவன் மாங்கல்ய வரம் அருளும் இடம் தான் திருமணஞ்சேரி.
மணமாகாதவர்கள் மணவாழ்வு வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு உடனேயே திருமணம் கைகூடுகிறது. அம்மையும், அப்பனும் அருள்புரியும் இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மணமாலை வேண்டி வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் பெயர் உத்வாக நாதர், இறைவியின் பெயர் கோகிலாம்பாள். தலவிருட்சமாக ஊமத்தை, வன்னி, கொன்றை மற்றும் கருஊமத்தை ஆகியவை உள்ளன.
தலவரலாறு
ஒருமுறை கைலாயத்தில் பார்வதிக்கும், சிவபெருமானுக்கும் சிறு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியை பசுவாக பிறக்குமாறு சபித்தார். சாபவிமோசனமாக ஆடுதுறையில் உன்னை இடது பாகத்தில் சேர்த்துக் கொள்வேன் என்றும் அருளினார்.    பிறகு, "திருத்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி உன்னை மகளாக அடைய தவம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் செய்யும் யாகத்தில் பெண் குழந்தையாக நீ அவதரிப்பாய். பருவ வயதை அடைந்ததும் நான் அங்கு வந்து உன்னை மணப்பேன்'' என்றும் அருளினார் சிவபெருமான்.
அதன்படி, அம்பாளும் பசு உருவத்தை எடுத்ததாகவும், திருமால் பசு மேய்ப்பவராகி சகோதரியான அம்பாளை பராமரித்ததாகவும் இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.
தொடர்ந்து, அம்பாள் குத்தாலத்தில் பரத மகரிஷி செய்த யாக குண்டத்தில் மகளாகத் தோன்றியருளினார். தேவி வளர்ந்து சிவபெருமானை மணம் செய்வதற்காக தவம் புரிந்தார்.
அவரது தவத்தை மெச்சிய இறைவன், அவர் முன்தோன்றி, தேவியின் திருக்கரத்தைப் பற்றினார். அப்போது, உமாதேவி, "சுவாமி... நான் உங்களுக்குத் தான் சொந்தம். என்றாலும், ஒரு வேண்டுகோள். என் தாய் தந்தையர் அறிய என்னை மணம் செய்து கொள்ள வேண்டும்'' என்றாள். இறைவனும் அதை ஏற்றுக் கொண்டு அவ்வாறே செய்தார்.
உமையாளின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் அம்மையாரின் விதிமுறைப்படி அவரது இல்லத்திலேயே மணம் செய்து கொண்டார். அதனால் அவர் `சொன்னவாறறிவார்' என்றும் திருநாமத்தைப் பெற்றார் என்கிறது இக்கோவில் தலவரலாறு.
திருமணம் நடைபெற வேண்டி இங்கு வரும் பக்தர்கள் 2 மாலை, 2 தேங்காய், மஞ்சள், குங்குமம், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, சர்க்கரை ஆகிவற்றை கொண்டு கல்யாணசுந்தரர்-கோகிலாம்பாளுக்கு கல்யாண அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்து விட்டு, ஒவ்வொருவருக்கும் பிரசாதமாக ஒரு மாலையையும், மற்ற பொருட்களையும் அளிக்கிறார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன் மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு பூஜை செய்து முடிக்க வேண்டும். பின்பு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் குடிக்க வேண்டும். தினமும் அவர்கள் கொடுத்த பிரசாதமான விபூதியையும், குங்குமத்தையும் அணிந்து வர வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைகூடிவிடும் என்பது ஐதீகம்.
இப்படி திருமணம் நடந்த பின், தம்பதியர் சகிதம் மீண்டும் இக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து, ஏற்கனவே இங்கு தந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும்.
அமைவிடம் : மயிலாடுதுறையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருமணஞ்சேரி அமைந்துள்ளது.

No comments: